search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drugs"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
    • மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு டெல்லியில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் கடந்த மாதம் 15-ந்தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தி.மு.க. அயலக அணியிலும் பொறுப்பில் இருந்தார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்காக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரை தேடினார்கள்.

    ஆனால் போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினார்கள். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளையும் கைப்பற்றினார்கள். அப்போது அவர் 3 செல்போன்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த போன்களுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவ்வப்போது போனை ஆன் செய்து ஒரு சிலருடன் பேசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை தென் மாநிலங்களில் தேடினார்கள். மேலும் மற்றொரு தனிப்படையினர் அவரை வடமாநிலங்களில் தேடினார்கள். அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்து உள்ளார்.

    எனவே அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டினார்கள். இதையடுத்து ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாத வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடி இறுகியது.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அந்த வீட்டை டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். பின்னர் நள்ளிரவில் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவரை டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக இன்று பிற்பகலில் டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் விரிவான தகவல்களை வெளியிட உள்ளனர். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு யார் யார் பின்னணியில் இருந்தனர் என்பது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தினவிழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டின் பேரில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 76 கிலோ கேக் வெட்டி மகளிர் அணியினருக்கு வழங்கினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது. இது பற்றி நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். பள்ளி கல்லூரிகளின் அருகில் போதை பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும் அதனை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தடுக்க தவறிவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 15-ந் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருட்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த போதை பொருள் கடத்தலில் தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அவர் மீது ஏற்கனவே 26 வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் குடும்பத்துடனும், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் அவர் நெருங்கி பழகியிருப்பது வேதனையானது.

    இந்த விவகாரம் பற்றியும் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றியும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அமைப்பு செயலாளரை வைத்து பேச வைத்துள்ளார்கள். இது ஏற்புடையதல்ல.

    தமிழகத்தில் தொடர்ச்சியாக போதை பொருட்கள் பிடிபடுகிறது. உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களிடம் இருந்து 500 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இல்லையா? சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய முதலமைச்சர் 'பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்றதாக 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒத்துக் கொண்டார். அதில் 145 பேர் மட்டுமே கைதாகி இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் தான் இப்போது பிடிபட்டு கொண்டிருக்கிறார்களா? தமிழக காவல் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாகி விட்டது.


    இந்த ஆட்சியில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் நடக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் சீரழிகிறார்கள். கடலோர காவல் படையினரும் போதை பொருட்களை பிடிக்கிறார்கள். நாமக்கல்லிலும் 10 ஆயிரம் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. டெல்லியில் மத்திய அதிகாரிகள் நடவடிக்கைக்கு பிறகுதான் இங்கு போதை பொருட்கள் பிடிபடுகிறது.

    எனவே தமிழக அரசு போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் விரைவில் கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

    மேலும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.

    தமிழக அரசால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத நிலையில்தான் 'நீங்கள் நலமா?' என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    (கூட்டத்தினரை பார்த்து நீங்கள் நலமா இருக்கிறீர்களா என்று கேட்டார்).

    இந்த ஆட்சியில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நாட்டு மக்களை பார்த்து நலமா? என்று எப்படி கேட்க முடியும்.

    தமிழக முதல்வர் செயல்படாத பொம்மை முதலமைச்சராக உள்ளார். போதை பொருள் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    * பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

    * கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ள நிலையில் டி.ஜி.பி.கையில் விருது பெறுகிறார்.

    * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி தொடர்பில் உள்ளார்.

    * செய்தி வெளிவந்த பிறகே ஜாபர் சாதிக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    * ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

    * தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீசை அவரது தாய் படம்பிடித்து கிழித்து உள்ளார்.
    • வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பண பரிவர்த்தனை குறித்து ஏற்கனவே கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாக தெரிவித்தார்.

    சென்னை:

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடிமதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும், தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதிஉதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜாபர் சாதிக் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு சென்னை, கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரிந்தது.

    இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விபரங்களை ஏற்கனவே டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பண பரிவர்த்தனை குறித்து ஏற்கனவே கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாக தெரிவித்தார்.

