search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DNA testing"

    • முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    123-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர்.

    நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கிய போலீசார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 119 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து அதனைக்கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேங்கைவயல், முத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்தனர். 8 பேர் வரவில்லை. தங்களை குற்றவாளிகளாக்க மாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க திட்டமிட்டு, அதில் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர், இறையூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மேலமுத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று முதலில் 8 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் தாமதமாக ரத்த மாதிரி அளிக்க முன்வந்தனர். அதேபோல் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேங்கைவயல் கிராமத்துக்கு வந்து களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார். மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    விரைவில் இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×