என் மலர்
நீங்கள் தேடியது "child murder"
- நான் கருப்பாக இருக்கிறேன். உனக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக உள்ளதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
- தந்தையே தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியை சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீணா. தம்பதிக்கு திருமணமாகி முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.
தற்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியில் உள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன். உனக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக உள்ளதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த ரங்கா முரளி வீணா இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. தனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக்கூடாது என கூறியபடி அருகே இருந்த பூட்டை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
மேலும் ஆத்திரம் அடங்காத ரங்கா முரளி மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக்கொண்ட வீணா கணவரை தள்ளிவிட்டு வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்ற வீணா தனது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். வீணாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் இருந்த ரங்கா முரளியை பிடித்து கர்னூல் 4-வது டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தையே தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சரவணம்பட்டடி:
கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினசரி நடைபயிற்சி செல்வது வழக்கம். அதே போல இன்று சிலர் மலைப்பாதையில் நடை பயிற்சி சென்றனர். அப்போது முள்புதர்களுக்கு இடையே 3 வயது மதிக்க தக்க பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் குழந்தை யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது நேற்று மாலை இந்த குழந்தையுடன் ஒரு ஆண் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பெண் ஒருவர் தனது குழந்தையை காணவில்லை என அந்த பகுதிக்கு தேடி வந்தார். இதனை பார்த்த போலீசார் பெண்குழந்தை இறந்து கிடக்கும் பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். பின்னர் இறந்து கிடப்பது உங்கள் குழந்தையா? என அடையாளம் காட்டும்படி கூறினர். அப்போது அந்த பெண் இறந்து கிடப்பது தனது குழந்தைதான் என கூறி குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த தமிழ் என்பவரது மனைவி ரூபி என்பதும், இறந்து கிடந்தது இவர்களின் குழந்தை தேவிஸ்ரீ (வயது 3 ) என்பது தெரிய வந்தது.
தொடந்து போலீசார் குழந்தையின் தாய் ரூபியிடம் குழந்தை இங்கு எப்படி வந்தது? குழந்தை எப்போது காணாமல் போனது. குழந்தையை இங்கு யார் அழைத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகள் மனோபிரியா (வயது 28). இவருக்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் செவந்தபாளையத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோகிதா என்ற 11 மாத குழந்தை இருந்தது. மகேஷ் பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
மனோபிரியா தனது குழந்தையுடன் நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து வந்தார். அப்போது தன்னையும், குழந்தையையும் பெங்களூருக்கு அழைத்து செல்லுங்கள் என கணவர் மகேஷிடம் போனில் மனோபிரியா அடிக்கடி கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும் குழந்தை சற்று வளர்ந்ததும் கூட்டி செல்கிறேன் என மகேஷ் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மனோபிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம், சங்கரன்பாளையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். பின்னர் குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பெற்றோரிடம் முறையிட்டார். அப்போது அவர்கள் தங்களது மகளுக்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் மனோபிரியா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென அங்கிருந்த சிமெண்டு தண்ணீர் தொட்டிக்குள் தனது குழந்தை மோகிதாவை அமுக்கி கொலை செய்தார். அதனை தொடர்ந்து அவர் வீட்டின் அறையில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்ததும், மனோபிரியா, அவரது கைக்குழந்தை மோகிதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் கதறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், மனோபிரியா, மோகிதா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு வரும்போதே விபரீத முடிவினை தேடிக்கொள்ளும் எண்ணத்திலேயே மனோபிரியா வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனோபிரியா தற்கொலை செய்து கொண்டதால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இந்த தம்பதிக்கு ரஞ்சிதா (6) என்ற மகளும், பிரினித்தா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிச்சைபிள்ளை துபாயில் கூலி வேலைசெய்து வருகிறார். ரஞ்சிதா தேவையூர் பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக கோவிந்தம்மாள், குழந்தையை தூக்கிக்கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டார். பெரம்பலூர் சென்ற ஒரு அரசு பஸ்சில் கோவிந்தம்மாள் குழந்தையுடன் பயணம் செய்தார். பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, பஸ்சில் இருந்து கோவிந்தம்மாள் சுயநினைவின்றி கீழே இறக்கி விடப்பட்டார்.
