search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு விடுதி கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் போராட்டம்
    X

    அரசு விடுதி கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் போராட்டம்

    • விடுதி காப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதி பெண் குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டியில் அரசு மாணவியர் விடுதி ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் 56 மாணவிகள் தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவிகள் அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி சுற்று வட்டார கிராமப் பகுதியில் உள்ள பட்டியல் இன ஏழை மாணவிகள் அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் தாங்கள் இருக்கும் அரசு விடுதியில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாததால், அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விவசாய கிணற்றில் இருந்து பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்து வந்து விடுதியில் குளித்து வருவதாக கூறப்படுகிறது.

    கழிப்பிட வசதி இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதி முட்புதர்கள். ஓடை போன்ற பகுதிகளுக்கு சென்று காலைக்கடனை கழித்து வரும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அவதி அடைந்த பள்ளி மாணவிகள் இன்று காலை 8.30 மணியளவில் அடிப்படை வசதிகளை எங்கள் விடுதிக்கு செய்து கோரி கூறி திடீரென விடுதி முன்பு உள்ள நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் தரையில் அமர்ந்து காலி பக்கெட்டுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மாணவிகளின் பரிதாப நிலை அறிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவிகளுக்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று விடுதி காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விடுதி மாணவிகள் கூறியதாவது:-

    அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம், இது குறித்து விடுதி காப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் காலை கடனை கழிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே உடனடியாக அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு அடிப்படை செய்திகளை செய்து தர வேண்டும் என்று முறையிட்டனர்.

    தகவல் அறிந்து வந்த விடுதி காப்பாளர் சித்ரா இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ இன்ஸ்பக்டர் லதா நேரில் சென்று மாணவியரின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக மாணவிகளுக்கு உறுதியளித்தார். இன்று காலை திடீரென பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×