search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசின் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறுவதா?- துரைமுருகன் கண்டனம்
    X

    அரசின் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறுவதா?- துரைமுருகன் கண்டனம்

    மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று கூறியதுடன் அரசின் தோல்வியை மறைப்பதற்கு தி.மு.க. மீது குறை கூறுவதாக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

    தி.மு.க. ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம்.

    இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.

    ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந்தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

    காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.


    அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை.

    மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறுவது உள்ளபடியே மனவேதனையளிக்கிறது.

    தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    Next Story
    ×