search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband and wife arrest"

    கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய நர்ஸ் கொலையில் கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70). ஓய்வு பெற்ற நர்ஸ்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 17-ந்தேதி கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் 18-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை. கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டில் சி.சி.டி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் அந்த கேமிராவை ஆய்வு செய்தபோது கொலை நடந்த அன்று இரவு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மொபட்டில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை போட்டோவாக பிரிண்ட் எடுத்து அந்த பகுதியில் உள்ள வீடு புரோக்கர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சூலூர் பாரதி நகரை சேர்ந்த ரமேஷ்(39), அவரது மனைவி காஞ்சனாதேவி(35) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி சென்றனர். ஆனால் அவர்கள் கர்நாடகாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் இன்று சூலூர் வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனாதேவி ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த கொலை குறித்து ரமேஷ் கூறியதாவது,

    காஞ்சனாதேவி எனக்கு 2-வது மனைவி ஆவார். நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நர்ஸ் மேரி ஏஞ்சலின் வீட்டு அருகே வாடகைக்கு குடியிருந்தோம். அப்போது அவரது கணவர் விஜய் ஆனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியும். இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து சூலூருக்கே வந்து விட்டோம். எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நர்ஸ் மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க திட்டமிட்டோம். அதன்படி நாங்கள் வீடு பார்ப்பது போல் சென்றோம். மேரி ஏஞ்சலின் மட்டும் வீட்டை காண்பிக்க எங்களுடன் வந்தார். அந்த நேரத்தில் நான் அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு கீழே தள்ளிவிட்டேன். அப்போது மேரி ஏஞ்சலின் சத்தம் போட்டார்.

    எனவே நாங்கள் மாட்டி கொள்வோம் என்பதால் கழுத்தை அறுத்து மேரி ஏஞ்சலினை கொன்றேன். பின்னர் நாங்கள் மொபட்டில் சென்று விட்டோம். போலீசார் எங்களை தேடுவதை அறிந்து கர்நாடகாவுக்கு தப்பினோம். தற்போது போலீசார் பிடி விலகியதாக கருதி சூலூர் வந்தபோது சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். மேரி ஏஞ்சலினை கொன்று கொள்ளையடித்த நகைகளை சூலூரில் ஒருவரிடம் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். அவர்களது மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் போலீசார் சாதுரியமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்துள்ளனர். #tamilnews
    ×