    இதல் ஜாபர் சாதிக், மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்க்கவும், ஆயுதப்பயிற்சி அளிக்கவும் நிதி உதவி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

    ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்த போது வெவ்வேறு பெயர்களில் 3-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்து உள்ளது.

    இதற்கிடையே சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீசை அவரது தாய் படம்பிடித்து கிழித்து உள்ளார். அவர் எதற்காக படம் பிடித்தார்? அந்த படம் ஜாபர் சாதிக்கிற்கு அனுப்பட்டதா? மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் தாயிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

    கோவை:

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருள் இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன.

    இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஜாபர் சாதிக் உள்பட 4 பேர் சின்தடிக் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர்.

    அப்போது 20 கிலோவுக்காக கைது செய்யப்பட்ட அவர் 11 ஆண்டுகள் கழித்து 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருளை கையாளும் வகையில் விஸ்வரூபமாக உயர்ந்துள்ளார்.

    ஒருமுறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டால் போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவரை போலீசாரும் தமிழக அரசும் கண்காணிக்கவில்லை. இதில் போலீசார் தோற்றுவிட்டனர்.

    ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

    ஜாபர் சாதிக் எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார். முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் என எல்லோருடனும் உள்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இதனை ஒரு சமுதாய இயக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும்.

    பா.ஜனதா இதற்காக ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது. வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் தென்காசியில் போதைப்பொருளுக்கு எதிரான நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

    நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது கட்சிக்கு சின்னம் வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் விண்ணப்பிக்க தவறிவிட்டார்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அவருக்கு சின்னம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னம் கிடைக்கவில்லை. இதற்கும் எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சீமான் முதலில் மோடியை திட்டினார். தற்போது அண்ணாமலையை திட்ட தொடங்கி உள்ளார்.

    புதுச்சேரியில் பா.ஜனதா சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா சுவரொட்டிகளில் மற்ற தலைவர்களின் படங்கள் இருக்காது.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் எனக்கு பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
    • அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை (திங்கட் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

    இதன்படி சென்னையில் 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பால கங்கா, வி.என்.ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.

    இதில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
    • போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    ஆவடி:

    ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

    பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:

    உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.

    போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.

    கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...

    கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..

    போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    • 2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 71.89 கிலோ கோகைன் கைப்பற்றப்பட்டது.
    • இதில் 39.1 கிலோ கோகைன் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் அமீ யாக்னிக் ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக சர்வேயில் கிடைத்த விவரங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:

    சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் அதிகாரிகள் 93,691 கிலோ போதைப் பொருள், 2,229 லிட்டர் திரவ மருந்துகள் மற்றும் 93,763 மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்தியாவில் 17,35,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

    குஜராத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 27,842.639 கிலோ அபின் அடிப்படையிலான மருந்துகள், 59,365.983 கிலோ கஞ்சா அடிப்படையிலான மருந்துகள், 75.115 கிலோ கோகோயின், 3,789.143 கிலோ சைக்கோட்ரோபிக் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்ட 71.89 கிலோ கோகைனில் 39.1 கிலோ குஜராத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,36,000 ஆண்கள் கஞ்சா அடிப்படையிலான போதைப் பொருட்களுக்கும், 7,91,000 பேர் அபின் சார்ந்த மருந்துகளுக்கும், 6,59,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர்.

    இதேபோல், பெண்களில் 1,49,000 பேர் கஞ்சா அடிப்படையிலான போதைப்பொருட்களுக்கும், 1,000 பேர் ஓபியாய்டுகளுக்கும், 33,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல்.

    இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 24 மூட்டைகளில் பதுக்கிய போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, மது கடத்தல், புகையிலை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக நாகூர் இன்ஸ்பெ க்டர் சதீஷ்குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தெத்தி ஜம்மியத் நகரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது முகம்மது சித்திக் என்பவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்த பட்டிருந்த குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து 24 மூட்டைகளில் இருந்த 300 கிலோ மதிப்புள்ள புகையிலை பாக்கெட் முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போதை பொருளை கடத்திய முகம்மது சித்தீக் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஒருவரை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை நாகூர் காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.

    இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்க் சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் மதியழகன், காமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×