search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத்தொகை"

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.
    • உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது

    கோவை:

    தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிரி உரிமை தொகை திட்டத்தை தொடங்கியது.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையும் தற்போது வரவு வைக்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ வந்துள்ளது.

    அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-


    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரம் ரூபாய், உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும்.

    எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நான் உங்களுக்கு வழங்கி கொண்டிருப்பேன். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது என்பது எனக்கு நன்கு தெரியும்.

    அப்படி பயன்பட்டு வரும் இந்த தொகையிலும், சில தாய்மார்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமித்து வைப்பதாக தெரிகிறது. இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.

    எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அருமை தாய்மார்களே உங்களுக்கு உதவ, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்றுமே நான் இருப்பேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன
    • கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாநிலம் முழுவதும் இன்று கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குமரி மாவட்ட குழு சார்பில், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    மாற்றுத்திறனாளியை பராமரிக்கும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.

    • புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
    • 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் வழங்கினார்.

    இதில் சரவணக்குமார் எம்.எல்.ஏ, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

    தேனி மாவட்டத்தில் 15.09.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான பயனாளிகள் என தேர்வு செய்யப்பட்ட 2,04,281 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு தகுதியான நபரும் விட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டத்தில் விடுபட்ட நபர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தினார்.

    அதன்படி, இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் குழு அமைத்து, கள ஆய்வு செய்து அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, தகுதியான மனுக்கள் என தேர்வு பெற்ற 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

    மேலும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் விசாரணை செய்யும் பணிகள் விரைவில் முடிவடைந்து, உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவின் நேரலை நிகழ்வினை புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.

    • பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
    • போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை துறையில் வெளிநாட்டுக்கு ஆர்டரின் பேரில் பனியன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிற்கு தேவையான பனியன்களை உற்பத்தி செய்வதற்கென உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன் பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) கடந்த ஜூலை மாதம் 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5, 12, 18 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதன்படி பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னணு வழி ரசீது உருவாக்க ப்படவேண்டும் என 2018ம் ஆண்டு முதல் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இதனிடையே போலி ஜி.எஸ்.டி., பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டறை வீதி பெத்தச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது.

    இதையடுத்து தீவிரமாக விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இந்த போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

    நடராஜா தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் குடியிருந்து வந்த ஏழை பெண்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்த போது தான் மேற்படி பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது.

    மேலும் ஜிஎஸ்டி., கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிமைத்தொகையை அரசு வழங்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி இணை இயக்குநர் முருககுமாரிடம் கேட்டபோது, திருப்பூரில், போலி ஜி.எஸ்.டி., மூலம் மோசடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளது. எத்தனை பேர் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும். விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு இல்லாமல் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை வழங்கியது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை ரத்து செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
    • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 25-வது கூட்டம் அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை யில் நடைபெற்றது. ரவண சமுத்திரம் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி தலைவர் அழகுதுரை, முதலியார்பட்டி ஊராட்சி தலைவர் மைதீன் பீவி அசன் , தெற்கு கடையம் ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி ராமதுரை, வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , ஊராட்சி தலைவர்களின் 3-வது ஆண்டு பதவி ஏற்பு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி நிதியில் இருந்து பணிகளை தேர்வு செய்ய ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    இதனை கடையம் ஊராட்சி ஒன்றியத்திலும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டி.என். பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் பி.எப்.எம்.எஸ்.முறையை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கான பணி நியமன உரிமம் ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும்.15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை, குடிநீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணத்திற்கு பிடிப்பதை ரத்து செய்து விட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

    மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சி தலைவர்களே நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து கூறிய உயர்நீதி மன்ற நீதிபதி யின் கருத்திற்கு கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பது, கலைஞர் உரிமை திட்டத் திற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதோடு, விடுபட்ட தகுதி உள்ள மகளிர்களுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் 6-வது நிதிக்குழு மானியத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கொண்டு வந்த அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடை முறைப்படுத்தாமல் உள்ளது. அதனை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ,கீழாம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், திருமலை யப்புரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்லி ரஞ்சித், மந்தியூர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் தெற்கு மடத்தூர் ஊராட்சி தலைவர் பிரேம ராதா ஜெயம் நன்றி கூறினார்.

    • ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.
    • தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.

    இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    • கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தமிழக அரசு மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதில் விண்ணப்பம் செய்த பெண்களில் நிராகரிப்பு செய்த விண்ணப்பங்கள் அரசு அறிவித்தது போல் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமென தெரிவித்து இருந்தது .

    இதன் அடிப்படையில் பலரும் தங்களது மறுபதிவு விண்ணப்பங்களை அனுப்பி வரும் நிலையில் கொடைக்கானலில் மலை கிராமப் பகுதி பெண்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் . குறிப்பாக இ-சேவை மையங்கள் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் முறையாக செயல்படாததால் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தை மக்கள் நாடும் நிலை தொடர்ந்து வருகிறது.

    இதனால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பதிவு செய்யும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனால் வயதானவர்கள் முதல் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது .

    மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விண்ணப்பம் மறுப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . எனவே மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதி அன்றே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

    இதனை சரி செய்து விரைவில் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். வங்கியில் வரவு வைத்த அன்றே எடுக்க வேண்டும் என்று சொல்லப்படும் தகவல் தவறானது.

    ஒரே நேரத்தில் அனைவரும் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வங்கி கடன் மற்றும் சேவை கட்டணத்திற்காக உரிமைத் தொகையை பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து 1100 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்.

    விண்ணப்ப நிலை குறித்து தகவல் அறிய https://kmut.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் ஒரு தகுதியான பெண்கள் கூட விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ,கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் கீழ்கண்ட உதவி மையங்கள் தனியாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் புதிதாக பயன்பெற வேண்டுமெனில் எவ்வாறு விண்ணப்பிப்பது உட்பட இது தொடர்பாக ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள்.

    பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி அவர்களுக்கு திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியினரால் பிடித்தம் செய்யப்ப ட்டிருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    உதவி மையங்கள்:-

    ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அலுவலக கண்காணி ப்பாளர் சுப்பிரமணி-செல்-9489985791.

    ராணிப்பே ட்டை வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், பழனிராஜன்-செல்-9489985792. அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்,ஆனந்தன் -செல் -9489985793. வாலாஜா தாலுகா அலுவலகம்,முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளங்கோவன்-செல்- 9489985794. ஆற்காடு தாலுகா அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர், தமிழழகன்-செல் -9489985795. சோளிங்கர் தாலுகா அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஜெயபால்- செல்-9489985796.

    கலவை தாலுகா அலுவலகம், முதுநிலை வரு வாய் ஆய்வாளர்,ஆனந்தன்-செல்- 9489985797. அரக்கோணம் தாலுகா அலுவலகம் ,முதுநிலை வருவாய் ஆய்வாளர்,உமாபதி- செல்-9489985798. நெமிலி தாலுகா அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வெங்கடேசன்- செல் -9489985799.

    இந்த வசதியை தகுதியுள்ள அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
    • 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது

    தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்ததும் ஒவ்வாரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது.

    இதுவரை வங்கி கணக்கு தொடங்காதவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. அடுத்த தவணை பணம் செலுத்துவதற்குள் அவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுதும் 57 லட்சம் விண்ணப்பஙகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அவர்களை விட வசதி படைத்தவர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள்.

    அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

    மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடமோ மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை க்கான ஏ.டி.எம் அட்டைகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 48ஆயிரம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    அவர்களிடமிருந்து 2 லட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 1½ லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்ப ட்டுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வரும்போ தெல்லாம் மகளிர்க்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி, மக்களாட்சி என்றார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி, ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத்காந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், லட்சுமி பாரி, ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், வடிவேலு, அசோக், புவனேஸ்வரி, நிர்மலா சவுந்தர், கலைக்குமார், அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள் நாகராஜன், சங்கீதா மகேஷ் உள்பட நகரமன்ற, ஒன்றியக்குழு, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் லோகநாயகி நன்றி கூறினார்.

    ×