search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H Raja"

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், தேசிய செயலாளரான எச்.ராஜாவும், சி.பி.ராதா கிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    2014 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் தற்போது 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் பின்தங்கி இருக்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை விட 20 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி இருக்கிறார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார்.

    கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜனிடமும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடமும் பின்தங்கி இருக்கிறார்கள்.

    பள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    கொடைக்கானல்:

    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.

    அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.


    அவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.

    ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். #HRaja
    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பாக அந்த சமுதாய பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் சில தீய சக்திகள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றது.

    ஒரு குறிப்பிட்ட நலிந்த சமுதாயத்துக்கு எதிராக சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் பதிவில் மிகவும் அவதூறாகவும் கொச்சையாகவும் பேசிய அந்த சமூக விரோதிகள் மீது காவல் துறை மிகக்கடுமையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.

    48 மணி நேரம் கடந்த பின்பும் சம்பந்தப்பட்ட, இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட அந்த சமூக விரோதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்படாதது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

    இந்தக் கீழ்த்தரமான ஆடியோவால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சமுதாய மக்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்பது தற்போது மிக முக்கியமான ஒன்று.

    இந்த சமுதாய மக்களின் அமைதியான சட்டபூர்வமான போராட்டங்களுக்கு நம்முடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. அனைவரும் இந்த சமூக விரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து, நம் மக்கள் அறவழியில் போராட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ரீதியான காயத்திற்கு மருந்திடும் வகையில் இந்த சமூக விரோதிகள் மீது விரைவான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சமூக விரோதிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #HRaja

    எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார். #Premalatha #hraja #dmdk






    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார். அப்போது அவர் பெரியகடை வீதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிற்கு ஆதரவு கேட்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும். அதுபோல் பதவி வரும் போது, பணிவும் வேண்டும், துணிவும் வேண்டும். எச்.ராஜா, கேப்டன் விஜயகாந்தை போல் தைரியமானவர். அவர் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். தைரியமாக பேசுபவர்களிடம் உண்மை இருக்கும்.

    இந்தக் கூட்டணியில் எந்த குறையும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது, மேலும் சவாலை எதிர்க்கக் கூடிய வல்லமையும் இந்த கூட்டணிக்கு உள்ளது. பதவியோடும், பணிவோடும், தொகுதியையும், அதன் மக்களையும் காப்பாற்ற கூடிய நல்ல வல்லமையானவருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். இந்த தொகுதியில் எச்.ராஜாவை சரித்திர வெற்றியாளராக ஆக்க வேண்டும்.

    உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த முறை பிரேமலதா கூட்டத்தினரை பார்த்து, எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிப்பீர்களா, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா, சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தினர் ஆதரவாக பதில் கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். ஒன்றிய செயலாளர் வாசு, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், தே.மு.தி.க. தனசேகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Premalatha #hraja #dmdk
    தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார். #bjp #tamilisai #ponradhakrishnan
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 184 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்றிரவு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார்.

    ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் எச். ராஜாவும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள். #bjp #tamilisai #ponradhakrishnan
    பாராளுமன்ற தேர்தல் களைகட்டி உள்ள நிலையில் ஈரோடு உள்பட 4 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். #AmitShah #bjp #parliamentelection

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தல் களைகட்டி உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொங்க மண்டலத்தை மையப்படுத்தி பாரதிய ஜனதா காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    இதை தொடர்ந்து பா. ஜனதாவின் தலைவர் அமித்ஷா கொங்கு மண்டலம் வரதிட்டமிட்டார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமித்ஷா சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டுக்கு புறப்பட்டார். ஈரோடு சித்தோடு அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.

    அங்கு அமித்ஷா கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நெசவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது நெசவாளர்களின் பிரச்சினை அவர்களின் முக்கிய கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    அமித்ஷாவிடம் நெசவாளர் பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை கேட்டு கொண்ட அமித்ஷா பரிசீலிப்பதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 4 பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, வெற்றிக்கான வியூகங்களை பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். #AmitShah #bjp #parliamentelection

    பிரதமர் மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். #BJP #PMModi #HRaja
    பழனி:

    பழனியில் பா.ஜனதா சார்பில் பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு முழு முயற்சி எடுத்தது. ஆனால் தமிழக அரசு இத்திட்டத்தை தாமதப்படுத்தி வந்தது. தற்போது மத்திய அரசு மீண்டும் முழு முயற்சி எடுத்து பிரதமர் மோடி மதுரையில் இதற்கான திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.


    தமிழக கோவில்களில் பக்தர்களின் நலனை கருதி அன்னதான திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பழனி முருகன் கோவிலை பஞ்சாமிர்தம் விற்கும் வணிக மையமாக மாற்றியுள்ளனர்.

