என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DNA Test"

    • எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
    • என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில், தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

    அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.

    ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

    செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்,

    இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

    கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.

    நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதில், டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை தன்னுடையது தான் என நிரூபிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.

    மேலும், குழந்தை என்னுடையது என நிரூபணமானால் வாழ்நாள் முழுவதும் குழந்தையை பராமரித்து கொள்ள தயார் என கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,"டிஎன்ஏ பரிசோதனை செய்து குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூக்குத் தான் பிறந்தது என நிரூபிக்கத் தயார்" என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் எனக்கூறிவிட்டு இப்போது சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கைவிட்டுள்ளார்.

    மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மனவலியை கொடுக்கின்றனர்.

    குழந்தை என்ஐசியூ-வில் உள்ள நிலையில் இதுபோன்ற அறிக்கை தேவையா? மாதம்பட்டி ரங்கராஜூக்கு மனசாட்சி இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர்.
    • 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.

    கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சசிறிது நிமிடத்திலேயே அருகிலிருந்த மருத்துவ மாணவர்கள் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில் விபத்து நடந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு, 259 பேரின் உடல்கள் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 199 இந்தியர்கள், 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர். 256 உடல்கள் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மூன்று பிரிட்டிஷ் நாட்டவர்களின் உடல்களை விமானம் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்ததாலும், சேதமடைந்ததாலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டது.

    259 உடல்களில் , 253 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலமும், மீதமுள்ள ஆறு பேரின் உடல் அடையாளம் முக அம்சங்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 253 பேரில், 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.

    இதுவரை விபத்தில் உயிரிழந்த 19 பயணிகள் அல்லாதவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் டிஎன்ஏ சோதனை மூலமாகவும், ஆறு பேர் முக அடையாளம் மூலமாகவும் அடையாளம் காணப்பட்டனர்.  

    • காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர்.
    • சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.

    விமான விபத்து குறித்து குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தனஞ்சய் திவேதி கூறியதவாது:-

    அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் சிவில் மருத்துவமனை மாணவர் விடுதி, ஊழியர்கள் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.

    அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பி.ஜே. மருத்துவத்தில் டி.என்.ஏ சோதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே விமானப் பயணிகளின் குடும்பங்கள் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள், அந்த இடத்தில் தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். பயணிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பிற காயமடைந்தவர்கள் ஏதேனும் விசாரணை செய்ய வேண்டுமானால், சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த உதவிக்கும் , 6357373831 மற்றும் 6357373841 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்தார்
    • அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றின் கழிப்பறைக் குழாயிலிருந்து 6 மாத கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    இந்திரபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பின் உரிமையாளர் தேவேந்திரன் நேற்று காலையில் தண்ணீர் தேங்கியதால் குழாய் கழன்று விழுந்ததாகவும் குழாயின் உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் இந்திரபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

    தனது குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒன்பது பேர் வாடகைக்கு வசித்து வருவதாக உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார்  விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட 6 மாத கரு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அங்கு வசித்து வரும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் உள்ள டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அது யாருடன் பொருந்துகிறது என்று ஆராய உள்ளதாக இந்திரபுரம் காவல் உதவி ஆணையர் சுவதந்திர குமார் சிங் தெரிவித்தார். 

    நாகர்கோவில் அருகே கிணற்றில் எலும்புகூடாக கிடந்தது மாயமான கோவை சேர்ந்த பெண்ணா எனபது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.

    இவருக்கு பார்வதிபுரம் கிறிஸ்டோபர் நகரில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் ஒரு கிணறு இருக்கிறது. இங்கு வீடு கட்ட திட்டமிட்டு அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றது.

    இதற்காக தென்னந்தோப்பில் உள்ள கிணற்றை தூர்வாரும் வேலைகள் நடந்தது. இதில் தொழிலாளர்கள் கிணற்றை தூர்வாரியபோது கிணற்றுக்குள் ஒரு எலும்புக்கூடு கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்ததும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது பற்றிய தகவல் ஜெயக்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இதுபற்றி இரணியல் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கிணற்றில் கிடந்த எலும்புக்கூடு வெளியே எடுக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுப்பணி நடந்தது. அந்த எலும்புக்கூடுடன் ஒரு கொலுசும், பெண்கள் அணியும் ஆடையின் ஒரு பகுதியும் இருந்தது. இதனால் கிணற்றில் எலும்புக்கூடாக கிடந்தது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    டி.என்.ஏ. பரிசோதனை செய்வதன் மூலமே இதை முடிவு செய்யமுடியும் என்பதால் அந்த எலும்புக் கூட்டை டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது அந்த எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. அந்த பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் கோவை மாவட்டம் கல்லம்மாபாளை பகுதியை சேர்ந்த தேவசகாயம் என்பவரின் மகள் லிசி அடைக்கலமேரி (வயது 25) என்ற பெண் 2012-ம் ஆண்டு தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை, மாயமாகிவிட்டார். இதுபற்றி அவரது தாயார் ஆசாரிப்பள்ளம் போலீசில் 21.7.2012-ல் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் மாயமான லிசியை கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்திவந்த நிலையில்தான் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே கிணற்றில் கிடந்தது லிசியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து லிசியின் தாயாரை இங்கு வரவழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். எலும்புக் கூடு கிடைத்தது பற்றிய தகவல் லிசியின் தாயாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்தபிறகு அவரிடம் எலும்புக்கூடு, கொலுசு, ஆடை ஆகியவற்றை காண்பித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaa #Amrutha #DNAtest
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.



    1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

    ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

    இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.

    ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த  நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Jayalalithaa #Amrutha #DNAtest 
    சென்னையில் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார்? என்பதை கண்டறிவதற்காக கைது செய்யப்பட்ட தம்பதிக்கும், குழந்தைக்கும் நேற்று டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் சோமன். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவரது மகன் யோகேஷ்குமாருக்கும், பத்மினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பத்மினி தான் கர்ப்பமானதாகவும், பெண் குழந்தையை பெற்றது போலவும் ஒரு குழந்தையோடு கணவன் வீட்டிற்கு வந்தார்.

    போலீஸ் அதிகாரி சோமனுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டு மருமகள் பத்மினி கர்ப்பமானது போல அடிக்கடி சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் விசாரித்தார். அப்போது பத்மினி கர்ப்பமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் குழந்தை பெற்றதாக பத்மினி கூறியது பொய்யாக இருக்கலாம் என்று கருதி தனது மகன் யோகேஷ்குமார் மூலம் பத்மினி மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பத்மினி தான் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றும், வட மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவரிடம் அந்த பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும் தெரிவித்தார். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்டதால், அதில் கைதாகாமல் இருக்க பத்மினி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். துணை கமிஷனர் மல்லிகா, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் பத்மினி வைத்திருந்த பெண் குழந்தை கடத்தல் குழந்தை என்று கண்டறியப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.2 லட்சம் விலைகொடுத்து குழந்தையை பத்மினி வாங்கியதாகவும் தெரிகிறது.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரிக்கி வர்மா (வயது 40), அவரது மனைவி கோமல் வர்மா (35), அஜய்சர்மா (40), அவரது மனைவி ஜெயா சர்மா (35) ஆகியோர் கடந்த 7-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது. சம்பந்தப்பட்ட குழந்தையை அஜய்சர்மா, ஜெயாசர்மா ஆகியோரிடமிருந்து தத்தெடுத்ததாக பத்மினி போலீசார் விசாரணையில் தெரிவித்திருந்தார். அதுதொடர்பான சான்றிதழ்களையும் பத்மினி போலீசாரிடம் கொடுத்திருந்தார். எனவே சம்பந்தப்பட்ட குழந்தை கடத்தல் குழந்தையா? அல்லது அஜய்சர்மா, ஜெயாசர்மா தம்பதியின் குழந்தையா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய போலீசார் முடிவு செய்தனர்.

    இதனால் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய போலீசார் கோர்ட்டு அனுமதி பெற்றனர். நேற்று புழல் சிறையில் இருந்து அஜய்சர்மாவும், அவரது மனைவி ஜெயாசர்மாவும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது.

    சம்பந்தப்பட்ட குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

    ×