search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condemned"

    கருணாநிதி உடல் அடக்கத்துக்கு வந்த ராகுலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #KarunanidhiFuneral #RahulGandhi #EVKSElangovan
    கோபி:

    முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று ராகுல்காந்தி சென்னை வந்தார். அவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. பொதுமக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு ராகுல்காந்தி தள்ளப்பட்டுவிட்டார்.

    இந்தியாவிலேயே ராகுல் காந்திக்கு முதல்தர பாதுகாப்பு தர வேண்டியது சட்டமாக உள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான பாதுகாப்பையும் இந்த அரசு அளிக்கவில்லை. இது இந்த அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.


    பிரதமர் மோடிக்கு கொடுத்த பாதுகாப்பை ராகுலுக்கு ஏன் அளிக்கவில்லை? நாங்கள் ராகுலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    இந்தியாவில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ராகுல் காந்திக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை? என எழுதி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு பாதுகாப்பு குளறுபடியா? இது சகித்துக்கொள்ள முடியாது. இதை உயர்மட்ட விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiFuneral #Congress #RahulGandhi #EVKSElangovan
    ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். #HighCourt #InquiryCommission
    சென்னை:

    கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி புதிய தலைமை செயலக கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது முழு வீச்சில் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை கமி‌ஷனை அமைத்து அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

    விசாரணை கமி‌ஷன் விசாரணைக்கு ஆஜராகுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


    இதை எதிர்த்து கருணாநிதி உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். அதில் விசாரணை கமி‌ஷனுக்கு தடை விதிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ரகுபதி கமி‌ஷன் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார்.

    அவரிடம் தமிழக அரசின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 2015-ம் ஆண்டு இந்த விசாரணை கமி‌ஷன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும், இத்தனை ஆண்டுகளாக அந்த கமி‌ஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

    ‘தலைமை செயலகத்துக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அது குறித்து ஊழல் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது தானே? அதற்கு பதில், ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் எதற்காக விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்?

    இதனால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறையாதா?’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த வழக்கை 26-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மீண்டும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கண்துடைப்புக்காகவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

    இதுபோன்ற ஆணையத்திற்காக பொது மக்களின் பணத்தை வீணடிக்க கூடாது. இதுவரை அரசால் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

    அவற்றிற்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? இந்த ஆணையங்கள் தரும் அறிக்கைக்கு எந்த பயனும் இல்லை.

    இந்த ஆணையத்தினால் அரசு சாதித்தது என்ன? இந்த ஆணையங்கள் விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்து கொள்கின்றன?

    ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் தானா? அவர்களுக்கு அரசு தானே சம்பளம் தருகிறது. இது குறித்து பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #InquiryCommission
    வரம்பு மீறி செயல்படும் புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு மார்க்சிஸ்டு கம்யூ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்கு பட்ஜெட்டிற்கான கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் கவர்னர் கிரண்பேடியின் அடாவடி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. 

    புதுவையில் பொருளாதார மந்தம், வேலையின்மை, கடன் சுமை என அசாதாரன சூழ்நிலை ஏற்ப்பட்டு வரும் நிலையில் செயல் மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மாநில கவர்னர்களை தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுகின்றன. மாநில கவர்னர்களின் அத்துமீறிய செயல்பாடுகளால் கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

    புதுவையிலும் கவர்னர் மக்கள் ஆட்சியை புறந்தள்ளி போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் தன்னிச்சையாக வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார் தற்போது நடப்பாண்டிற்க்கான மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்க்கு உரியதாகும்.

    மேலும் கவர்னர் தன்னிச்சையாக 3.பா.ஜனதா தலைவர்களை நியமன உறுப்பினர்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அவசர அவசகரமாக இரவில் பதவி பிரமானமும் செய்து வைத்தார். இத்தகைய கீழ்த்தரமான அரசியல் மற்றும் ஜனநாயக படுகொலை செயல் புதுவையில் எப்போதும் நடந்ததில்லை.

    மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு கவர்னர் மூலமாக மத்திய அரசிடம் அனுமதி பெறுவது தான் சட்டமும், நடைமுறையும் மரபுமாக இருந்து வருகிறது.

