search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமான வதந்தி...
    X

    பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமான வதந்தி...

    • பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர்.
    • தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன கழகத்தின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க திராவிட இயக்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள கொள்கை எதிரிகளும் தங்களுக்கேயுரிய கேவலமான உத்தியான வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டனர்.

    ராமர் கோவில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

    ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.

    அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். "பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல" என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×