search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் எச்சரிக்கை"

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கண்ட றிந்து அதனை கிழித்தனர். இவ்வாறாக 127 வாகனங்களில் இருந்து போலீசாரால் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டது.

    மீண்டும் இதேபோல் போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    • பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
    • விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னேரி பகுதியில் 2 அடிமுதல் 10 அடி உயரம் வரையிலான 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பல வண்ணங்களில் தயார் நிலையில் உள்ளன. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமை தாங்கினார். அப்போது போலீசார் கூறும்போது, விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும் . எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி ஆட்டோகளில் எடுத்துச் செல்லக்கூடாது. சிலைகளை எடுத்து செல்லும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பழவேற்காடு கடலில் கரைக்க விநாயகர் சிலை கொண்டு செல்லும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றக் கூடாது என்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், கலைத்தோழன் மற்றும் விநாயகர் சிலை குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.
    • மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை:

    சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.

    சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது போலீஸ்நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தில் இரவு 9.30 மணி அளவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த உருவப்பொம்மையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க .வினர் மாறி, மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர், உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஜாமீனில் வெளிவர முடியாதபடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 6 தலைமறைவு குற்ற வாளிகளை கைது செய்தனர்.
    • போலீஸ் நிலைய பகுதியிலும் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் ரவுடிகள் கொட்டத்தை அடக்க சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2 மாதமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 616 ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளார்கள். ஜாமீனில் வெளிவர முடியாதபடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 6 தலைமறைவு குற்ற வாளிகளை கைது செய்தனர்.

    ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

    இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 630 ரவுடிகளை போலீசார் கடந்த 6-ந்தேதி போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து இருந்தனர்.

    அவர்களிடம் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கியதோடு மீறி ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

    ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதியிலும் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கிராமப்புறங்கள்,விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
    • பெருமாள்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியில் இருந்தும், மாநகரத்தில் விரிவாக்கப் பகுதியில் இருந்தும் தினமும் பாளை பகுதியில் உள்ள கல்லூரி களுக்கும், பள்ளிகளுக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

    மாநகர பகுதிக்குள் குறிப்பாக டவுன், பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டா லும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவ-மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் என கூட்டமாக காணப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் இருந்து டவுனுக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெருமாள்பு ரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அந்த வழியாக வந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து உடனடியாக அந்த பஸ் டிரைவரை பஸ்சை நிறுத்த சொல்லி அதில் தொங்கிக் கொண்டிருந்த மாணவிகளை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் போகுமாறு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் பஸ்சை கிளம்ப அறிவுறுத்தினார். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மாநகர பகுதியில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த வேலைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
    • சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆபாச படம் தயாரித்து மிரட்டு பவர்கள், மணல் கடத்தல், உணவு பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு உததரவிட்டார். அதன்படி சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக ஒருநாள் சிறப்பு தணிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இந்த தணிக்கையின் போது கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இனி குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    மேலும் பல்வேறு குற்றங்களில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 2 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த 6 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
    • குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    சென்னை:

    சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முன்விரோத மோதல்கள் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக ரவுடிகளுக்கு எதிரான ஒருநாள் சிறப்பு நடவடிக்கையை சென்னை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என 804 பேரின் வீடு தேடிச் சென்று தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    மேலும் "உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர். மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் ஏற்கனவே, 459 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,262 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலை மறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் தேடுதலை அறிந்து மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரணடைந்து வழக்குகளில் ஆஜராகி உள்ளனர். போலீசாரின் இதுபோன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடரும்" என்றனர்.

    • வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
    • பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 

    • ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
    • தலைமறைவாக உள்ள சுகந்தாராமை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட 2 கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குரங்கு ஸ்ரீராம், கோகுல் ஆகியோர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டனர்.

    போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்ததும் மாநகர போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 18 பேரை தொடர்ச்சியாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    ஏற்கனவே வீடியோ வெளியிட்டு கைதான கவுதம் என்பவருடன் தொடர்பில் இருந்த கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்த சுகந்தாராம் (வயது 26) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தியுடன் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

    இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் அவர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சுகந்தாராமை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இவர் மீது சரவணம்பட்டி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலைமிரட்டல், கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    இதுபோன்று ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதனையும் மீறி சுகந்தாராம் கத்தியுடன் வீடியோ வெளியிட்டு உள்ளதால் போலீசார் அவர் கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    • இம்ரான்கானை கைது செய்ய வந்திருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 54 போலீசார் காயம் அடைந்தனர்.
    • சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் கடந்த 2018- ம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் அளித்த பரிசு பொருட்களை மலிவு விலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் பல முறை இம்ரான் கான் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் பரிசு பொருட்கள் வழக்கில் வருகிற 18- ந்தேதியும், நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 21- ந்தேதியும் இம்ரான்கானை போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இன்று காலை வரை அவரை கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இம்ரான் கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியான தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் லாகூரில் உள்ள அவரது வீடு முன்பு திரண்டனர்.

    தங்கள் கட்சி தலைவரை கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இம்ரான்கானை கைது செய்ய வந்திருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 54 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து வன்முறையில் ஈடுபடும் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் மாகாண போலீஸ் ஐ.ஜி. உஸ்மான் அன்வர் கூறியதாவது:-

    இம்ரான்கானை கைது செய்ய முயன்றபோது அதனை தடுக்கும் வகையில் அவரது கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் ,பொது சொத்துகளை அவர்கள் தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

    சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளைவைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.
    • போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை வரை இன்று கடலில் படகு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கடலில் காற்றும், சீற்றமும் காணப்பட்டதால் படகு போட்டி நடத்த கூடாது என்று கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். மேலும் கன்னியாகுமரி போலீசாரும் கடற்கரைக்கு சென்று படகு போட்டி நடத்த கூடாது என்று கூறினர்.

    ஆனால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசாரின் தடையை மீறி கடலில் படகு போட்டி நடந்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் உத்தரவை மீறி கடலில் படகு போட்டி நடத்தியது பற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    ×