    ஆகவே, புதுவை காங்கிரஸ் அரசு மாநிலத்தின் உரிமை, மக்களாட்சியின் அதிகாரத்தை பாதுகாத்திட நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உறுதியாக சட்டபடியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

    புதுவை மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம், சுதந்திரமான, ஜனநாயக பூர்வமான செயல்பாடுகளுக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் நிரந்தர தீர்வாகும். ஆகவே புதுவை மாநிலத்தின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாத்திட மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்ச்சியில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    சென்னை:

    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு அவமானம் ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

    இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை அடிப்படையில் பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதில், சைதாப்பேட்டை கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 3 வாரங்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது.

    ஆனால் இந்த நிபந்தனையை பாரதிராஜா நிறைவேற்றவில்லை. இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று பாரதிராஜா தரப்பில் புதிதாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்தார். முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத பாரதிராஜாவுக்கு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதற்காக நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்று பாரதிராஜாவின் வக்கீலிடம், நீதிபதி ராஜமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.


    அதற்கு, பாரதிராஜாவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் சரியில்லை என்று அவரது வக்கீல் பிரபாகரன் கூறினார்.

    இப்போது நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    பாரதிராஜாவின் மனுவுக்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். பாரதிராஜா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் பல தவறுகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையடுத்து, இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்வதாகவும், அவரது வக்கீல் பிரபாகரன் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #HighCourt #BharathiRaja
    நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் 0 அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #NEET
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மருத்துவக் கல்வி வணிக மயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.

    2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை ஒரு ஆங்கில நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்கு மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    நீட் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 150-க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல. ஆனாலும், இந்த மதிப்பெண் பெற்றவர்களில் 1990 பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததற்கு காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமான விதிகள் தான்.

    அதிலும் குறிப்பாக இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல்- வேதியியல் பாடங்களில் 9-க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதை விடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனினும், உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரவரிசையில் 50,000-க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

    அதே நேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக் குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தை குவித்து வைத் திருப்பவர்களால் நிகர் நிலைப் பல்கலைகளில் சேர முடிந்துள்ளது. அப்படியா னால், மருத்துவப் படிப்பில் சேரத் தேவை மதிப்பெண்களா... கோடிகளா? என்ற வினா எழுகிறது.

    இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்? அதன் நுணுக்கங்களை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இவர்கள் தட்டுத்தடுமாறி மருத்துவர்கள் ஆனாலும் கூட இவர்கள் தரும் மருத்துவம் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? என்ற வினாக்களுக்கு மத்திய அரசு தான் விடையளிக்க வேண்டும்.

    12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35 சதவீதம் மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம் எதுவும் கிடையாது. இத்தகைய சூழலில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி? என்பதை நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.

    உண்மையில் நீட் தேர்வு 2010ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாட வாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இது தான் மருத்துவக்கல்வி சீரழிவின் தொடக்கமாகும்.

    இத்தகைய முறையில் மருத்துவப் படிப்பின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்த முடியாது. ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விட சிறந்த காரணம் தேவையில்லை.

    எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #NEET
    விநாயகர் பற்றி விமர்சனம் செய்த வழக்கில் இயக்குனர் பாரதிராஜா நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவருக்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி நடந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் பேசினார்.

    இதுகுறித்து நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த மே 23-ந்தேதி நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது.

    மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

    ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனுவை ஐகோர்ட்டில் பாரதிராஜா தாக்கல் செய்தார்.


    அந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி புகார்தாரர் நாராயணனுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். #HighCourt #Bharathiraja
    நீட் தேர்வை கணினிமயம் ஆக்குவதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் மத்திய அரசு சீர்குலைக்க முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #NEET #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தேர்வு முகமை எனும் “நே‌ஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி” தான், இனிமேல் “நீட்” தேர்வுகளை நடத்தும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி வருவதற்கு, தி.மு.க. சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீட் தேர்வுக்குரிய தமிழ் கேள்வித்தாளை மொழி பெயர்ப்பதில் பிழைகளை ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் டாக்டர் படிப்பில் சேர முடியாத அநீதியான அவல நிலைமையை ஏற்படுத்தியது.


    இந்நிலையில் கணினி மயமான தேர்வை அறிமுகப்படுத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்திடக்கூடும் என்று தெரிந்தே அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கிராமப்புற மாணவர்கள் அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள். அது மட்டுமின்றி கணினிப் பயிற்சி ஏதும் பெரிய அளவில் இல்லாதவர்கள்.