    பசுஞ்சாணத்தை பயன்படுத்தி விபூதி தயாரிப்பதில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த அறுகதையும் கிடையாது. வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PMModi #HRaja
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். #BJP #HRaja #SC #SterlitePlant
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருவாரூர் தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பயம் ஏற்பட்டு இருப்பது தெளிவாகி உள்ளது.

    கலைஞருக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி கூட தெரிவிக்கவில்லை. தி.மு.க. தற்போது சுய சிந்தனையோடு செயல்படவில்லை. உடல்நலம் குன்றி இருந்த கலைஞரை சோனியா காந்தி சந்திக்க வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து கலைஞர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார்.

    சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாரபட்சமாக நடந்து வருகிறார். கேரளாவில் தேவாலயம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊடகங்களில் விவாதம் செய்பவர்கள் அறிவின்மையமாக பேசுகின்றனர்.

    தற்போது ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழக அறநிலையத்துறையில் ஊழல் மலிந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அந்த துறையால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

    சிலை கடத்தல் வழக்கில் கடும் முயற்சியுடன் செயல்பட்டு வரும் பொன் மாணிக்கவேலுக்கு வேண்டிய உதவிகளை இந்த அரசு செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ. 1500 கோடி முன் பணம் கேட்டது. மத்திய அரசு ரூ. 8 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளது.


    ஜெயலலிதா மரண விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா வெற்றி பெறும். சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் வேறுபாடின்றி மக்கள் வாக்களிப்பார்கள்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. மக்களை பாதிக்கும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்துக்கு வராது.

    மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க.-காங்கிரஸ். தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். ஆனால் தமிழகத்தை பாதுகாப்பது மத்திய அரசுதான். மக்களுக்கு இது தெரியும்.

    மின்சாரத்தை பூமிக்கடியில் கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார்.  #BJP #HRaja  #SC #SterlitePlant
    பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல் துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja #PonManickavel
    கோவை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராணுவ வீரர்கள் 40 ஆண்டுகளாக போராடி வந்த ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்த்து வைத்தது. நல்ல அரசாங்கம் என்று சொன்னால் நாட்டின் மரியாதை உலகளவில் உயர்ந்து இருக்க வேண்டும். தற்போது இந்தியாவுக்கு உலகளவில் மரியாதை உள்ளது. உலகளவில் இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக வளர்ந்து வருகிறது.

    சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்றால், கைவிடப்பட்ட கோவில்களில் சிலை கடத்தல் நடைபெறுவதை ஆதாரங்களுடன் நான் சொல்லிவருகிறேன். செவி வழி செய்தியை சொல்பவன் நான் அல்ல. 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம்.

    கோவை மாதம்பட்டியில் ஒரு கோவிலை புனரமைக்க 2015-ம் ஆண்டில் இருந்தே அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடுவதே சிலைகளை திருடுவதற்குத்தான். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி ஊரில் உள்ள நடராஜர், சிவகாமி சிலைகள் நியூயார்க்கில் உள்ளது. அங்கு எப்படி சென்றது?

    சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், பெருமாள் கோவிலில் உள்ள 8 சிலைகள் 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல் பூட்டப்பட்ட நிலையில் 2007-ல் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை திறந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கு அடுத்து ஒரு வாரத்தில் கொள்ளை நடந்து 18 சிலைகள் திருடப்பட்டது. அது தான் நியூயார்க் போய் உள்ளது.

    அப்போது தான் ஜெர்மனியில் சுபாஷ் கபூர், இங்கு தீனதயாளன், சஞ்சீவி, அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிலைகளை போலியாக செய்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினால் மற்ற துறையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம்.

    கவிதா, திருமகள் ஆகியோர் சிலை திருடர்கள். ஆதாரங்களோடு நடவடிக்கை எடுத்ததால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொன். மாணிக்கவேல் ஒன்றரை ஆண்டுகளில் 140 சிலைகளை மீட்டவர். மக்களிடம் கருத்து கணிப்பு வைத்தால் பொன். மாணிக்கவேல் வெற்றி பெறுவார்.


    பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல் துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். பொன். மாணிக்க வேல் மீது குற்றச்சாட்டு சொல்பவர்கள் அமைச்சர் என்றாலும் அவரின் நேர்மை மக்களிடையே கேள்விக்கு உட்படுத்தப்படும்.

    சிலைகளை மீட்பவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். சந்தேகப்பட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #PonManickavel
    தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவில்லை என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். #BJP #HRaja
    கோவை:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவை நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான்.

    ஆனால் மோடியை ‘சாடிஸ்ட்’ என பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர் என்கிறேன். தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ் இருக்கிறது.

    பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு. அதில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கும் பிரிவினை தீய சக்திகளுக்கு தி.மு.கதான் அரவணைப்பு. தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவும் வி.சி.கவும் இல்லை என்று துரைமுருகன் கூறியது போலவே அவர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் 8 -வது வரிசைக்கு தள்ளிவிட்டனர். துரைமுருகன் தான் தி.மு.கவை வழி நடத்துகிறார்.


    இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பதிலளித்தார். உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லை என்பதால் தானே உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு, ‘‘தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை’’. என்று பதிலளித்தார்.

    4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்த கேள்விக்கு ‘மக்கள் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள்.

    நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே ஏற்கவில்லை. அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை. கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே!.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #BJP #HRaja
    மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர் என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். #BJP #HRaja #DMK #MKStalin
    கோவை:

    பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மத்திய மந்திரி சபை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள், 60 செவிலியர் இடம், ஆயிரம் உள்நோயாளிகள், 750 படுக்கை வசதிகள், 15 சிறப்பு பிரிவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    இந்த மருத்துவமனை 100 சதவீதம் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பற்றி பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேச என்ன அவசியம் இருக்கிறது.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாமல் 25 ஆயிரம் தமிழ் விதவைகள் உருவாக காரணமான சோனியா காந்தியை இந்த விழாவுக்கு அழைத்தது மிகப்பெரிய தவறு.


    கடந்த 2 வருடங்களாக மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக எதையோ பேசி வருகிறார். அவர் முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார்.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை கேட்க தயங்க கூடாது.

    இந்து சமய அறநிலையத்துறையில் திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். ஏற்கனவே கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின்னர் தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக பாடத்திட்டத்தில் தமிழர் தொன்மையை அழித்து வருகிறார்கள். தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடர் இயக்கத்தினர் தமிழை அழிக்கிறார்கள். தொன்மை வாய்ந்த பாட திட்டத்தை மாற்றி உள்ளனர்.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சேர, சோழ, பாண்டியர் பற்றி பாட திட்டத்தில் சிறிது கூட இல்லை. முகலாயர் படையெடுப்புக்கு பின்னர் உள்ள செய்திகள் தான் பாட புத்தகத்தில் உள்ளது.

    இந்தியா என் தாய் நாடு என பாட புத்தகத்தில் இருந்தது. அதனை இந்தியா என் நாடு என மாற்றி விட்டனர். தாய் நாடு என்பதை எடுத்தது தேச துரோகம்.

    இந்து அறநிலையத்துறை வெட்கக்கேடான நிலையில் உள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் மூடப்பட்டு உள்ளது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்ப்பது என்பது இளைஞர்களுக்கு விரோதமான செயல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் சிம்பு பாடிய பெரியார் குத்து என்ற பாடலில் உங்களை விமர்சனம் செய்து உள்ளதாக கூறப்படுகிறதே ? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எச். ராஜா பதில் அளிக்கும் போது, என்னை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேச பக்தி, இந்து மதத்துக்கு எதிராக பேசினால் நான் பதில் சொல்வேன். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் சொல்லாததால் தான் மு.க. ஸ்டாலின் பிரதமர் பற்றி அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எச். ராஜா பதில் அளிக்கும் போது, கஜா புயல் சமயத்தில் பிரதமர் மோடி டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து இருந்தார். தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

    மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், நான் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம்.

    மத்திய குழுவும் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புயல் பாதித்த பகுதியில் 6300 கோடி அளவில் வீடு கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக அரசிடம் உள்ள ரூ. 1,217 கோடி பேரிடர் நிதியை கஜா புயல் பாதிப்புக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

    தமிழக அரசு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அறிக்கை வந்த பின்னர் நிதி வழங்கப்படும்.

    5 மாநில தேர்தல் முடிவால் எந்த பிரச்சனையும் இல்லை. இது சட்டமன்ற தேர்தல். பாராளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.  #BJP #HRaja #DMK #MKStalin
    வில்லியனூரில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஒன்று திரண்டனர்.

    அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். இதையடுத்து அவர்களை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், தொகுதி செயலாளர் தமிழ்வளவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், எழில்மாறன், வாகையரசு உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    உப்பளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சாலை அருகே சாலை மறியல் நடந்தது. தொகுதி செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் திருக்குமரன், ஜெயசெல்வி, செழியன், கலைச்செல்வன், சந்துரு, நீலமேகம், குமார், வினோத், யுவராஜ், ரமேஷ், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ×