search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை கொலை"

    • சிகிச்சை பலனின்றி குழந்தை அர்பினா பரிதாபமாக இறந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூர்:

    பெங்களூர், பெல்லந்தூர் கசுவினஹள்ளியில் உள்ள சம்ரித்தி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கடந்த 10-ந்தேதி ஜோக் ஜூடர் மற்றும் அனிதா தம்பதியின் 3 வயது குழந்தை அர்பினா விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்போது உடல் முழுக்க பலத்த காயங்களுடன் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு பெற்றோர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு அர்பினா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அர்பினா பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து பெல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீசார் அடிக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். அதில் கார் ஒன்று குழந்தை அர்பினா மீது மோதி உள்ளது தெரியவந்தது.

    சம்பவத்தன்று குடியிருப்பின் முன்பு சந்தோஷமாக அர்பினா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு காரில் வந்த டிவைர் சுமன் குழந்தை மீது காரை ஏற்றினார். இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையின் முதுகில் காரை ஏற்றியபோது குழந்தை எழுந்திருக்க முடியாமல் வலியில் துடிதுடித்து கதறியது. அந்த குழந்தையை காப்பாற்ற முன்வராமல் காருடன் டிரைவர் தப்பி சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த விபத்து சம்பவம் குறித்து தெரியாமல் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், குழந்தையின் உடலில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில் இந்த பயங்கர காட்சி வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது தெரிந்ததால் டிரைவர் சுமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாக்டர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நித்திரவிளை அருகே காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி பிரபுஷா. இவர்களது மகன் அரிஸ்டோ பியூலாஸ் (வயது 1½).

    இவர்கள் தற்பொழுது அஞ்சுகிராமம் அருகே வசித்து வருகிறார்கள். சதாம் உசேன் அந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அரிஸ்டோ பியூலாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அரிஸ்டோ பியூலாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இருவரையும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரிஸ்டோ பியூலாஸ் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடலில் காயங்கள் உள்ளதையடுத்து அவரை கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவரை கொன்றது யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 1½ வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.
    • சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினோகவிற்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த மாதம் சினோகவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கம்பம் கிராமச்சாவடி தெருவில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி பிறந்த குழந்தை வீட்டில் இருந்து திடீரென மாயமானது. பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.

    இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் சந்தேக மரணம் என்றும், பின்னர் கொலை வழக்காகவும் மாற்றி போலீசார் விசாரித்து வந்தனர். பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் மூழ்கடித்து கொலை செய்தது யார் என்று இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் தாய் சினேகா மற்றும் பாட்டியிடம் துருவிதுருவி விசாரித்தனர்.

    இதில் குழந்தையை கொன்றது தாய் சினேகா என உறுதியானது. சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார். அதன்பிறகு சந்தேகம் வராத அளவுக்கு பாத்ரூமில் சென்று குளிப்பது போல சென்றுவிட்டார். பின்னர் குழந்தையை தேடுவது போல மற்றவர்களுடன் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.

    ஆனால் போலீசார் விசாரணையில் அவர் கொலை செய்தது உறுதியானது. எதற்காக ஆண் குழந்தையை கொலை செய்தார். இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையையே கொலை செய்துவிட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் வித்யாகவுரி (வயது26). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து வித்யாகவுரியை அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் வித்யா கவுரி தனது தந்தை வீட்டுக்கு வந்து, அவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில், வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக வித்யா கவுரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதாலும், இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகி விடும் என்பதால் குழந்தையை வளர்க்காமல், குழந்தையை கொன்று விட வித்யா கவுரி முடிவு செய்தார்.

    இதுகுறித்து தனது தந்தை முத்துசாமி(வயது62), தாய் புவனேஸ்வரி (49) ஆகியோரிடமும் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் உயிருடன் வைத்து கட்டினர்.

    பின்னர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் 3 பேரும் சாக்குபையை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர். ஆட்கள் இருக்கிறார்களா என்பதை பார்த்து விட்டு, நேராக அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றின் அருகே சென்று, குழந்தையை தூக்கி கிணற்றுக்குள் வீசி விட்டு சென்றனர்.

    இதில் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது. பின்னர் எதுவும் நடக்காதது போல 3 பேரும் அமைதியாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் ஒரு சாக்குப்பை இருந்தது.

    உடனடியாக போலீசார் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அங்கிருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தனர்.

    அப்போது பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வித்யா கவுரி என்பவர் தான் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யாகவுரியை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை முத்துசாமி, தாய் புவனேஸ்வரியையும் கைது செய்தனர்.

    பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தையின் தலை பகுதி முழுவதுமாக சேற்றுக்குள் மூழ்கி இருந்தது.
    • சுமங்கலி தனது குழந்தையை சேற்றில் மூழ்கடித்து எதற்காக கொன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பலா அருகே உள்ள பச்சிலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவரது மனைவி சுமங்கலி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. சுமங்கலிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்த சுமங்கலியை திடீரென காணவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் தேடினர். அப்போது அங்கிருந்த நெல் வயலில் சுமங்கலி நின்று கொண்டிருந்தார். அவர்கள் அந்த வயலுக்கு சென்றனர். அப்போது சுமங்கலி தனது கைக்குழந்தையை வயலில் சேற்றுக்குள் அமுக்கியபடி நின்றார்.

    குழந்தையின் தலை பகுதி முழுவதுமாக சேற்றுக்குள் மூழ்கி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுமங்கலியின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டனர். பின்பு மஞ்சேஷ்வர் தாலுகா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சேற்றில் மூழ்கடித்து கைக்குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜீஷ் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொன்ற சுமங்கலியை கைது செய்தனர்.

    சுமங்கலி தனது குழந்தையை சேற்றில் மூழ்கடித்து எதற்காக கொன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    ஆகவே குடும்ப தகராறு காரணமாக குழந்தையை சுமங்கலி கொன்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் கொன்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.
    • போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஊத்தூலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் நிர்மலா தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வந்த ரமேஷ் வெளியே சென்று மது குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எட்டி உதைத்தார்.

    இதனால் குழந்தை தொட்டிலில் இருந்து வெளியே வந்து சுவற்றில் மோதி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

    ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.

    இதனை கண்டு சிறிதும் வேதனை அடையாத ரமேஷ் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். நிர்மலா கதறி அழும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரமேசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • சித்தப்பாவின் 2-வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது. ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி, கடந்த 7 ஆண்டுக்கு முன்பு தேவலம்மா என்பவரை சித்தப்பா 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக சித்தப்பாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சித்தப்பாவுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் ஸ்ரீதேவி பிரிந்து சென்று விட்டார். தன்னுடைய பெற்றோர் வீட்டில் அவர் வசித்து வந்தார். சித்தப்பா, தேவலம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்திருந்தது. 2 பேரும் பபலா கிராமத்தில் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சித்தப்பா மற்றும் ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் மீண்டும் சேர்த்து வைத்திருந்தனர். இதையடுத்து ஒரே வீட்டில் சித்தப்பாவுடன் ஸ்ரீதேவி, தேவலம்மா, குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு (2022) ஸ்ரீதேவி கர்ப்பம் அடைந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கணவரை பிரிந்து சென்ற ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார்.

    இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந்தேதி ஸ்ரீதேவியின் 5 மாத குழந்தை திடீரென்று இறந்து விட்டது. குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வடகேரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷத்தை கலந்து கொடுத்ததால், பச்சிளம் குழந்தை இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, வடகேரா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது சித்தப்பாவின் 2-வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5 மாத குழந்தையை கொலை செய்ததை தேவலம்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில், தனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருப்பதாலும், தற்போது ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் சித்தப்பாவின் சொத்தில் அந்த பெண் குழந்தைக்கு பங்கு கொடுக்க வேண்டும். இதனால் தனக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கான சொத்து பறிபோகும் என்பதால் 5 மாத குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    விசாரணைக்கு பின்பு தேவலம்மா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து பறிபோகும் என்பதால் கணவரின் முதல் மனைவியின் 5 மாத குழந்தையை, 4 பிள்ளைகளின் தாய் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது.
    • குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

    ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் கூறும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

    ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு வக்கீல் கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    7 குழந்தைகளை கொன்ற நர்சு லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த ஆஸ்பத்திரியில் குழந்தை நல டாக்டராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார்.

    அதன்பின் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்சு லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறும் போது, 2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை எழுப்பினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் நர்சு லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

    லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்" என்றார்.

    லூசி லெட்பி, இங்கிலாந்து நாட்டின் மிக குரூரமான தொடர் சிசு கொலையாளி என்ற பெயரை பெற்றுள்ளார்.

    • பெற்ற குழந்தையை கல் மீது வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

    திருவள்ளூர்:

    ஆந்திரா மாநிலம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(25), இவரது மனைவி அஞ்சலி(23). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்பட மொத்தம் 4 குழந்தைகள் இருந்தனர்.