    இதுபோன்ற இயலாமை நிறைந்த சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்கள் எப்படி கணினி மூலம் தேர்வு எழுத முடியும் என்ற அடிப்படை சிந்தனை கூட மத்திய பா.ஜ.க. அரசுக்கு வராதது மிகுந்த வேதனையளிக்கிறது. மருத்துவப் பட்டம் பெறுவது கிராமப்புற மாணவனுக்கு நிரந்தரமாக எட்டாக் கனியாகவே இருந்து விட வேண்டும் என்ற சதி ஆலோசனை நிறைந்த உள்நோக்கத்தின் விளைவுதான் இந்த கணினி மூலம் நீட் தேர்வு என்ற மோசமான அறிவிப்பாகும்.

    நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏழரைக் கோடி மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கிடப்பில் போட்டு வைத்து விட்டு, இப்படி ஆண்டுக்கு ஒரு குழப்பத்தை நீட் தேர்வில் புகுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு கிராமப்புற மாணவர்களுக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் முற்றிலும் எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறது.

    அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, கணினி மூலம் நீட் தேர்வு என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழ்நாடு சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    “வளர்ச்சி முழக்கத்தை” வெகுளித்தனமாக நம்பி ஏமாந்து வாக்களித்து விட்டார்கள் மக்கள் என்பதை மூலதனமாக்கி, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையுடன் “நீட்” தேர்வை வைத்து சித்து விளையாடி, அவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் அரக்க மனப்பான்மையுடன் சீர் குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, மாணவர்கள் தக்க நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NEET #DMK #MKStalin
    போலீசாரை கண்டித்து திருவாரூரில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் ஆட்டோ நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு இந்த ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு அருகில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் பெயரை சங்கத்திற்கு தொடர்பில்லாத ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்தியதுடன், மற்றொரு ஆட்டோ நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தினர். இதுபற்றி சி.ஐ.டி.யூ. ஆட்டோ டிரைவர்கள் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நேற்று கொரடாச்சேரி போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து திருவாரூரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப் பட்டு பஸ் நிலையம் ரவுண்டானாவை அடைந்தனர். அங்கு ஆட்டோ தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலையில் படுத்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் குணசீலி, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    உயர்மின்கோபுர திட்டங் களுக்கு கண்டனம் தெரிவித்து விவசாய சங்கங் களின் கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு, உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிர மணியன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்மின்கோபுர திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் எடுத்து கூறினர்.

    அப்போது, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதில் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் கரூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு மிக்க விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின்கதிர்வீச்சினால் நிலம் பாழ்படும். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிக்கப்படக்கூடும். எனவே அந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சாலையோரங்களில் கேபிள்களை பதித்து அதன் மூலம் மின்வயர்களை கொண்டு செல்லும் வகையில் திட்டத்தினை செயல்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 11 உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டங்களையும், வருங்கால திட்டங்களையும் கேபிள் வழியாக மண்ணில் பதித்து மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்ட நிலங்களுக்கு சட்டப்படி சந்தை மதிப்பு விலை நிர்ணயித்து அதில் 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம், மே 17 இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் திலீபன், ஏர்முனை இளைஞர் அணி துணை தலைவர் மகேஸ்வரன் உள்பட விவசாய சங்க பிரதி நிதிகள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
    பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையை கண்டித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளின் கருத்து கேட்கவில்லை. மக்களை துன்புறுத்தி நிலங்களை பெறக்கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் காப்புக்காடுகள் உள்ளன. பசுமை வழிச்சாலையினால் காப்புக்காடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். பசுமை வழிச்சாலையினால் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தான் அதிகம் பாதிப்பு. 122 கிலோ மீட்டர் சாலை அமைக்க 1100 ஹெக்டர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    ஜெயலலிதா முதல் - அமைச்சராக இருந்த போது மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அறிவித்து இருந்தார். அந்த திட்டங்களை நிறைவேற்ற முன்வராமல், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்ன.

    மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    நாகப்பட்டினம்:

    நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்சியை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையினை தினசரி உயர்த்தும் பெட்ரோலிய நிறுவனங்களையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார். 
    மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று கூறியதுடன் அரசின் தோல்வியை மறைப்பதற்கு தி.மு.க. மீது குறை கூறுவதாக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

    தி.மு.க. ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம்.

    இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.

    ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந்தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

    காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.


    அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை.

    மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறுவது உள்ளபடியே மனவேதனையளிக்கிறது.

    தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    ×