search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian navy"

    • சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
    • கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஏடன்:

    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டுக்குச் சொந்தமான அல் கம்பார் 786 என்ற மீன்பிடிக்கப்பலை நேற்று முன்தினம் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரையும் பணய கைதிகளாகப் பிடித்தனர்.

    கப்பல் கடத்தப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் அரபிக்கடலில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக அங்கு விரைந்தன. கடத்தப்பட்ட ஈரான் கப்பலை இந்திய கடற்படையின் கப்பல் நேற்று சுற்றிவளைத்தன. ஈரான் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் 9 கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்தும் கப்பலையும், பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    • கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான 'எம்.வி.ருயென்' என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, 15-ந் தேதி 'எம்.வி.ருயென்' சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதில் இருந்த கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர். அவர்கள் கேட்காமல் சரக்கு கப்பலில் இருந்து இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானப்படையினரும் தாக்குதலில் கடற்படையினருக்கு உதவி செய்தனர். சுமாா் 40 மணி நேர சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 சிப்பந்திகளும் மீட்கப்பட்டனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ். கொல்கத்தா போர் கப்பல், 35 கடற்கொள்ளையர்களுடன் மார்ச் 23-ந் தேதி (நேற்று) மும்பை வந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    • செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
    • கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை முறியடித்தது.

    புதுடெல்லி:

    அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வந்து அந்த கப்பல்களை கடத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டில் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தக் கப்பலை அவர்கள் தங்களது கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கடற்கரையிலிருந்து 2,800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உடனே இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் முயற்சியில் கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டன.

    சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்திய ஹெலிகாப்டர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. சுற்றி வளைக்கப்பட்டதால் கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையில் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    கப்பல் ஊழியர்கள் 17 பேரை மீட்டனர். இவர்கள் 100-நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். எம்.வி.ரூயென் கப்பல் தற்போது முழுமையாக இந்திய கடற்படை வசம் உள்ளது.

    இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட னர். 17 ஊழியர்கள் எந்த வித காயமுமின்றி மீட்கப்பட்ட னர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

    • பிப்ரவரி 27லிருந்து ஸாஹில், அவர் பணியாற்றி கொண்டிருந்த கப்பலிலிருந்து காணாமல் போனார்
    • கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போனார்.

    கடந்த மாதம் 27லிருந்து காணாமல் போனதாக கூறப்படும் "ஸாஹில் வர்மா" (Sahil Verma) எனும் அந்த கடற்படை வீரரை தேட, உயர்-மட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு மண்டல ஆணைய (Western Naval Command) தலைமையகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ எக்ஸ் (X) வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

    கடற்படையின் இரண்டாம் நிலை வீரராக (Seaman II) பணிபுரிந்த ஸாஹில் வர்மா, 2024 பிப்ரவரி 27 அன்றிலிருந்து தான் பணியாற்றி வந்த இந்திய கடற்படை கப்பலிலிருந்து துரதிர்ஷ்டவசமாக காணவில்லை.


    தகவல் அறிந்ததும் உடனடியாக இந்திய கடற்படை, கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்த விசாரணையை, கடற்படை வாரியம் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு கடற்படை தெரிவித்துள்ளது.

    தற்போது வரை கடற்படை வீரர் ஸாஹில் சர்மா, காணாமல் போன பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது” என எழுதப்பட்டிருந்தது
    • படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர்

    குஜராத் கடற்பகுதியில் இரண்டு நாட்கள் கடலில் இருந்த இந்திய கடற்படையின் (Indian Navy) கப்பல் ஒன்றில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சிறிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்று போது தடுத்து நிறுத்தினர்.

    இந்திய கடற்படை அதிகாரிகளுடன் இருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (Narcotics Control Bureau) அதிகாரிகள், அதில் இருந்த "பாகிஸ்தானியர்கள்" என சந்தேகிக்கப்படும் சிலரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறிய கப்பலில், 3,300 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது" (Produce of Pakistan) என எழுதப்பட்டிருந்தது.

    இதில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ, மெத்தாம்ஃபிடமைன் (methamphetamine) மற்றும் 25 கிலோ மார்ஃபைன் (morphine) ஆகியவை இருந்தது.

    சர்வதேச சந்தையில், தற்போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் குஜராத் மாநில போர்பந்தர் (Porbandar) நகருக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்திய கடற்படையுடன் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மிக பெரிய போதை பொருள் பறிமுதல் இதுதான் என கூறப்படுகிறது.