    சுரேஷ் தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி திருவள்ளூர் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பெரியகுப்பத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கீழ் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுரேசின் 2 மாத பெண் குழந்தை தொடர்ந்து அழுதது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குழந்தைக்கு பால் கொடுக்ககோரி மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்தது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ் தனது 2 மாத குழந்தையை அருகில் சமையல் செய்ய வைத்திருந்த கல் மீது வீசினார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை மயங்கி சரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சலி அலறி துடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான சுரேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவும் அவர் அதிக போதையில் இருந்து உள்ளார். குழந்தை தொடர்ந்து அழுததாலும், குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்து மனைவி தகராறில் ஈடுபட்டதாலும் ஆத்திரம் அடைந்த அவர் குழந்தையை கல்மீது வீசி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    பெற்ற குழந்தையை தரையில் வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கணவரை இழந்த பெண் குழிக்குள் வீசி கொலை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார்.
    • அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜீவிதா இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார். அதன் பின்னர் சல்லக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த ஜீவிதாவுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    கடந்த 2 வாரங்களாக கணவர் சிவராஜ் குழந்தையை பார்க்க வராமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் குழந்தைக்கு கழுத்து பகுதியில் வேனல் கட்டிகள் இருந்து வந்ததால் தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. ஜீவிதாவிடம் குழந்தை தாய்ப்பால் குடிக்காமலும் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவிதா தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார்.

    இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை துடித்தது. தொட்டிலில் படுத்திருந்த நிலையிலேயே குழந்தையின் கழுத்தை வெட்டியதால் தொட்டில் வேட்டியும் ரத்தமானது. ஆனால் ஜீவிதாவோ, இதனை மறைத்து குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் பீறிட்டு வருவதாக கூறி உள்ளார்.

    இதையடுத்து அவரது அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

    இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்து கட்டி பெரிதாகி அதன் மூலமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜீவிதா முதலில் தெரிவித்தார். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஜீவிதா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இது தொடர்பாக தாய் ஜீவிதா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    8 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்த நிலையிலும் 2 வாரங்களாக கணவர் பார்க்க வரவில்லை. குழந்தையும் தாய்ப்பால் குடிக்காமல் இருந்தது. இதனால் புட்டிப்பால் மட்டுமே கொடுத்து வந்தேன். இதன் காரணமாக எனக்கு மன அழுத்தம் அதிகமானது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த நான் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    இவ்வாறு ஜீவிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    • கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • சசிகலா அவரது 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, நேற்று அதிகாலையில் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார். பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சசிகலா அவரது 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிந்து நேற்று இரவு உடலை சசிகலாவின் தந்தை பழனிசாமி, அவரது தாயார் தெய்வானை மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தினமும் தகராறு ஏற்பட்டதால் தான் சசிகலா தானும், குழந்தைகளும் இறந்து விட வேண்டும் என்ற சோகமான முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே சசிகலாவின் தாய் மாமன் கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சசிகலாவின் வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்துள்ளார். அப்போது சசிகலா ஒரு சிறிய பாக்கெட் நோட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அந்த நோட்டை கைப்பற்றி நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அந்த கடிதத்தில் எனது கணவர் தனசேகரன் தினமும் குடித்து விட்டு மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டு வருகிறார். எனது கணவருடைய சகோதரி தீபாவை அருகாமையில் உள்ள சிறுநல்லிக்கோவில் பகுதியில் உள்ள பூசாரி தோட்டம் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவர், அங்கு செல்லாமல் , இங்கேயே இருந்து வருகிறார். தொடர்ந்து எனது கணவர் தனக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

    தனக்கு 20 பவுனுக்கு மேல் தங்க நகை போட்டனர். அனைத்து நகைகளையும் தனசேகரன் வாங்கிக் கொண்டார். மேலும் தனசேகரன், எனது தந்தை பழனிசாமியிடமிருந்து இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் என்னை நிம்மதியாக வைத்திருக்கவில்லை.

    தினமும் தகராறு ஏற்பட்டுள்ளதால் என்னால் நிம்மதியாக உயிர் வாழ முடியவில்லை. எனது சாவுக்கு காரணம் எனது கணவர் தனசேகரன் தான்.

    இவ்வாறு சசிகலா கண்ணீர் மல்க உருக்கமாக அதில் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சசிகலாவின் உறவினர்கள், தனசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா, நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தனசேகரனை பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • குழந்தைகளை கொன்று விட்டு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு குட்டிக்காட்டூர் கரட்டுகுணும்மேல் பகுதியைச் சேர்ந்தவர் சபீஷ் (வயது37). இவரது மனைவி ஷீனா(38). இவர்களுக்கு ஹரிகோவிந்த்(6), ஸ்ரீவர்தன்(2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சபீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மலப்புரம் முண்டுபரம்பை மைத்ரி நகரில் வடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி ஷீனா கண்ணூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஷீனாவுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் சபீசின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சபீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு அறைகளில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்களது ஒரு குழந்தை ஸ்ரீவர்தன் கட்டில் மீதும், மற்றொரு குழந்தை ஹரிகோவிந்த் தரையிலும் பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். குழந்தைகளை கொன்று விட்டு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆனால் எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×