என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அறிமுகம்"
- நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான 'மெட்டா ஏஐ' தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா், மெட்டா ஏஐ வலைபக்கம் ஆகியவற்றில் நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மெட்டா ஏஐ' சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு 'கனெக்ட்' நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 'மெட்டா ஏஐ' சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் 'மெட்டா ஏஐ' சேவையை அணுகலாம். உதாரணமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்த பதிவு குறித்த மேலும் பல தகவல்களை 'மெட்டா ஏஐ' சேவையிடம் கேட்டுப் பெறலாம்.
- இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக விஜய் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிதாக கட்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளனர். 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதை இலக்காக கொண்டு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய் ஆலோசனையின் பேரில் தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
புதிய கட்சி தொடங்கியதை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சிக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணைய விதிமுறைப்படி விளம்பரமாக வெளியிட்டனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணி அசுர வேகத்தில் நடைபெற உள்ளது.
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு இடைவெளியில் கட்சி வளர்ச்சி பற்றி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் தனது பிறந்த நாளை அடுத்த மாதம் 22-ந்தேதி கொண்டாட இருக்கிறார்.
இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் மாநாடு நடைபெற இருக்கும் இடத்தை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் கோடிக்கணக்கான தொண்டர்கள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மாநாட்டில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் கொடி வடிவமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சியில் புதிதாக திரையுலக நடிகர், நடிகைகள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணைய இருக்கின்றனர்.
மாநாடு நடைபெற இருப்பதை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைதளத்தில் விரைவில் மாநாடு.... என ஆர்வத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். புதிதாக தொடங்கிய போதும், தே.மு.தி.க.வை விஜயகாந்த் தொடங்கிய போதும் மதுரையில் முதல் மாநாட்டை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது.
- டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப் படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ.தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டாலும் 5.68 கி.மீ. இதுவரை இயக்கப்படுகிறது.
டீசலுக்கு பதிலாக இயற்கை கியாசை பயன்படுத்தி பஸ்களை இயக்கி னால் 'மைலேஜ்' கூடுதலாக கிடைக்கும் என்ற ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயற்கை கியாசுக்கு மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.
டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் சோதனை முறையில் இயற்கை எரிவாயு பஸ்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் பரீட்சார்ந்த செயல்பாடு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இயற்கை எரிவாயுவுக்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். இயற்கை எரிவாயு சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்படும். மேலும் டீசலினால் ஏற்படும் காற்று மாசுவை விட இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் மிக குறைவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
- வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.
சென்னை:
சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற கல்வி ஆண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேட்டா அறிவியலுடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும், ஏ.ஐ. உடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. சில கல்லூரிகள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. உளவியல் பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளன.
மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியலை டேட்டா அறிவியல் பாடத்துடன் தொடங்கவும் சமூக பணி முதுநிலை பாடப் பிரிவை புதிதாக தொடங்கவும் திட்டமிட்டு உள்ளது. வருகிற கல்வியாண்டில் 'பி.காம் கார்ப ரேட் செகரட்டரிஷிப் படிப்பை' தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் வில்லியன் ஜாஸ்பர் தெரிவித்தார்.
ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
டேட்டா அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக தேவை உள்ளது என்றும் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்கு பிறகு பாடநெறி கிடைக்கும் என்றும் ஸ்டெல்லா மேரி கல்லூரி யின் முதல்வர் ஸ்டெல்லா மேரி கூறினார்.
டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் ஏற்கனவே உள்ள படிப்புகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. டேட்டா அறிவியல் படிப்புக்கான இன்டர்ன்ஷிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து 2 கிரெடிட் படிப்புகளை மாணவர்கள் படிக்க வைப்போம் என்று முதல்வர் சந்தோஷ் பாபு தெரிவித்தார். அடிப்படை அறிவியல் படிப்புகளை ஊக்குவிக்கவும் கல்லூரி திட்டமிட்டுள்ளது.
கணினி தொடர்பாக படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் பால் வில்சன் கூறுகையில், "வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.
- HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது
- HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 உள்ளது.
HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது . புதிய 'ஸ்மார்ட்போன்'களான HMD பல்ஸ், பல்ஸ்+ மற்றும் பல்ஸ் ப்ரோ ஆகிய 3 வகைகளில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் பல்ஸ் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் பல்ஸ் ப்ரோ மற்றும் பல்ஸ் பிளஸ் மாடல்களில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி606 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்கள் 128 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன, அதே நேரத்தில் வழக்கமான பல்ஸ் 64 ஜிபி. இந்த 3 செல்போன்களும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256ஜிபி வரை விரிவாக்க சேமிப்பகம் உள்ளன.
இந்த செல்போன்கள் Android 14 இயக்க முறைமையில் இயங்குகின்றன, HMD இரண்டு முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு வழங்குகிறது.
பல்ஸ், பல்ஸ் பிளஸ் மற்றும் பல்ஸ் ப்ரோ அனைத்தும் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன. பிளஸ் மாடல் 20W வேகமான சார்ஜிங் உள்ளது, அதே போல் பிளஸ் மாடல்கள் 10W சார்ஜிங் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைபை 5 (ஏசி), புளூடூத் 5.0 மற்றும் என்எப்சி போன்ற வசதிகள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்கள் அதே 6.65-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இதில் 720p தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 600 நிட்கள் வரையிலான உச்ச பிரகாசம் ஆகியவை உள்ளன. பல்ஸ் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது.
பிளஸ் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 3:செல்போன்களிலும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும். பல்ஸ் மற்றும் பல்ஸ் பிளஸ் செல்போன்களில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன.
அதே போல் பல்ஸ் ப்ரோ செல்பிக்களுக்கான 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த செல்போன்கள் எளிதில் பழுது பார்க்கும் தன்மை உடையது.
HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 இந்தியாவில் விரைவில் கிடைக்க உள்ளது.
- மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர்.
- ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 350-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.
புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது. புதுச்சேரியில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.
டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுச்சேரியில் பீருக்கு என தனித்துவமான பார்கள் உள்ளது.
கோடை காலம் வந்துவிட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். இதனால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.
மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக 2 பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.
இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.
சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.
- இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
- இந்த படத்திற்காக ரூ. 200 கோடி பணம் செலவிடுகிறார்.
பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
டைரக்டர் ஆகவேண்டும் என்பது மூத்த மகனின் கனவு அதற்காக தயாராகி வருகிறார். கடைசி மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுகானா கான். அமெரிக்கா 'ஆக்டிங்' ஸ்கூலில் படித்துள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் படம் வெளியாகி, மகத்தான வசூலை அள்ளியது. இந்த படத்தில் இந்திய 'ரா' பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்க உள்ளார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடிக்க உள்ளார். தனது மகள் அறிமுகமாகும் படம் என்பதால், இந்த படத்திற்காக ரூ. 200 கோடி பணம் செலவிடுகிறார்.
இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஷாருக்கான் இப்படத்தில் 'டான்' கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் நீளமான தலைமுடி மற்றும் தாடி வளர்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
இப்படத்தில் சித்தார்த் ஆனந்த் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் சஹானா கானின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் இப்படத்தை ஷாருக்கான் உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 'மே' மாதம் தொடங்க உள்ளது. 2025 -ல் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
- கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.
சென்னிமலை:
ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.
மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.
இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.
- சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
- படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.
அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.
மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,
இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.
இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.
நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
- அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள்
- டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது.
சென்னை:
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.
மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.
சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை
மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.
காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".
இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".
"ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.
இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.
"தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.
"விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார்.
மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
சென்னை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.
அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.
இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.
இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.
முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்