search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high power tower project"

    உயர்மின்கோபுர திட்டங் களுக்கு கண்டனம் தெரிவித்து விவசாய சங்கங் களின் கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு, உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிர மணியன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்மின்கோபுர திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் எடுத்து கூறினர்.

    அப்போது, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதில் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் கரூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு மிக்க விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின்கதிர்வீச்சினால் நிலம் பாழ்படும். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிக்கப்படக்கூடும். எனவே அந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சாலையோரங்களில் கேபிள்களை பதித்து அதன் மூலம் மின்வயர்களை கொண்டு செல்லும் வகையில் திட்டத்தினை செயல்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 11 உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டங்களையும், வருங்கால திட்டங்களையும் கேபிள் வழியாக மண்ணில் பதித்து மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்ட நிலங்களுக்கு சட்டப்படி சந்தை மதிப்பு விலை நிர்ணயித்து அதில் 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம், மே 17 இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் திலீபன், ஏர்முனை இளைஞர் அணி துணை தலைவர் மகேஸ்வரன் உள்பட விவசாய சங்க பிரதி நிதிகள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
    ×