search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Funeral"

    ராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். #KarunanidhiFuneral #RahulGandhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 8-ந் தேதி சென்னை வந்தார்.

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நுழைவு வாயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. கலைவாணர் அரங்கம் பகுதி வழியாக முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நரேந்திர மோடி வரும் வரையிலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட ஏரியாவாகவே காணப்பட்டது. அதன் பின்னர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தி.மு.க.வினரும், பொது மக்களும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியிலும் நுழைந்து விட்டனர்.

    இதனால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தியால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு எளிதாக செல்ல முடியவில்லை. மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே இடிபாடுகளுக்குள் சிக்கி ராகுல் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.


    இதன் மூலம் ராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    ராகுல்காந்தி செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் யார்? யார்? எதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது? என்பது போன்ற கேள்விகளை மத்திய உளவு பிரிவினரும், ராகுல் பாதுகாப்பு அதிகாரிகளும் கேட்டுள்ளனர்.

    இசட்பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அது எதுவும் ராகுல் பாதுகாப்பில் கடைபிடிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய அரசுக்கு உளவு பிரிவு அதிகாரிகள் விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். இதன் பிறகே மத்திய அரசு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    இதற்கிடையே ராகுல் பாதுகாப்பில் 3 துணை போலீஸ் கமி‌ஷனர்கள் கோட்டை விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    கலைவாணர் அரங்கம் வழியாக ராகுல் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வழியில் 3 துணை கமி‌ஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள்தான் ராகுல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர்கள். ஆனால் இந்த பாதை வழியாக ராகுல் வருவது தெரிந்தும், பொது மக்களையும், தி.மு.க.வினரையும், 3 போலீஸ் அதிகாரிகளும் எப்படி செல்ல அனுமதித்தார்கள்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் சென்னை போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. #KarunanidhiFuneral #RahulGandhi
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஒன்றை சொல்கிறேன்.

    மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நான் (தம்பித்துரை) ஆகிய 3 பேரும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதை இல்லையென யாராவது சொல்ல முடியுமா? தமிழக அரசின் சார்பில் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ? அது எல்லாம் கருணாநிதிக்கு செய்யப்பட்டது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? எனவே பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. புதைக்க இடம் கொடுக்காமலா? மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


    அண்ணா, எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்ட சிக்கல்கள் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்தார்கள். அதற்கு மேல் தமிழக அரசும் ஆட்சேபனை செய்யவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்.

    கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை கட்சியில் இருந்து தி.மு.க.வினர் நீக்கியதால் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கருணாநிதி உடல் அடக்கத்துக்கு வந்த ராகுலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #KarunanidhiFuneral #RahulGandhi #EVKSElangovan
    கோபி:

    முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று ராகுல்காந்தி சென்னை வந்தார். அவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. பொதுமக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு ராகுல்காந்தி தள்ளப்பட்டுவிட்டார்.

    இந்தியாவிலேயே ராகுல் காந்திக்கு முதல்தர பாதுகாப்பு தர வேண்டியது சட்டமாக உள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான பாதுகாப்பையும் இந்த அரசு அளிக்கவில்லை. இது இந்த அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.


    பிரதமர் மோடிக்கு கொடுத்த பாதுகாப்பை ராகுலுக்கு ஏன் அளிக்கவில்லை? நாங்கள் ராகுலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    இந்தியாவில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ராகுல் காந்திக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை? என எழுதி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு பாதுகாப்பு குளறுபடியா? இது சகித்துக்கொள்ள முடியாது. இதை உயர்மட்ட விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiFuneral #Congress #RahulGandhi #EVKSElangovan
    தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் இதுவரை 43 தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.#DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

    அவரது மரணம் தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது.

    கருணாநிதி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அதிர்ச்சியில் பலர் உயிர் இழந்துள்ளனர்.

    பெரம்பூர் 46-வது வட்டத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் பரசுராமன் தலைவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

    முகலிவாக்கம் 156-வது வட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    அம்பத்தூர் பகுதி 84-வது வட்ட துணை செயலாளரான கொரட்டூரை சேர்ந்த குமரன் என்பவர் துக்கம் தாங்காமல் தீக்குளித்து இறந்தார்.

    அணைக்கட்டு தொகுதி தொரப்பாடி அரியூர் காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் டி.வி.யில் கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் இறந்து விட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி 7-வது வட்ட துணை செயலாளர் புஷ்பராஜின் தந்தை கோபன் என்ற மனோகரன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    மதுரை ரிசர்வ் லையன் காலங்கரையை சேர்ந்த அழகு ராஜா (27), தி.மு.க. இளைஞரணி உறுப்பினரான இவர் கருணாநிதியின் மரண செய்தியை டி.வி.யில் பார்த்த போது அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலை ஜெகதீஸ் கார்த்திக் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    கருணாநிதியின் உடலை சந்தன பெட்டியில் வைத்து குழிக்குள் இறக்கிய போது டி.வி.யில் செய்தி பார்த்து கொண்டிருந்த குன்றத்தூர் ஒன்றிய கழக நிர்வாகி அருணாசலம் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    இது தவிர கருணாநிதியின் உடலை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைத்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிர் இழந்து விட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்ததில் இதுவரை 43 தி.மு.க.வினர் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழியும், பொது மக்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதையில் பொதுமக்கள் புகுந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் 26 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செண்பகம் (60), ஒரு ஆண் ஆகியோர் இறந்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவணன் (37), துரை (56) ஆகியோர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    பலியான துரை மதுரை மதிசியம் பகுதியை சேர்ந்தவர். தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளரான இவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஏற்கனவே 2 முறை சென்னை வந்துள்ளார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

    காயமடைந்த மற்ற 22 பேரில் 15 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தை வேலு, அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த தங்கராஜ், சத்யா, கென்னடி, வேலூரை சேர்ந்த ஜெயராமன், காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு ஆகிய 7 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலாப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் கார்த்திக் என்ற வாலிபரும் பலியானார்.

    நேற்று காலை 11 மணி அளவில் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜெகதீஷ் கார்த்திக், மாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் மனைவி சுமித்ராவிடம் தண்ணீர் வாங்கி குடித்த அவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.

    இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷ் கார்த்திக்குக்கு 13 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். ஜெகதீஷ் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வந்தார்.
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் தொண்டர்கள் செருப்பு உள்பட 8 டன் குப்பை அகற்றப்பட்டது. #RajajiHall #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதியின் உடல் அடக்கம் இரவு 7 மணிக்கு முடிந்தாலும் தொண்டர்கள் கலைந்து செல்ல நேரம் நீடித்தது.

    அதன் பின் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    துணை கமி‌ஷனர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் மண்டல அதிகாரி வீரப்பன் தலைமையில் 150 ஊழியர்கள் துப்புரவு பணியினை மேற்கொண்டனர்.

    ராஜாஜி அரங்கத்தை சுற்றிலும் செருப்புகள் சிதறி கிடந்தன. நெரிசலில் சிக்கிய தொண்டர்கள் தங்கள் கால்களில் அணிந்து வந்த செருப்பினை எடுக்க முடியாமல் விட்டுச் சென்றனர். செருப்புகள் மட்டுமே ஒரு டன் அளவில் குவிந்து உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், உணவு கழிவுகள், டம்ளர் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் மலைபோல் குவிந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு பெரும்பாடாகி விட்டது.

    ராஜாஜி ஹால் அருகில் 8 டன் குப்பைகளையும், அண்ணா சாலை, வாலாஜா ரோடு, காமராஜர் சாலை வரையில் 10 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன. இந்த பணியில் 60 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மாலையில் தொடங்கிய துப்புரவு பணி அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது. மொத்தம் 18 டன் குப்பை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #RajajiHall #KarunanidhiFuneral
    செங்கல்பட்டு அருகே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    விருதுநகர் மாவட்டம் வீரசோழம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). தி.மு.க.வில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதிஅஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதே பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர்கள் 7 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். டிரைவர் ஜெயமுருகன் காரை ஓட்டினார். மதுராந்தகம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ஜெயமுருகனை ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு மணிவண்ணன் காரை இயக்கினார்.

    செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த டிரைவர் ஜெயமுருகன், பெரியசாமி, மாரிமுத்து, செல்லத்துரை, தங்கப்பாண்டியன், ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த 6 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பலியான மணிவண்ணனுக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதற்கு உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #KarunanidiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் நேற்று வைக்கப்பட்டிருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி வழியும், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது.

    அவர் சென்றதும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆக்கிரமிக்க தொடங்கினர்.

    மேலும் பன்னோக்கு மருத்துவமனை வழியாகவும் ராஜாஜி அரங்குக்குள் ஏராளமான தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர்.

    இப்படி அத்துமீறி வந்தவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த மைக்கில் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் முன்னேறி வந்தனர்.


    அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது சிலர் ஏறி நின்று கொண்டனர். அவர்களையும் மா.சுப்பிரமணியன் எச்சரித்து கீழே இறங்க வைத்தார்.

    அத்துமீறி வந்தவர்களை பார்த்து வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களும் தங்கள் இஷ்டத்தக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி நுழைந்தவர்களை சமாளிக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தாலும் அவர்களால் கட்சி தொண்டர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை. மேலும் அத்துமீறி நுழைந்தவர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்று சூழ்ந்து நின்று கொண்டனர்.

    நுழைவுவாயில் படிகள் அனைத்திலும் ஆக்கிரமித்து உட்கார்ந்து கொண்டனர். இவர்களை அகற்ற முடியாமல் போலீசார் திணறினார்கள்.

    நிலைமை மோசமான பின்புதான் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இதேபோல் இறுதி ஊர்வலத்தின் போதும் அண்ணாசாலையில் இருந்து கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் ரோடுகளில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்தை தொடங்கி விட்டனர். இதனால் வழி நெடுகிலும் கடும் சிரமத்துக்கு இடையே ஊர்வலம் சென்றது.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் அஞ்சலி செலுத்த வந்த பலரும் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த விசயத்தில் போலீசாரை குறை கூறக்கூடாது. அவர்கள் கால் கடுக்க நின்று பாதுகாப்பு கொடுத்தார்கள். தூக்கம் இன்றி, சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக கஷ்டப்பட்டார்கள். பெண் போலீசாரின் நிலைமை மிகவும் பரிதாபமானது.

    ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தகுந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    ராஜாஜி ஹாலில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டும், எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போல்தான் காலை 11 மணி வரை நடந்து கொண்டனர்.

    நிலைமை மோசமான பிறகுதான் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக வந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த அலட்சியமும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகும் என்றார். #DMK #Karunanidhi #KarunanidiFuneral
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த 5 மணி நேரத்தில் சமாதி தயாராகி விட்டது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் மெரினா கடற்கரையில் கடைசி நேர பரபரப்புக்கு பின்புதான் நடைபெற்றது.

    முன்னதாக அரசிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க தி.மு.க. கேட்டபோது கோர்ட்டில் வழக்குகள் இருப்பதால் காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்குவதாக தமிழக அரசு கூறிவிட்டது. இதனால் தி.மு.க. சார்பில் இரவோடு இரவாக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

    அவசர வழக்காக இதனை எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு காலை 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கியது. 11.30 மணி வரை வக்கீல்கள் வாதம் நடந்தது. 11.30 மணிக்கு மேல் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதி உடல் அடக்கத்துக்கான ஏற்பாடுகளில் துரிதமாக ஈடுபட்டனர். தீர்ப்பு வெளியான உடனேயே பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, அனுஜார்க், கார்த்திகேயன், உமாநாத், சந்தோஷ் பாபு ஆகியோர் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர்.

    கோர்ட்டு தீர்ப்பு எப்படி வந்தாலும் இரு விதமான வரைபடத்தை தயாரித்து வைத்திருந்தனர். மெரினாவில் இடம் ஒதுக்க கோர்ட்டு உத்தரவிட்டதும் அதற்கான வரைபடத்தை அதிகாரிகள் கொண்டு வந்து தி.மு.க. நிர்வாகிகளிடம் அதை காட்டி சமாதி அமையும் இடத்தை விளக்கினார்கள். சமாதிக்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

    தி.மு.க. மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரிய சாமி, ஏ.வ.வேலு உள்ளிட்டோரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.


    இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பொக்லைன் எந்திரங்கள், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். குண்டும் குழியுமாக கிடந்த மணல்பரப்பு சமப்படுத்தப்பட்டது. 10 அடி நீளம், 7 அடி அகலம், 6 அடி உயரத்துக்கு செவ்வக வடிவில் பள்ளம் தோண்டப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 4.30 மணிக்கு இந்த பணி முடிவடைந்து சமாதியை சுற்றிலும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் பொதுப் பணித்துறை என்ஜினீயர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் இந்த பணிகளை 5 மணி நேரத்தில் செய்து முடித்தனர். கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கும் போது சமாதியும் தயாராகி விட்டது.

    சமாதியின் அடியில் காங்கிரீட் செங்கற்கள் வைத்து கட்டப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான டெண்டுகளும், இருக்கைகளும் போடப்பட்டன.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பம்பரம்போல் சுழன்று செயல்பட்டார். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த வந்த தலைவர்கள் தொண்டர்களின் நெரிசலில் சிக்கினர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இதனால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது. மேலும் ராஜாஜி ஹால் நோக்கி நடந்து சென்றதால் சாலைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அஞ்சலி செலுத்தவும், பொது மக்கள் அண்ணாசாலை வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் போலீசார் பற்றாக்குறை நிலவியது.

    இந்த சமயத்தில் மதியத்துக்கு பிறகு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே முண்டியடித்தப்படி கூட்டம் சென்றது. இதில் தலைவர்கள் சிக்கி தவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் சிக்கி வந்துதான் அஞ்சலி செலுத்த முடிந்தது.


    அப்போது நெரிசலும் ஏற்பட்டதால் ராகுல்காந்தியால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியை ஜன்னல் வழியாக ஏறி குதித்து வெளியே செல்லலாம் என்று அவரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது.

    முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ராகுல் காந்தி ஏறி குதித்தார். பின்னர் கீழ் தளத்தில் இருந்த காரில் ஏறி புறப்பட்டார்.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒன்றாக வந்தனர். அவர்களும் நெரிசலில் சிக்கியபடிதான் வந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கஷ்டப்பட்டு அழைத்து வந்தனர்.

    கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம் ஆகியோரும் கூட்டத்தில் நீந்திதான் வந்தனர்.

    நடிகர் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் நெரிசலில் சிக்கினர். இதில் சத்யராஜ் வியர்வையால் நனைந்து விட்டார். கருணாநிதி உடலை பார்த்ததும் அவர் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த திங்கட்கிழமை கவலைக்கிடமாக மாறியதுமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

    மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அவர் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினார்கள். அன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    அன்றிரவு கருணாநிதி உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவே 1½ மணி நேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு காரணமே வெள்ளம் போல திரண்டு விட்ட தி.மு.க. தொண்டர்கள்தான். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வீர வணக்கம், வீர வணக்கம்... கலைஞருக்கு வீர வணக்கம்” என்று முழங்கியபடி சென்றது உணர்ச்சிமயமாக இருந்தது.


    புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், பொதுமக்கள் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்தனர். அண்ணாசாலை வழியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவானந்தா சாலை வழியாக மக்கள் வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த இரு சாலைகளிலும் திரும்பிய திசையெல்லாம் மனித தலையாக, மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மதியம் பொதுமக்கள் வருகை கணிசமாக அதிகரித்தது. கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக வரும் என்பது தெரிய வந்ததும் லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே குலுங்கியது.

    பிற்பகலிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை, அலையாக வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் உருவானது.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.



    மாலை 4.30 மணிக்குப் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியதும் தொண்டர்களும் அலை, அலையாக பின் தொடர்ந்து அணிவகுத்து வந்தனர். இதற்கிடையே லட்சக்கணக்கான தொண்டர்கள் கடற்கரை சாலையில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை அந்த பகுதியும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவரும் கருணாநிதி உடலுக்கு இறுதி சடங்குகள் முடியும் வரை தலைவா..... தலைவா.... என்று விண்ணதிர கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். தொண்டர்கள் முழுமையாக கலைந்து செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது.

    லட்சக்கணக்கான மக்கள் வருகையால் கருணாநிதி இறுதி ஊர்வலம் மறக்க முடியாத ஊர்வலமாக மாறியது. இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral

    ×