என் மலர்
இந்தியா

காற்று சுத்திகரிப்பானுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி: உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மத்திய அரசு பதில்
- ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை
- ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரிய மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அதிகாரத்தை இது பயனற்றதாக்கி விடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






