என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள்.
    • பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கவர்னராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

    காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் கவர்னர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கவர்னர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

    தமிழ்நாட்டில் எந்தக் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோவில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோவில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோவிலில் போய் கவர்னர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

    தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர்.
    • தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன கழகத்தின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க திராவிட இயக்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள கொள்கை எதிரிகளும் தங்களுக்கேயுரிய கேவலமான உத்தியான வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டனர்.

    ராமர் கோவில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

    ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.

    அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். "பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல" என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
    • தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போது வருகின்றன என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது தெரிய வரும்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுபோல பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலை எப்போதும் காணப்படும்.

    இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. எனவே இந்த தடவையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவத்தினர் எத்தனை கம்பெனி தேவைப்படுவார்கள் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மேலும் தேசிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால் அவர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அரசு துறை செயலாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

    • உயர் போலீஸ் அதிகாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் வாட்ஸ்அப்-க்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
    • தனியார் இடங்களில் கூட இந்த பகுதியில் சிறுபான்மையினர் வசிப்பதால் அனுமதிக்க முடியாது என்று தடை செய்துள்ளார்கள்.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பார்த்தார்.

    கோவிலுக்கு வந்த அண்ணாமலையை ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் முழங்க வரவேற்றார்கள். அங்கு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கோவில் மட்டுமல்ல தனியார் கோவில்கள், மண்டபங்கள் எதிலும் பார்க்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

    இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் வாட்ஸ்அப்-க்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தனியார் இடங்களில் கூட இந்த பகுதியில் சிறுபான்மையினர் வசிப்பதால் அனுமதிக்க முடியாது என்று தடை செய்துள்ளார்கள்.

    இதுபற்றி உரிய ஆதாரங்களுடன் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டோம். சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரித்து தீர்ப்பு வழங்கியது. எந்த இடத்திலும் நேரலை செய்யவோ, பஜனை, வழிபாடுகள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சியோ நடத்த தடையில்லை என்று அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்து உள்ளது" என்றார்.

    • ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
    • மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
    • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.

    சென்னை:

    ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி அரசு வங்கிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் வங்கிகள் இன்று முழுமையாக செயல்பட்டன.

    இதனால் அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வழக்கம் போல வங்கிகளுக்கு சென்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் முழு அளவில் செயல்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை.
    • அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் சட்டசபை கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.

    மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை 24-ந் தேதி திறந்து வைக்க செல்கிறார். 25-ந்தேதி சென்னையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 26-ந்தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.

    இதனால் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் தனியாகவும், வேளாண் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுகிறது.

    பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அறிய துறை வாரியான ஆய்வுக் கூட்டங் கள் தலைமைச் செயலகத் தில் நேற்று முதல் நடை பெற்று வருகிறது.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொழில்துறை மற்றும் சிறு தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார். இதேபோல் ஒவ்வொரு துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வணிகர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நிதி அமைச்சர் ஆலோசனைகள் நடத்த இருக்கிறார்.

    இதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். முதலமைச்சர் கூறும் கருத்துக்களுக்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்பதால் தேர்தலில் மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெற செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    அதேபோல் பெண்கள் மாணவ-மாணவிகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப் புகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று உள்ளதால் புதிதாக தொழில் துவங்கும் நிறுனங்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    உலக நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வலுவான இணைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறு-குறு நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்து வருவதால் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் அவற்றை இடம் பெற செய்வார் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் சலுகைகள் இடம்பெறும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வேளாண் பட்ஜெட்டும் தயாராகி வருகிறது.

    அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    ஏனென்றால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில வரிகளை தவிர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார். இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

    இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதன்பிறகு கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவிட்டது.

    இந்த சூழலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம்கூட வேண்டிய சட்டசபைக் கூட்டம் இதுவரை தொடங்க படவில்லை.

    அடுத்த மாதம் தான் (பிப்ரவரி) சட்டசபை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்கு கவர்னர் அழைக்கப்படுவாரா? அல்லது கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்குமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
    • பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார்.

    இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

    இம்மாநாட்டினை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

    தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்று உள்ளன. குறிப்பாக, மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாது காப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டன.

    இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களான டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்பாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்). ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6.180 கோடி ரூபாய்), டி.வி.எஸ்.நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெகட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிடத்தக்க நிறு வனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அடங்கும்.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 6277.27 கோடி ரூபாய் முதலீட்டிலான பர்ஸ்ட் சோலார், குவால்கம் மற்றும் பெங் டே ஆகிய 3 நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார் .

    இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    • நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
    • பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகர், சந்தையபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19-ந்தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்றிரவு அவரவர் வீடுகளில் இருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்ததுடன், பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை எருக்கலம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.

    பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர்.

    • ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

    சென்னை:

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

    ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

    மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×