பின்னர் அவர் தன்னை அறியாமல் நடந்து சென்றார். இதனை கண்ட அவருக்கு தெரிந்த நபர்கள் கோவிந்தம்மாளை நிறுத்தி, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தனர். இதனால் சுயநினைவுக்கு வந்த அவர், பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் திருடு போனதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகார் அளிக்க சென்ற கோவிந்தம்மாளிடம் போலீசார் புகாரினை பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த அவரது உறவினர்கள் நேற்று இரவு பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தம்மாளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் பஸ்சில் தனது அருகே அமர்ந்து பயணித்த பெண், தன் மீது மயக்க மருந்து தெளித்ததாகவும், பின்னர் தான் சுயநினைவை இழந்ததும் பணம், செல்போனை திருடிக் கொண்டு, எனது குழந்தையையும் கடத்திச்சென்று விட்டார் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதற்கிடையே ஓடும் பஸ்சில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தம்மாளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் இருந்தே விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது குழந்தை பிரினித்தாவை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். இதனால் அங்கு நின்ற அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் இது குறித்து கோவிந்தம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
தனது கணவர் பிச்சைபிள்ளை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனால் தன்னையும், குடும்பத்தையும் கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால் இரு குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக இருந்தது.
இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அப்போது தனது மூத்த மகள் ரஞ்சிதாவை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, கைக் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு பெரம்பலூர் அருகே உள்ள வாடிகண்டபுரம் பகுதிக்கு சென்றேன். அங்குள்ள ஒரு கிணத்தில் குழந்தையை வீச முடிவு செய்தேன். ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து குழந்தையை தண்ணீரில் வீசி எறிந்தேன்.
சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த குழந்தை நீரில் மூழ்கியது. அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பி பஸ்சில் பெரம்பலூருக்கு திரும்பினேன். பின்னர் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால் செய்வதறியாது திகைத்தேன். இதனால் குழந்தையை கடத்தியதாக நாடகமாட முடிவு செய்தேன். அதன்படி தன்மீது பேருந்தில் பயணித்த பெண் மயக்க மருந்து தெளித்து, குழந்தை மற்றும் உடமைகளை திருடி சென்றதாக புகார் அளித்தேன். தற்போது போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டேன் என கூறினார்.
கோவிந்தம்மாள் குழந்தையை கொன்று வீசியதாக கூறிய வாடிகண்டபுரம் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றில் பச்சிளம்குழந்தை பிரினித்தா பிணமாக தண்ணீரில் மிதந்தது. பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் குழந்தையை மீட்டனர்.
மேலும் கோவிந்தம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கொலை செய்தாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் பழைய காலனியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரிமளா (34). தம்பதிக்கு நிகேஷ் (7), நிகில் (3) என்ற 2 மகன்கள். இதில் நிகேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு இறந்தார்.
நிகேஷ் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் திருவேங்கடம் பரிமளா தவித்தனர். அவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். நேற்று இறந்து போன நிகேஷ் பிறந்த நாளாகும். இதனால் தம்பதியினர் காலையில் சுறுசுறுப்பாக இருந்தனர்.
வீட்டில் கேக் வெட்டி நிகேஷ் பிறந்த நாளை கொண்டாடினர். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இறந்து போன மகன் பிறந்த நாளை நினைவு கூறி இனிப்பு, கேக் வழங்கினர்.
நாள் முழுவதும் மகனின் நினைவுகளில் மூழ்கி கிடந்த அவர்களால் மகனை மறக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தங்களது 3 வயது மகன் நிகிஷை தூக்கில் தொங்கவிட்டு திருவேங்கடம், பரிமளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்றபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 பேரும் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.