search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி-நெரிசலில் சிக்கி தவித்த தலைவர்கள்
    X

    கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி-நெரிசலில் சிக்கி தவித்த தலைவர்கள்

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த வந்த தலைவர்கள் தொண்டர்களின் நெரிசலில் சிக்கினர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இதனால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது. மேலும் ராஜாஜி ஹால் நோக்கி நடந்து சென்றதால் சாலைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அஞ்சலி செலுத்தவும், பொது மக்கள் அண்ணாசாலை வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் போலீசார் பற்றாக்குறை நிலவியது.

    இந்த சமயத்தில் மதியத்துக்கு பிறகு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே முண்டியடித்தப்படி கூட்டம் சென்றது. இதில் தலைவர்கள் சிக்கி தவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் சிக்கி வந்துதான் அஞ்சலி செலுத்த முடிந்தது.


    அப்போது நெரிசலும் ஏற்பட்டதால் ராகுல்காந்தியால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியை ஜன்னல் வழியாக ஏறி குதித்து வெளியே செல்லலாம் என்று அவரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது.

    முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ராகுல் காந்தி ஏறி குதித்தார். பின்னர் கீழ் தளத்தில் இருந்த காரில் ஏறி புறப்பட்டார்.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒன்றாக வந்தனர். அவர்களும் நெரிசலில் சிக்கியபடிதான் வந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கஷ்டப்பட்டு அழைத்து வந்தனர்.

    கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம் ஆகியோரும் கூட்டத்தில் நீந்திதான் வந்தனர்.

    நடிகர் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் நெரிசலில் சிக்கினர். இதில் சத்யராஜ் வியர்வையால் நனைந்து விட்டார். கருணாநிதி உடலை பார்த்ததும் அவர் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    Next Story
    ×