search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Department"

    • 2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன
    • 2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது

    2021 ஜனவரி மாதம் முதல், 2024 ஜனவரி மதம் வரை ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் மூலம், ரெயில்வே துறைக்கு ₹1229.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த தகவலை ரெயில்வே துறை வெளியிட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலமாக இந்திய ரெயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்தது. 2022-ம் ஆண்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4.6 கோடியாக அதிகரித்தது. இதன் மூலமாக வருவாய் ரூ.439.16 கோடியை எட்டியது. 2023-ம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 5.26 கொடியாகவும், இதன் மூலம் ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது.

    2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமான காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிசெய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்துசெய்வதற்கு 60 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும். அதேசமயம், ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.120 முதல் ரூ.240 வரை வசூலிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் மட்டும் தான் முழு தொகையும் திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன்கோவில் முருகப்பெருமானின் 5-வது படைவீடாக உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களிலும், கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இதனால் திருத்தணி நகரின் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருத்தணி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம் 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலமும், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட பாலமும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே கட்டப்படும் பாலப்பணியை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணி முடிந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    ரெயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தை இணைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறையினர் மேற்கொள்ளும் பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருத்தணியில் புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது.
    • நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எனக்கு ஐரேனிய புரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும், தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.

    இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பக்கவாட்டு படுக்கையால் பயணிகள் கீழ்பக்க பெர்த்தில் அமர முடியவில்லை என்ற புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் இதில் பயணிக்க முடியும்.

    சென்னை:

    நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரெயில் போக்குவரத்து வசதிக்காக 'கரீப் ரத்' என்னும் 'ஏழைகள் ரதம்' ரெயில் கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    பல்வேறு வழித்தடங்களில் 48 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இந்த ரெயில்கள் எண்ணிக்கை 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைக்கப்பட்டது.

    தற்போது சென்னை சென்ட்ரல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் வழித்தடத்தில் வாராந்திர ரெயில் உள்பட நாடு முழுவதும் 26 ஜோடி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் குறைந்த கட்டணத்தில் ஏ.சி. வசதி இருக்கும்.

    இந்நிலையில் இந்த எக்ஸ்பிரஸ்களில் இனிமேல் ஆர்.ஏ.சி. வசதியை ரத்து செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது பயணிகளுக்கு பெர்த் (படுக்கை வசதி) மட்டுமே ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்கவாட்டு படுக்கையால் பயணிகள் கீழ்பக்க பெர்த்தில் அமர முடியவில்லை என்ற புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் இதில் பயணிக்க முடியும்.

    இதுகுறித்து சென்னை கோட்ட ரெயில் பயணிகள் ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் ரகுநாதன் கூறுகையில், 'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆர்.ஏ.சி. டிக்கெட் மட்டுமின்றி பக்கவாட்டில் உள்ள நடுப்பகுதிகளையும் அகற்ற வேண்டும். சேர்-கார் வசதியுடன் கூடிய மேலும் இதுபோன்ற ரெயில்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.

    இந்த ரெயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் மட்டுமே நிற்கின்றன. மேலும் அவற்றின் பயண நேரம் மற்ற அதிவிரைவு ரெயில்களை விட குறைவாக உள்ளது.

    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வழங்கப்படும் அதே முன்னுரிமை இந்த ரெயில்களுக்கும் வழங்கப்படுகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் பயணிகளுக்கு பெட்ஷீட்களோ, உணவுகளோ வழங்கப்படவில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.
    • இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    சென்னை:

    ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பிளாட்பாரக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது.

    இந்த உயர்வினை கைவிட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.

    இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    ரெயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரெயில்வே வாரியம் குறைத்தது. அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு இயக்கப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது.

    இதன்மூலம் பெர்த்துகளின் எண்ணிக்கை 936-ல் இருந்து 780 ஆக குறைந்தது. பெர்த்துகள் குறைக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் ரெயில்களில் சீட் கிடைக்காமல் அவதிக்கு ஆளானார்கள்.

    இதற்கான கண்டனத்தை ரெயில் பயணிகள் பதிவு செய்து வந்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிட்டு உள்ளது.

    இதற்கு பதிலாக அதே ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. தற்போது ரெயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

    இதற்கு காரணம் இவற்றின் டிக்கெட் விலை தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

    உதாரணமாக நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் கட்டணம் ரூ. 225. இதுவே ஏ.சி. 3 அடுக்கு பெட்டியில் பயணிக்க ரூ. 650 ஆகும். இது 3 மடங்கு அதிகமாகும்.

    இந்த முடிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, சில ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம், அதன் பிறகே இந்த முடிவு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

    ரெயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரெயில்வேயின் வருமானத்தை உயர்த்த வாரியம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரெயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரெயில்களும் வழக்கமான பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புறநகர் மின்சார ரெயில்களில் எந்த நேரமும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டது.

    நாடு முழுவதும் ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ரெயில் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு நிறுத்தபட்டிருந்தது. தொற்று பரவல் காரணமாக ரெயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது.

    தற்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வைத் தொடர்ந்து உணவு வழங்குவதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ரெயில்


    இதுகுறித்து இந்திய ரெயில்வே உணவு, சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.) ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு விநியோக சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


    ரெயிலில் டீ விற்பனை செய்ய பயன்படுத்தும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ என அச்சிடப்பட்டிருந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #SadaptiTrain #ChowkidarTeaCups
    புது டெல்லி:

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்கள் பெயர்களுக்கு  முன்  ‘சவுகிதார்’ என இணைத்தனர்.



    இதையடுத்து கடந்த வாரம் இந்தியன் ஏர்லைன்ஸ் அனுமதி சீட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்று, தேர்தலுக்கான விளம்பரம் மேற்கொண்டதைபோல் இருந்தது. இதனை விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து அந்நிறுவனம் இந்த டிக்கெட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

    இந்நிலையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ விற்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ எனும் வாசகம் அச்சிடப்பட்டிருந்ததாக, பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவைப் பார்த்த பலர், டீ கப்கள் மூலம் பிரசாரம் செய்வதாக கருத்து தெரிவித்தனர். அதிக எதிர்ப்பு எழுந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் அந்த டீ கப்களை தடை செய்துள்ளது.

    இது குறித்து ரெயில்வே நிர்வாகம் கூறுகையில், ‘இந்த செயல் இன்று நடைபெற்றதாக தகவல் அறிந்தவுடன், அந்த கப்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. அந்த கடையின் நிர்வாகி மீதும், காண்டிராக்டர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றார். #SadaptiTrain #ChowkidarTeaCups

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்கள் இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரெயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


    இது தொடர்பாக இந்திய ரெயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம்.ராகவய்யா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் ரெயில்வே ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் 1,161 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. எனவே 80 நாள் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் 78 நாள் சம்பளத்தை போனசாக பெறுவதற்கு ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.

    ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    ×