search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary elections"

    • வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து பிரசாரம்.
    • டிஜிட்டல் போர்டுகள் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது.

    திருப்பதி, மே.5-

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பொதுமக்களை கவரும் பல்வேறு வகையில் நூதன தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து வாலிபர்களின் முதுகில் தொங்கவிட்டு தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    பகலில் சாதாரணமாக காணப்படும் டிஜிட்டல் போர்டுகள் இரவு நேரங்களில் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது. இரவு நேரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக கொண்டு செல்லும்போது பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
    • வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.

    தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

     பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

     இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது
    • முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

    ஆனால் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று பல நாட்களாகியும் வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் தாமதத்திற்கு காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகியும், வாக்குப்பதிவு விவரங்களை முதன்முறையாக தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. கடந்த காலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். ஆனால் தற்போது இந்த தாமதத்திற்கு காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையம் வெளியிட்ட விபரங்களின்படி முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்தில் 66.71% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

    • ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.
    • மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.

    தற்போது 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மே 7-ந்தேதி 94 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று (திங்கட் கிழமை) நிறைவு பெறுகிறது. இதற்கிடையே மே 20-ந் தேதி 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் நடை பெற உள்ளது.

    இதற்கான மனுதாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி இந்த 49 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து 6-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. 6-ம் கட்ட தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளுக்கு நடத்தப்பட உள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று (29-ந் தேதி) தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 6-ந்தேதி கடைசி நாளாகும்.

    7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 6-ம் கட்ட தேர்தலில் அரியானாவில் 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. அதுபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்று தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோ தொகுதியில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்தார்.

    • இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
    • தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலமாக மாறியுள்ளது. இதை நினைத்து அனைவரும் பெருமைபடுவார்கள். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.

    தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.

    நமது ராஜா, மகாராஜாக்களை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) அவமதிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஆளுமைகளை அவமதித்துள்ளார். நாம் அனைவரும் பெருமைபடும் மைசூர் அரச குடும்பத்தினர் பங்களிப்பு அவருக்கு தெரியாதா?

    ஆனால் நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


    நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரசுக்கு நினைவில்லை. அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசும் கட்சியுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைக்கலாம்.

    நமது புனித தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களை கொன்றவர்கள், பசுக்களை கொன்றவர்கள் பற்றி எல்லாம் அவர்கள் பேசுவதில்லை.

    மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமை அளித்தது. நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு கவலை எல்லாம் அவர்களின் வாக்கு வங்கி மட்டுமே.

    பா.ஜனதா அரசு குற்றவியல் நிதி அமைப்பின் காலனித்துவ சட்டங்களை நீக்கியது. பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து உத்தரகன்னடா, தாவன கெரே, பாகல் கோட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதி களில் 14 இடங்களுக்கு கடந்த 26-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மே மாதம் 7-ந் தேதி நடக்கிறது. 

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
    • உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.

    அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.
    • கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்கன்னட பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெல்தங்கடி வட்டத்தின், பஞ்சருமலே குக்கிராமத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கிராம வாக்குச்சாவடியில் மொத்தம் 111 வாக்குகள் உள்ளன. வாக்காளர்கள் அனைவரும் வருகை தந்து வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே 111 பேரும் வாக்களித்துவிட்டனர்.

    காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாவிட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பொழியும் நீரில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். காட்டில் 8 கி.மீ. நடந்து வந்து முடிகெரே நகரில் பஸ்சைப் பிடித்து, தாலுகா அலுவலகம் அமைந்திருக்கும் பெல்தங்கடிக்கு வரும் நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

    இத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், அனைவரும் தவறாமல் வாக்களித்ததற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்னி மலேகுடியா கூறுகையில், 'நகரங்களில் செய்யப்படும் வசதிகள் கிராமங்களில் செய்ய முடியாது என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக வாக்களிக்கும் எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை 500 வாக்காளர்கள் இருந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் வாக்களித்திருப்பார்கள்" என்றார். இந்தக் கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    • கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார்.
    • திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தேர்தல் எப்போது ஒரே மாதிரி இருப்பதில், எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். ஒரே மாதிரியான வடிவத்தில் ஆட்சியிருந்தால் நன்றாக இருக்காது. திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.

    புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

    தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை. இதுவரை பிஜேபி கேரளாவில் வந்ததில்லை என்றும், இந்த முறை பிஜேபி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். பத்து முறை கீழே விழுந்த பிஜேபி இந்த முறை கண்டிப்பாக கேரளாவில் தனது ஆட்சியை பிடிப்பார்கள். கண்டிப்பாக திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சுரேஷ் கோபி கண்டிப்பாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
    • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்ற நிலையில், கேரள மாநில மக்களவை தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதனால் அந்த கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு பலம் பொருந்திய கட்சியாகவே கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்து வருகின்றன.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் மக்களவை தொகுதிகள். இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் எம்.பி.க்களாக உள்ளனர். அதிலும் 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடும் அதே நேரத்தில், பாரதிய ஜனதாவையும் கம்யூனிஸ்டு கட்சிகள் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.

    ஏனென்றால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு பெருகி வருவது தான் அதற்கு காரணம். 2014 தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு 10 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    அந்த வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் அதிகரித்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 13 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போது அதன் செல்வாக்கு கேரளாவில் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அதனை வைத்து கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி அங்கு கால்பதித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல் பட்டது. அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா களமிறக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக தற்போதைய தேர்தலில் கேரளாவில் சில தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள மக்களவை தேர்தலில் களம் காணுகின்றன.

    மாநிலத்தில் தங்களின் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை அதிகரித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    மேலும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தன. சில மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது.

    தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேரள உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வந்தபிறகே அந்த கேள்விக்கான பதில் தெரியவரும்.

    • தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதி, 25 பாராளுமன்ற தொகு திகளுக்கு வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்

    குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிக ளுக்கு மொத்தம் 5460 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 25 பாராளுமன்ற தொகுதி களுக்கு 965 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    இன்று மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட உள்ளன.

    வருகிற 29-ந் தேதிக்குள் வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
    • 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்

    உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.

    2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    • மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    • வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 10 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருவனந்தபுரம் தொகுதியில் 12 பேர், அட்டிங்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 12 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 8 பேர், மாவேலிக்கரை தொகுதி யில் 9 பேர், ஆலப்புழா தொகுதியில் 11 பேர், கோட்டயம் தொகுதியில் 14 பேர், இடுக்கி தொகுதியில் 7 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 10 பேர், திருச்சூர் தொகுதியில் 9பேர், சாலக்குடி தொகுதி யில் 11பேர், ஆலத்தூர் தொகுதியில் 5 பேர், பாலக்காடு தொகுதியில் 11 பேர், பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதியில் 8பேர், கோழிக்கோடு தொகுதியில் 13 பேர், வயநாடு தொகுதியில் 9பேர், வடகரா தொகுதியில் 10 பேர், கண்ணூர் தொகுதியில் 12 பேர், காசர்கோடு தொகுதியில் 9 பேர் என 20 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர். வடகரா தொகுதியில் 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசியலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா 16 தொகுதிகளிலும், பி.டி.ஜே.எஸ். 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.


    அனைத்து தொகுதிகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால் கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் குதித்தனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து கேரள மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. இந்த நிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஓட்டுப் பதிவு வருகிற 26-ந்தேதி நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்காக 25 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகளும், 181 கூடுதல் வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 045பேரும், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 34 ஆயிரத்து 394 பேரும் உள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 89 ஆயிரத்து 839 பேர்.

    கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ×