என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்ஏ பரிசோதனை"

    • 1953 இல் 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரியை கண்டறியப்பட்டது.
    • மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்பவரால் 1869 ஆம் ஆண்டு டிஎன்ஏ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் டிஎன்ஏவின் கட்டமைப்பு 1953 ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 'டபுள் ஹெலிக்ஸ்' டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கின் கிழக்கு நார்த்போர்ட்டில் அவர் உயிர் பிரிந்தது.

    அவரது மகன் டங்கன் வாட்சன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார் என டங்கன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ஏப்ரல் 6, 1928 அன்று சிகாகோவில் பிறந்த வாட்சன், தனது 24 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரான்சிஸ் கிரிக்குடன் டிஎன்ஏவின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினார்.

    1953 இல் அவர்கள் முன்மொழிந்த 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரி, உயிரினங்களில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியது, இது அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.

    இந்தக் கண்டுபிடிப்புக்காக வாட்சன், கிரிக் மற்றும் மற்றொரு விஞ்ஞானி மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    மரபியல், தடயவியல் மற்றும் பரம்பரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக அமைந்தது. 

    • குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார்.
    • ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது.

    மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில், மைனர் குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், 2013 இல் பிரிந்தபோது, மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரினார். ஆனால், விவாகரத்து மனுவில் அவர் குழந்தையின் தந்தை இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. இந்த நிலையில், குழந்தைக்கு DNA சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

    மைனர் குழந்தைக்கு DNA சோதனைக்கு உத்தரவிட்ட குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி ஆர்.எம். ஜோஷி உத்தரவிட்டார்.

    இத்தகைய மரபணு பரிசோதனைகள் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

    கள்ளத்தொடர்பு காரணமாக விவாகரத்து கோர ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதாலேயே, DNA சோதனைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த அவர், மனைவி மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு இருந்தால், அதை DNA சோதனை மூலம் அல்லாமல், வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கலாம் என்று தெரிவித்தார்.

    குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார். ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார். 

    • முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    123-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர்.

    நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கிய போலீசார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 119 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து அதனைக்கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேங்கைவயல், முத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்தனர். 8 பேர் வரவில்லை. தங்களை குற்றவாளிகளாக்க மாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க திட்டமிட்டு, அதில் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர், இறையூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மேலமுத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று முதலில் 8 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் தாமதமாக ரத்த மாதிரி அளிக்க முன்வந்தனர். அதேபோல் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேங்கைவயல் கிராமத்துக்கு வந்து களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார். மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    விரைவில் இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்தார்
    • அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றின் கழிப்பறைக் குழாயிலிருந்து 6 மாத கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    இந்திரபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பின் உரிமையாளர் தேவேந்திரன் நேற்று காலையில் தண்ணீர் தேங்கியதால் குழாய் கழன்று விழுந்ததாகவும் குழாயின் உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் இந்திரபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

    தனது குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒன்பது பேர் வாடகைக்கு வசித்து வருவதாக உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார்  விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட 6 மாத கரு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அங்கு வசித்து வரும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் உள்ள டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அது யாருடன் பொருந்துகிறது என்று ஆராய உள்ளதாக இந்திரபுரம் காவல் உதவி ஆணையர் சுவதந்திர குமார் சிங் தெரிவித்தார். 

    ×