என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    திருச்சி:

    தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் திருச்சி நவலூர் குட்டப்பட்டில் உள்ளது.

    இந்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 2 மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர் ஒருவரை ராகிங் என்ற பெயரில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, தங்களது அறிக்கையை, பல்கலைக்கழக துணை வேந்தர் நாகராஜ் தலைமையிலான ராக்கிங் தடுப்பு குழு மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சமர்ப்பித்தது.

    மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மாணவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.

    இதையடுத்து பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 9 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழுவினர் பங்கேற்ற கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராகிங் புகாரில் தொடர்புடைய 2 மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) 10-வது பருவத் தேர்வுக்கு படிக்கவும், தேர்வு எழுதவும் தடை விதிப்பது, இந்த பருவப்படிப்பை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) படிக்கலாம் எனவும் முடிவு செய்தது.

    இந்த பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேகிங் புகார் குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் இந்த நடவடிக்கையை ராக்கிங் தடுப்புக்குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    • சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான “சீயாங் எங் ஹாங் 03” என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.
    • கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சீனா தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது.

    மேலும் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இந்திய பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

    இதற்கிடையே தென் தமிழகத்தில் பல்வேறு முக்கிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. அடுத்த கட்டமாக குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. தூத்துக்குடியில் முக்கிய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்களால் மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும். சீன ஆய்வு கப்பல்களில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய ராணுவ தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு வர இருந்த சீன ஆய்வு கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உறவில் ஏற்பட்டு உள்ள சிக்கலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. மாலத்தீவை மையமாக வைத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான "சீயாங் எங் ஹாங் 03" என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. நேற்று காலை அந்த கப்பல் இந்தோனேசியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது.

    அந்த கப்பல் மாலத்தீவை நோக்கி செல்வதாக தெரிய வந்துள்ளது. அது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், ராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன ஆய்வு கருவிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது.

    இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து தற்போது அந்த கப்பல் மாலத்தீவு உதவியுடன் இந்திய பெருங்கடலில் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சீன ஆய்வு கப்பல் எத்தகைய பணிகளில் ஈடுபடும்? எத்தனை நாட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்த கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு வந்த நிலையில் சீன உளவு கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கப்பலின் நகர்வை இந்திய உளவுத்துறையும், இந்திய கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    • ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ்களையும் 24-ந்தேதி மாலை 7 மணியில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. இதுவரையில் ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தப்படி ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.

    முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். நாளை (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
    • முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிப்ரவரி 5-ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.
    • தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.

    தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குழுவில் கனிமொழி எம்.பி. (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்) (தலைமை), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர்), அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), கோவி.செழியன் (தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி. (தி.மு.க. அயலக அணிச் செயலாளர்), டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மருத்துவ அணி செயலாளர்), மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் பணி வேகமெடுத்துள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
    • விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

    இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டின் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்திற்கு கவர்னர் அழைக்கப்படுவதும், அவர் உரை நிகழ்த்துவதும் மரபாக உள்ளது. முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது, சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என வரிசையாக பெரிய நிகழ்வுகள் வரவுள்ளன. இவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற வேண்டியதுள்ளது.

    எனவே சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட் கூட்டத் தொடர் என தொடர்ச்சியான நிகழ்வுகளை அரசு நடத்த வேண்டிய நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் நிர்வாகிகள் சந்திப்புக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட "நிர்வாகிகள் சந்திப்பு" கீழ்க்கண்ட அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, "அண்ணா அறிவாலயத்தில்" நடைபெறும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    • கேலோ இந்தியாவில் 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
    • மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நாடுகளில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில், இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன், பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள்
    • டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது.

    சென்னை:

    உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

    மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.

    சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை

    மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.

    காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".

    இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".

    "ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.

    இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.

    "தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.

    "விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார்.

    மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

    • தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
    • அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

    ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

    மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
    • பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்...,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

    கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதிக்கும், மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருக்கும், சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது.

    மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி.க்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' அமைந்திருந்தது.

    உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி - சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான கவர்னர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.

    மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிக பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, பாராளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். பாராளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    ×