search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Scam"

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
    • புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.

    வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.

    இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.

    இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

    கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.

    தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.

    இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    • முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பாட்னா:

    சமீப காலமாக நாடு முழுவதும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.

    டிஜிட்டல் முறையில் பணம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மருத்துவதுறை ரீதியாக ஆசை வார்த்தைகளை கூறி நூதன மோசடியை அரங்கேற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-

    பீகார் மாநிலம் நவாடா பகுதியில் 'பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி' என்ற பெயரிலான நிறுவனத்தில் பணி புரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம்.

    இதற்காக முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும்.

    அவ்வாறு வழங்கப்படும் பெண்களின் அழகை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வைப்புத்தொகை செலுத்தினால் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.

    அவ்வாறு கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த சில வாலிபர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணத்தை செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நாட்கள் பல சென்ற பின்னரும் கடைசி வரை பெண்களின் புகைப்படங்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கு தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து அவர்கள் பீகார் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நவாடா பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்து செல்போன்கள், பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முன்னாகுமார் என்பவர் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
    • போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை துறையில் வெளிநாட்டுக்கு ஆர்டரின் பேரில் பனியன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிற்கு தேவையான பனியன்களை உற்பத்தி செய்வதற்கென உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன் பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) கடந்த ஜூலை மாதம் 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5, 12, 18 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதன்படி பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னணு வழி ரசீது உருவாக்க ப்படவேண்டும் என 2018ம் ஆண்டு முதல் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இதனிடையே போலி ஜி.எஸ்.டி., பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டறை வீதி பெத்தச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது.

    இதையடுத்து தீவிரமாக விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இந்த போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

    நடராஜா தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் குடியிருந்து வந்த ஏழை பெண்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்த போது தான் மேற்படி பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது.

    மேலும் ஜிஎஸ்டி., கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிமைத்தொகையை அரசு வழங்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி இணை இயக்குநர் முருககுமாரிடம் கேட்டபோது, திருப்பூரில், போலி ஜி.எஸ்.டி., மூலம் மோசடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளது. எத்தனை பேர் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும். விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு இல்லாமல் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை வழங்கியது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை ரத்து செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர்.
    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அடியாருக்கு அடியார் (வயது 40). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வித்யா.

    இவர்களிடம் லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்த புருஷோத்தமன்-செல்வி தம்பதியினர் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் புருஷோத்தமனும், செல்வியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடியாருக்கு அடியார் மற்றும் அவரது மனைவி வித்யாவிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறினர். இதனை நம்பிய அடியாருக்கு அடியார் தன்னுடைய சேமிப்பு பணம் மற்றும் மனைவி, மாமியார், தாயார் ஆகியோரின் நகைகளை அடகு வைத்து ரூ.1 ¼ கோடியை கொடுத்துள்ளார்.

    அதே வேலையில் அடியாருக்கு அடியார் கொடுத்த பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். இதனை அறிந்த அடியாருக்கு அடியார் இது குறித்து புருஷோத்தமனிடம் கேட்ட போது, கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • ஆன்லைன் வியாபாரம் மூலம் முதலீடு செய்த பணத்திற்கு மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி அல்லது லாபம் வழங்கப்படும்.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் குழு தொடங்கப்பட்டு ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் குழுவாக சேர்ந்து முதலீடு செய்தால் ஆன்லைன் வியாபாரம் மூலம் முதலீடு செய்த பணத்திற்கு மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி அல்லது லாபம் வழங்கப்படும்.

    மேலும் புதிய நபர்களை சேர்த்தால் அவர்களுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை நம்பி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த 20 பேர் அந்த குழுவில் சேர்ந்தனர். அந்த குழுவில் பலர் நிர்வாகிகளாக இருந்தனர். அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் கூட்டம் நடத்தி, தொழில் தொடர்பாக ஆலோசித்து வந்தனர்.

    இதனை நம்பிய 20 பேரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதல் மாதம் முடிவடைந்த உடன் முதலீடு செய்த பணத்தில் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டது.

    புதிய உறுப்பினர்களை ஆன்லைன் வியாபாரத்தில் சேர்த்து விட்டால் அவர்களுக்கு போனஸ் தொகை ரூ.500-ம் வழங்கப்பட்டது.

    இதனை நம்பிய அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணைந்தனர்.

    அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆன்லைன் மூலம் முதலீடு செய்தனர். இவ்வாறு மொத்தம் 38 பெண்கள் ரூ.42 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த வாட்ஸ்-அப் குழு திடீரென கலைக்கப்பட்டது.

    உடனே அவர்கள் அந்த வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் நிர்வாகிகளாக இருந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த குரும்பாபேட் பகுதியை சேர்ந்த லட்சுமி புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் குழு தொடங்கப்பட்டு ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து நஸ்ருதீன்னை கைது செய்தார்.

    வண்டலூர்:

    நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் என்கிற தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்த நசீர் என்கிற நஸ்ருதீன் (31) என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகி றார். இவர்கள் இருவரும் ஒன்றாக பணிக்கு சென்று வருவார்கள். இதனால் நண்பர்கள் ஆனார்கள்.

    இந்நிலையில் நஸ்ருதீன், மணிகண்டனின் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பெற்று அவரது பெயரில் தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரத்தை மணிகண்டனிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்து உள்ளார். இந்நிலையில் பணத்தை கேட்டு மணிகண்டன் நெருக்கடி கொடுத்ததால், நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது தொடர்பாக மணி கண்டன் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து நஸ்ருதீன்னை கைது செய்தார். பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை வருவாய் சம்பாதிக்கலாம்.
    • போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை என்.ஜி.ஜி.ஓ. காலனி சாந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40).

    இவர் சேலத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை வருவாய் சம்பாதிக்கலாம். எனவே அதில் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும் என தெரிவித்து அதற்கான இணையதள லிங்கை அனுப்பி உள்ளார்.

    அதை பதிவிறக்கம் செய்து முழு விபரங்களை பதிவிட்ட லோகநாதன் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். தொடர்ந்து அவருக்கு 17 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் தொடர்ந்து 7 தவணைகளில் ரூ.7.61 லட்சம் அனுப்பி உள்ளார்.

    இந்த பணப்பரிவர்த்தனை முடிந்ததும் மர்மநபர் பேசிய டெலிகிராம் லிங்க் செயலிழந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்த பணத்தை இழந்ததால் சேலம் மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர், இவருக்கு கடந்த 12-ந்தேதி டெலிகிராம் மூலம் மர்ம நபர் அறிமுகமாகி பேசினார்.

    அப்போது அவர் அனுப்பும் செயலியை பதிவிறக்கி விவரங்களை பூர்த்தி செய்தால் இரட்டிப்பு பணம் பெறலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய அந்த வாலிபர் தனது விவரங்களை தெரிவித்து ரூ.39.38 லட்சத்தை மர்ம நபர் பதிவிட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தார்.

    பணம் சென்றடைந்ததும் மர்ம நபரின் டெலிகிராம் வெப்சைட் லிங்க் அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் குஜராத், அசாம் மாநிலங்களை சேர்ந்த மோசடி கும்பல்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போல போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
    • தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புதுகாமன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலக பகுதியில் வசிக்கும் சண்முகத்துரை (58), அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த குணசேகரன் ஆகியோர் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகினர்.

    இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டிய நபருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

    அவர்களின் தகுதிக்கேற்ப, வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதற்காக 2020-ல் பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் செல்வராஜ் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துரை, அவருடைய மகள் அர்ச்சனா, குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துரையை கைது செய்தனர்.

    ×