search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர்- எச்.ராஜா குற்றச்சாட்டு
    X

    முக ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர்- எச்.ராஜா குற்றச்சாட்டு

    மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர் என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். #BJP #HRaja #DMK #MKStalin
    கோவை:

    பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மத்திய மந்திரி சபை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள், 60 செவிலியர் இடம், ஆயிரம் உள்நோயாளிகள், 750 படுக்கை வசதிகள், 15 சிறப்பு பிரிவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    இந்த மருத்துவமனை 100 சதவீதம் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பற்றி பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேச என்ன அவசியம் இருக்கிறது.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாமல் 25 ஆயிரம் தமிழ் விதவைகள் உருவாக காரணமான சோனியா காந்தியை இந்த விழாவுக்கு அழைத்தது மிகப்பெரிய தவறு.


    கடந்த 2 வருடங்களாக மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக எதையோ பேசி வருகிறார். அவர் முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார்.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை கேட்க தயங்க கூடாது.

    இந்து சமய அறநிலையத்துறையில் திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். ஏற்கனவே கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின்னர் தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக பாடத்திட்டத்தில் தமிழர் தொன்மையை அழித்து வருகிறார்கள். தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடர் இயக்கத்தினர் தமிழை அழிக்கிறார்கள். தொன்மை வாய்ந்த பாட திட்டத்தை மாற்றி உள்ளனர்.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சேர, சோழ, பாண்டியர் பற்றி பாட திட்டத்தில் சிறிது கூட இல்லை. முகலாயர் படையெடுப்புக்கு பின்னர் உள்ள செய்திகள் தான் பாட புத்தகத்தில் உள்ளது.

    இந்தியா என் தாய் நாடு என பாட புத்தகத்தில் இருந்தது. அதனை இந்தியா என் நாடு என மாற்றி விட்டனர். தாய் நாடு என்பதை எடுத்தது தேச துரோகம்.

    இந்து அறநிலையத்துறை வெட்கக்கேடான நிலையில் உள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் மூடப்பட்டு உள்ளது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்ப்பது என்பது இளைஞர்களுக்கு விரோதமான செயல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் சிம்பு பாடிய பெரியார் குத்து என்ற பாடலில் உங்களை விமர்சனம் செய்து உள்ளதாக கூறப்படுகிறதே ? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எச். ராஜா பதில் அளிக்கும் போது, என்னை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேச பக்தி, இந்து மதத்துக்கு எதிராக பேசினால் நான் பதில் சொல்வேன். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் சொல்லாததால் தான் மு.க. ஸ்டாலின் பிரதமர் பற்றி அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எச். ராஜா பதில் அளிக்கும் போது, கஜா புயல் சமயத்தில் பிரதமர் மோடி டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து இருந்தார். தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

    மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், நான் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம்.

    மத்திய குழுவும் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புயல் பாதித்த பகுதியில் 6300 கோடி அளவில் வீடு கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக அரசிடம் உள்ள ரூ. 1,217 கோடி பேரிடர் நிதியை கஜா புயல் பாதிப்புக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

    தமிழக அரசு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அறிக்கை வந்த பின்னர் நிதி வழங்கப்படும்.

    5 மாநில தேர்தல் முடிவால் எந்த பிரச்சனையும் இல்லை. இது சட்டமன்ற தேர்தல். பாராளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.  #BJP #HRaja #DMK #MKStalin
    Next Story
    ×