என் மலர்
நீங்கள் தேடியது "தீ விபத்து"
- தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
- கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.
மதுரை:
மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17-ந்தேதி அலுவலகத்தின் 2-வது மாடியில் மாலை நேரத்தில் புதிய எல்.ஐ.சி. பாலிசி அறிமுக கூட்டம் நடந்தது. இதில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி, உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள், ஏஜெண்டுகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் அனைவரும் சென்ற நிலையில் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணன் ஆகியோர் புறப்பட தயாரானபோது திடீரென அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் அலுவலக அறையில் ராம கிருஷ்ணன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய படி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலுவலகத்திற்குள் இருக்கையின் அடியில் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி இறந்து கிடந்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி தீ விபத்து வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கல்யாணி நம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பவத்தன்று எனது செல்போனில் தொடர்பு கொண்ட எனது தாயார் என்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..., போலீசாரை வரழையுங்கள் என்று சில நொடிகள் கதறினார். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அலுவலக அறை இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது என்று அவரது மகன் லட்சுமி நாராயணன் போலீசில் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 17-ந்தேதி இரவு நடந்த எல்.ஐ.சி. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சையில் இருந்த ராம கிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் மேலாளரை பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்தது தெரியவந்தது.
விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கல்யாணி நம்பிக்கு புகார் கிடைத்தது.
இந்த முறைகேட்டில் அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரணை நடத்தி உள்ளார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கல்யாணி நம்பியை தாக்கவும் ராம கிருஷ்ணன் முயன்றுள்ளார். ஆனாலும் முறைகேட்டு தொகையை உடனடியாக அலுவலக கணக்கில் செலுத்துமாறு கண்டிப்புடன் கல்யாணி நம்பி கூறியதாக தெரிகிறது. மேலும் தாமதமானால் முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் ராம கிருஷ்ணனுக்கு, மேலாளர் கல்யாணி நம்பி மீது கடும் ஆத்திரம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கூட்டம் முடிந்ததும் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணனிடையே முறைகேடு தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், அங்கு ஜெனரேட்டர் பயன் பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து வந்து அலுவலக அறையில் இருந்த கல்யாணி நம்பி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அலுவலக அறையும் பூட்டி உள்ளார். இதனால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த கல்யாணி நம்பி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது போன்று அனைவரும் நம்புவதற்காக அறைக்கு வெளியே மற்ற பகுதிகளிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. அங்கு கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். ஆனால் கல்யாணி நம்பி அலுவலகத்திற்குள் இருந்ததாலும் தீ பரவி கரும் புகை சூழ்ந்திருந்ததாலும், மீட்க வந்தவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தீயில் கருகி பலியாகி விட்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீ விபத்தாக வழக்குப்பதிவு செய்திருந்த முதல் தகவலறிக்கையை மாற்றி கொலை வழக்காக திலகர் திடல் போலீசார் மாற்றினர். இந்த வழக்கில் உதவி மேலாளர் ராம கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
- கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.
- 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிஸியான எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று 10:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், இன்று மதியம் வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
இந்த விபத்தில் இதுவரை 1 தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.
சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
- உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து தப்பினர்.
வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 8 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சில்ஹெட் மாவட்டம் கோவாயின்காட் உபஜிலாவில் வசிக்கும் ஆசிரியர் பிரேந்திர குமார் டே என்பவரின் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து தப்பினர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள இந்து குடும்பங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது.
- கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் நடந்த விபத்து சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடந்த துயரமான பஸ் தீ விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இது உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளது. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
- வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் வங்காளதேசத்தில் கடந்த 11-ந்தேதி இரவு இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நேற்று மாலை பாராளுமன்றத்தை கைப்பற்ற இளைஞர்கள் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் பபானிகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று அதிகாலை பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.
மேலும், பெலால் ஹொ சைனும், அவரது மற்ற 2 மகள்களான சல்மா அக்தர் (வயது 16), சாமியா அக்தர் (14) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடி உடல் அடக்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்.
மாணவர் இயக்க தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசும்போது, வங்கா ளதேசம் இருக்கும் வரை ஷெரீப் உஸ்மான் அனைத்து வங்காளதேச மக்களின் இதயங்களிலும் நிலைத்திருப்பார். நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
அவரது வார்த்தைகளும் தொலைநோக்குப் பார்வையும் தேசத்தின் நினைவில் நிலைத்திருந்து எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றார்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரங்கள், விசா மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் நகரம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், நகரவாசிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
- சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை துறைமுகத்திலிருந்து டீசல் ஏற்றிக்கொண்டு வாலாஜா ரோடு நோக்கிச் சென்ற சரக்கு ரெயில் கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரெயில் தீப்பிடித்ததும் லோகோ பைலட் உடனடியாக அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து திருவள்ளூர் ரெயில் நிலைய மாஸ்டர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (OHE) மின்சார விநியோகத்தை அணைத்தார்.

சென்னை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ரசாயன கலவையுடன் கூடிய நுரையை தெளித்து, தீயை அணைக்கும் பணி நடந்தது. 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரெயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதிவாசிகள் உதவியுடன் 26 டேங்கர் பெட்டிகளை திருவள்ளூர் மார்க்கத்திலும், ஒரு டேங்கர் மற்றும் இரண்டு என்ஜின் உள்பட நான்கு பெட்டிகளை அரக்கோணம் மார்க்கத்திலும் மீட்டனர். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பெட்டிகளில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த பகுதியில் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் திசை திருப்பப்பட்டன.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏறத்தாழ, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், 18 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து விட்டன. அதிலிருந்த பல ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. மீதமிருந்த, 32 டேங்கர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. சுமார் 12.60 லட்சம் லிட்டர் 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து நாசமானது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்த தீவிபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. மொத்தத்தில், இது ஒரு பெரிய விபத்தாக இருந்தாலும், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாலும், ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாலும் பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
இச்சம்பவத்தால், திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருவள்ளூர் கலெக்டர் எம்.பிரதாப் கூறுகையில்,
சென்னை துறைமுகத்தில் இருந்து வாலாஜா சாலை சைடிங்கிற்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தடம் புரண்டது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது.
ரெயிலின் கிட்டத்தட்ட 15 வேகன்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டது. இருப்பினும், பாதிக்கப்படாத இரண்டு வேகன்களில் இருந்து டீசல் மீட்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இரவு முழுவதும் விரைவாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றி மூன்றாவது மற்றும் நான்காவது தண்டவாளங்களை சரிசெய்ததாக அவர் கூறினார்.
- ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தாய்போ:
சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.
ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப் பட்டது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாயமான 200 தேடும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது
ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது.
- காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொயழுந்துவிட்டு எரிந்தது. இதில், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.
விபத்தில், கார் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரில் இருந்து உடல் கருகிய நிலையில் ஓட்டுனரின் உடலை மீட்டனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
சரஜெவோ:
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
- பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
சென்னை:
பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.
பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






