search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்றம்"

    • 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை
    • ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்

    1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை - இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதென எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    மேலும் ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாலையில் நடந்த பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ₹4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சாலையிலேயே இரட்டைக் குழந்தைகளை அவர் பிரசவிக்க, ஒரு குழந்தை அங்கேயே உயிரிழந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை களைய ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
    • அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தில் புகார்.

    இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    முன்னதாக,

    கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

    அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.
    • தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

    பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    அதில், " பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், "அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக" அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
    • இந்த வழக்கு தொடர்ந்ததில் பா.ஜ.கவின் பங்கு உள்ளது.

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ வாரண்ட் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை," என்று வாதாடினார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், "சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆவதில் இருந்தே, இந்த வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது," என்று தெரிவித்தார்.

    இதோடு, "இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் தகுதி இழப்பு ஆகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. சனாதனம் குறித்து பேசியது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம் என்று மனுதாரர்கள் கூறிய போதிலும், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

    "இந்த விவகாரம் அரசியல் கொள்கை மோதல் தான். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஜாதி மதம் அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கக்கூடிய சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்ற வாதங்களை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.

    வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் வாதம் நிறைவடையாத காரணத்தால் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    • தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்திருக்காது.
    • விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு.

    விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது,

    மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மேலும், "தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது" என்றனர்.

    ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்க்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கனராக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறப்பது தொடர்கதையாகி வந்தது.

    இதையடுத்து வனவிலங்குகள் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இதர வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி வட்டார மக்கள் அவசர தேவைகளுக்காக இரவு நேரத்திலும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அனுமதிச்சீட்டு (பாஸ்) வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இதன்படி தாளவாடி வட்டார மக்களுக்கு வாகன அனுமதிச்சீட்டு வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நீதிமன்றம் உத்தரவின்படி சத்தியமங்கலம்-மைசூரு சாலையில் இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அவசர தேவைகளுக்காக இந்த சாலையில் பயணிக்கும் உள்ளூர் மக்கள் தங்களின் ஆதார் அட்டையை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர். இதை வரைமுறைப்படுத்தும் வகையில் தாளவாடி வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாகன அனுமதிச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி.புத்தகம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளின் ஜெராக்ஸ் நகல்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.

    • புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு.
    • நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக சுனிதா அகர்வாலும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக சுபாஷிஷ் தலபாத்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் 469 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • உயர்நீதிமன்றத்தில் முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் இனி முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

    • கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு.
    • தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மனுதாரர், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம் என்றும், அறுவை சிகிச்சை செய்த பின்னரும், 5.8.2019ல் கருவுற்றதாகவும், 26.2.2020ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    • சிறுவர்களின் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை.
    • பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை. அது குற்றச்செயல் இல்லை.

    மாணவர்கள் தற்போது ஸ்டைலாக முடிவெட்டி கொள்கிறார்கள். அந்த மாணவர்களை பிடிக்கும் நீங்களெல்லாம் அந்த காலத்தில் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் வீடுகள் இல்லாமல் அவதி பட்ட நிலையில் செல்வராஜ் எம்.பி, மாரிமுத்து எம்.எல்.ஏ, தலைமையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×