search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

    • அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
    • தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கடந்த 20 ஆண்டு காலமாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக அனைத்து சுய உதவிக்குழு தூய்மைத் தொழிலாளர்களையும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் பணி வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

    இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் டவுன் தாசில்தார் விஜயலெட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும், ஒப்பந்த பத்திரத்தில் யாரிடத்திலும் கையெழுத்து வாங்கப்படமாட்டாது என்றும், இதன் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்வது என்றும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் அனைத்து சுய உதவிக்குழு தொழிலாளர்களும் மீண்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணி செய்ய முடியும். அப்போது தான் வேலை வழங்க முடியும் என்று கூறி இன்று முதல் அனைத்து சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கும் வேலை வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறி இன்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலாளர் முருகன், மோகன் ஆகியோர் தலைமையில் வேலை வழங்க கோரி இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×