search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீஸ் எச்சரிக்கை: போதைப் பொருட்கள் பார்சலில் வந்திருப்பதாக பணம் பறிக்கும் புதிய மோசடி கும்பல்
    X

    போலீஸ் எச்சரிக்கை: போதைப் பொருட்கள் பார்சலில் வந்திருப்பதாக பணம் பறிக்கும் புதிய மோசடி கும்பல்

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×