என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இறைச்சி கடையில் மொத்த கொள்முதலாக சிக்கன் வாங்கி ரூ.47.37 லட்சம் மோசடி- சென்னை வாலிபர் மீது வழக்கு
    X

    இறைச்சி கடையில் மொத்த கொள்முதலாக சிக்கன் வாங்கி ரூ.47.37 லட்சம் மோசடி- சென்னை வாலிபர் மீது வழக்கு

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×