search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக் உடனான தொடர்பு பற்றி முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்
    X

    ஜாபர் சாதிக் உடனான தொடர்பு பற்றி முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்

    • தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தினவிழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டின் பேரில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 76 கிலோ கேக் வெட்டி மகளிர் அணியினருக்கு வழங்கினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது. இது பற்றி நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். பள்ளி கல்லூரிகளின் அருகில் போதை பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும் அதனை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தடுக்க தவறிவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 15-ந் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருட்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த போதை பொருள் கடத்தலில் தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அவர் மீது ஏற்கனவே 26 வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் குடும்பத்துடனும், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் அவர் நெருங்கி பழகியிருப்பது வேதனையானது.

    இந்த விவகாரம் பற்றியும் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றியும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அமைப்பு செயலாளரை வைத்து பேச வைத்துள்ளார்கள். இது ஏற்புடையதல்ல.

    தமிழகத்தில் தொடர்ச்சியாக போதை பொருட்கள் பிடிபடுகிறது. உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களிடம் இருந்து 500 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இல்லையா? சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய முதலமைச்சர் 'பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்றதாக 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒத்துக் கொண்டார். அதில் 145 பேர் மட்டுமே கைதாகி இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் தான் இப்போது பிடிபட்டு கொண்டிருக்கிறார்களா? தமிழக காவல் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாகி விட்டது.


    இந்த ஆட்சியில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் நடக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் சீரழிகிறார்கள். கடலோர காவல் படையினரும் போதை பொருட்களை பிடிக்கிறார்கள். நாமக்கல்லிலும் 10 ஆயிரம் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. டெல்லியில் மத்திய அதிகாரிகள் நடவடிக்கைக்கு பிறகுதான் இங்கு போதை பொருட்கள் பிடிபடுகிறது.

    எனவே தமிழக அரசு போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் விரைவில் கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

    மேலும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.

    தமிழக அரசால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத நிலையில்தான் 'நீங்கள் நலமா?' என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    (கூட்டத்தினரை பார்த்து நீங்கள் நலமா இருக்கிறீர்களா என்று கேட்டார்).

    இந்த ஆட்சியில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நாட்டு மக்களை பார்த்து நலமா? என்று எப்படி கேட்க முடியும்.

    தமிழக முதல்வர் செயல்படாத பொம்மை முதலமைச்சராக உள்ளார். போதை பொருள் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×