search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nomination Filing"

    • பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. மேலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த பதவிகளுக்கு கேரள காங்கிரஸ்(எம்) கட்சி ஜோஸ் கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுனீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹரிஸ் பீரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஜோஸ் கே.மணி, சுனீர், ஹரிஸ் பீரன் ஆகிய 3 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    • பிரதமர் மோடி 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
    • தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 12, 20 25, மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணை யம் அறிவித்தது.

    அதன்படி கடந்த மாதம் 19 மற்றும் 26-ந்தேதிகளில் முதல் 2 கட்ட தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இன்று (மே 7-ந்தேதி) 3-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    அடுத்து 4-வது கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. 96 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வருகிற சனிக்கிழமை 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இந்த நிலையில் 5-வது, 6-வது கட்டங்களுக்கான தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இறுதி 7-வது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக 57 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    7-வது கட்ட தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் பீகாரில் 8 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட் டில் 3 தொகுதிகள், ஒடிசா வில் 6 தொகுதிகள், பஞ்சாப் பில் 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி இடம் பெற்று உள்ளன.

    இந்த 8 மாநிலங்களில் பஞ்சாப்பில் 13 தொகுதி களுக்கும், இமாச்சல பிரதே சத்தில் 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 8 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்கான 57 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 14-ந்தேதி கடைசி நாளாகும். 15-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 17-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி 7-வது கட்ட ஓட்டுப்பதிவில் இடம் பெற்றுள்ளது. அங்கு இன்று சில சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பிரதமர் மோடி மனுதாக்கலுக்கு கடைசி நாளான 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு 18 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும்.

    • ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.
    • மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.

    தற்போது 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மே 7-ந்தேதி 94 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று (திங்கட் கிழமை) நிறைவு பெறுகிறது. இதற்கிடையே மே 20-ந் தேதி 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் நடை பெற உள்ளது.

    இதற்கான மனுதாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி இந்த 49 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து 6-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. 6-ம் கட்ட தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளுக்கு நடத்தப்பட உள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று (29-ந் தேதி) தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 6-ந்தேதி கடைசி நாளாகும்.

    7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 6-ம் கட்ட தேர்தலில் அரியானாவில் 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. அதுபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்று தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோ தொகுதியில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்தார்.

    • வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம்.
    • விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கோவை தொகுதியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வழக்கமாக தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம். அதேபோல கோவை தொகுதியிலும் அந்த ருசிகரம் அரங்கேறி உள்ளது.

    கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிடு வதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

    இவர்களில் தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் பெயரில் மட்டும் ராஜ்குமார் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதேபோல சிங்கை ராமச்சந்திரன் பெயரை குழப்பும் வகையில் ராமச்சந்திரன் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பெயரிலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி என்ற கட்சி பெயரில் அவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியலில் எத்தனை ராஜ்குமார், எத்தனை ராமச்சந்திரன் போட்டியிடப் போகிறார்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.

    போட்டி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    • தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் நேற்று பவுர்ணமி நாளில் எல்லா அரசியல் கட்சி வேட்பாளர்களும் வரிசையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களுடன் முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றைய தினத்தை மிகவும் நல்ல நாளாக கருதியதால் 75 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சிகளில்தான் இன்னும் சிலர் மனுதாக்கல் செய்வதற்கு நாளைய தினத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரின் சொத்து விவரங்கள், மனைவியின் சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டி உள்ளதால் ஒரு முறைக்கு இருமுறை அவற்றை சரி பாார்த்து வழக்கறிஞருடன் ஆலோசித்த பிறகே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கட்சியினர் அவரவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் வேட்பு மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர்.

    வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் என்பதால் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் நாளை மனுதாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×