    இந்த போதை பொருள் கடத்தல் முயற்சியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.


    • இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன.
    • கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் 2-வது கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.

    புதுடெல்லி:

    இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சோமாலியா கடற்கொள்ளையர்களும் கப்பல்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன.

    ஈரானை சேர்ந்த 17 பேர் கிழக்கு சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அங்கு ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று மீன்பிடி கப்பலில் இருந்த 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா கொச்சி கடற்கரையில் இருந்து 800 மைல் தொலைவில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களுடன் கடத்தப்பட்ட ஈரான் கொடியுடன் பறந்த அல் நமீமி என்ற கப்பலை மீட்டது. இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் படகிலிருந்த 19 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது வெற்றிகரமான கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.

    • எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படை கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர்.
    • இந்திய கடற்படை கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஏடன் வளைகுடா பகுதியில் இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா எண்ணெய் கப்பலை இன்று ஹவுதி அமைப்பினர் தாக்கினர். ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எண்ணெய் கப்பலில் தீப்பற்றியது. அந்த எண்ணெய்க் கப்பலில் 22 இந்தியர்கள், வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 23 பேர் உள்ளனர்.

    இதையடுத்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர்.

    தொடர்ந்து, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

    அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை தனது போர்க் கப்பல்களை தயார்நிலையில் நிறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான “சீயாங் எங் ஹாங் 03” என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.
    • கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சீனா தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது.

    மேலும் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இந்திய பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

    இதற்கிடையே தென் தமிழகத்தில் பல்வேறு முக்கிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. அடுத்த கட்டமாக குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. தூத்துக்குடியில் முக்கிய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்களால் மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும். சீன ஆய்வு கப்பல்களில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய ராணுவ தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு வர இருந்த சீன ஆய்வு கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உறவில் ஏற்பட்டு உள்ள சிக்கலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. மாலத்தீவை மையமாக வைத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான "சீயாங் எங் ஹாங் 03" என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. நேற்று காலை அந்த கப்பல் இந்தோனேசியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது.

    அந்த கப்பல் மாலத்தீவை நோக்கி செல்வதாக தெரிய வந்துள்ளது. அது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், ராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன ஆய்வு கருவிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது.

    இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து தற்போது அந்த கப்பல் மாலத்தீவு உதவியுடன் இந்திய பெருங்கடலில் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சீன ஆய்வு கப்பல் எத்தகைய பணிகளில் ஈடுபடும்? எத்தனை நாட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்த கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு வந்த நிலையில் சீன உளவு கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கப்பலின் நகர்வை இந்திய உளவுத்துறையும், இந்திய கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    • இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
    • போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சோமாலியா:

    அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.

    அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.


     இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது. உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி உள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது.
    • கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    அரேபியன் கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலில் மாலுமி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மாலுமியை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்.

    இதற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் உதவியது. விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது. கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 8 அதிகாரிகளும் பல போர் கப்பல்களுக்கு தலைமை தாங்கியவர்கள்
    • பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது

    இந்திய கடற்படை போர்கப்பல்களுக்கு தலைமை தாங்கி, உயர் பதவி வகித்த, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புமேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் அதிகாரி ராகேஷ் எனும் 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள், அரபு நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணியாற்ற சென்றனர்.

    இவர்கள் 8 பேரும் இத்தாலிய தொழில்நுட்பத்தில் உருவாகும், மறைந்திருந்து தாக்க கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகள் குறித்த செயல்பாட்டில் அந்நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வந்தனர்.

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், கத்தார் அரசாங்கம் இவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து சரிவர தகவல்கள் இல்லாமலிருந்தது. இவர்களின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது.

    கடந்த மார்ச் 2023ல் இவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்கியது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.

    இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    அதில் அத்துறை தெரிவித்திருப்பதாவது:

    நாங்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்ததும் கத்தார் அதிகாரிகளுடன் இது குறித்து பேச உள்ளோம். இந்த வழக்கிற்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். சட்டதிட்டங்களின்படி அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்த்து வருகிறோம்.

    இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்திருக்கிறது.

    கடந்த ஜூன் 8 அன்றே இந்த 8 பேரில் ஒரு அதிகாரியின் சகோதரி, இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவசர தலையீட்டை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×