search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Revenue"

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    ×