search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
    • பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை உடைத்து 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை அள்ளி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 46). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மதுரை பாசிங்காபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்ற ஷர்மிளா நேற்று இரவு வீடு திரும்பி உள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கம் மதிப்பு ரூ.1.30 கோடி ஆகும். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிமெண்ட் ஆலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பற்றியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
    • சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.

    திருப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

    அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.

    கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
    • செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

    இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
    • குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.

    இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

    • விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    சேலம்:

    சேலத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற டிராக்டர் மற்றும் கார் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 52) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்த 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை கொண்டலாம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை.
    • அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா? என கண்காணிக்க உத்தரவு.

    சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் கஸ்தூரி (22) தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்த, கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வயிற்றில் 7 மாத ஆண் குழந்தை சடலமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், ஓடும் ரெயிலில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரெயில்வே துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    மேலும், அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா ? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார். அப்போது ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு சுமார் 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று தெரிய வந்தது.

    பிணமாக கிடந்த அவர்கள் அருகில் ஒரு மொபட்டும், மதுபாட்டில், தண்ணீர் இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
    • பேரன் பகவதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்தனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் 'சிக்கன் ரைஸ்' உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவர் சாப்பிட்ட உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி இருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி (விஷம்) கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தொழிலாளி சண்முகம் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பேரன் பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் சண்முகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் தொழிலாளி சண்முகம் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை பேரன் பகவதி ஒப்புக்கொண்டார்.

    காதல் விவகாரத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லியை கலந்து கொடுத்தாக பகவதி ஒப்புக்கொண்டார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் நதியாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார்.
    • காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி அன்று நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×