search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்: ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்: ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக் கைது

    • ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
    • மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு டெல்லியில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் கடந்த மாதம் 15-ந்தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தி.மு.க. அயலக அணியிலும் பொறுப்பில் இருந்தார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்காக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரை தேடினார்கள்.

    ஆனால் போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினார்கள். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளையும் கைப்பற்றினார்கள். அப்போது அவர் 3 செல்போன்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த போன்களுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவ்வப்போது போனை ஆன் செய்து ஒரு சிலருடன் பேசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை தென் மாநிலங்களில் தேடினார்கள். மேலும் மற்றொரு தனிப்படையினர் அவரை வடமாநிலங்களில் தேடினார்கள். அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்து உள்ளார்.

    எனவே அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டினார்கள். இதையடுத்து ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாத வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடி இறுகியது.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அந்த வீட்டை டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். பின்னர் நள்ளிரவில் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவரை டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக இன்று பிற்பகலில் டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் விரிவான தகவல்களை வெளியிட உள்ளனர். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு யார் யார் பின்னணியில் இருந்தனர் என்பது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×