என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம்... 2 மாணவர்கள் தேர்வெழுத தடை
- புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி:
தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் திருச்சி நவலூர் குட்டப்பட்டில் உள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 2 மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர் ஒருவரை ராகிங் என்ற பெயரில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, தங்களது அறிக்கையை, பல்கலைக்கழக துணை வேந்தர் நாகராஜ் தலைமையிலான ராக்கிங் தடுப்பு குழு மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சமர்ப்பித்தது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மாணவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 9 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழுவினர் பங்கேற்ற கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராகிங் புகாரில் தொடர்புடைய 2 மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) 10-வது பருவத் தேர்வுக்கு படிக்கவும், தேர்வு எழுதவும் தடை விதிப்பது, இந்த பருவப்படிப்பை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) படிக்கலாம் எனவும் முடிவு செய்தது.
இந்த பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேகிங் புகார் குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் இந்த நடவடிக்கையை ராக்கிங் தடுப்புக்குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது






