search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே துறையினரின் தாமதத்தால் பாதியில் நிற்கும் மேம்பாலப்பணி- 3 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை
    X

    ரெயில்வே துறையினரின் தாமதத்தால் பாதியில் நிற்கும் மேம்பாலப்பணி- 3 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை

    • ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன்கோவில் முருகப்பெருமானின் 5-வது படைவீடாக உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களிலும், கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இதனால் திருத்தணி நகரின் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருத்தணி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம் 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலமும், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட பாலமும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே கட்டப்படும் பாலப்பணியை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணி முடிந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    ரெயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தை இணைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறையினர் மேற்கொள்ளும் பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருத்தணியில் புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×