search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary elections 2024"

    • பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் நிர்வாகிகள் சந்திப்புக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட "நிர்வாகிகள் சந்திப்பு" கீழ்க்கண்ட அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, "அண்ணா அறிவாலயத்தில்" நடைபெறும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    • சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்கமடைய செய்துள்ளது
    • இந்தியா கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை

    இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தலைவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிரபல பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

    அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விட்டது.

    மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான். இது தவிர்க்க முடியாதது.

    மனோதிடம் மிக்க அரசியல் தலைவராக தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ள மோடி, இந்துக்கள் அதிகம் உள்ள நாட்டில், இந்துத்வா சித்தாந்தத்தினால் மிக பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.

    மாநிலங்கள் அளவிலும், மத்திய அளவிலும் மோடிக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

    பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், நாடு முழுவதிலுமே 3 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், உட்கட்சி குழப்பங்கள் அக்கட்சியில் அதிகம் காணப்படுகிறது.

    பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா கூட்டணி" கட்சிகளிடம் முக்கிய விஷயங்களில் ஒற்றுமை இல்லை.

    மோடியின் வெற்றி உறுதி; ஆனால், வெற்றியின் அளவை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை வரும் காலம் தெரிவிக்கும்.

    2019ல் பெற்ற பெரும் வெற்றியை மீண்டும் பெறுமா என்பதை தற்போது கூற இயலவில்லை.

    இவ்வாறு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து பொறியியல் பட்டம் பெற்றவர் பவ்யா
    • 2018ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பவ்யா நரசிம்ம மூர்த்தி

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதிகள் மார்ச் முதல் வாரம், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

    இத்தேர்தலை சந்திக்க பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.


    கட்சியினர் ஆற்றும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை (communications coordinator) காங்கிரஸ் நியமித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக, பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    யார் இந்த பவ்யா நரசிம்ம மூர்த்தி?

    பவ்யா நரசிம்ம மூர்த்தி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிறந்து வளர்ந்தவர்.


    எம் எஸ் ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பிருந்தும், அரசியலில் ஈடுபட விரும்பி இந்தியாவிற்கு வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2018ல் அக்கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியுடன் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் மாநில மற்றும் மத்திய தேர்தல் அறிக்கையை தயாரித்தார்.


    பெண்கள் நல்வாழ்விற்காக இயங்கும் காங்கிரஸ் கட்சியின் "பிரியதர்ஷினி" அமைப்பில் தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார்.

    காந்திஜியின் சித்தாந்தங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவரான பவ்யா, பா.ஜ.க. கொண்டு வந்த சிஏஏ-விற்கு (CAA) எதிராக கர்நாடகாவில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

    இள வயதில் அரசியலில் நுழைந்தது குறித்து, "அரசியலில் நுழைய விரும்புபவர்கள் தயக்கமின்றி கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அதை தூய்மைப்படுத்த இள வயதினருக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால், இது நுழைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்கிறார் பவ்யா நரசிம்ம மூர்த்தி.

    • போர் 635 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்ரமித்தது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை பல உலக நாடுகள் முன்னெடுத்தாலும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவற்றை ஏற்கவில்லை.

    இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டாலும், போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    போரினால் ரஷியாவில் உயிரிழப்பு மட்டுமல்லாது உள்நாட்டு பொருளாதாரமும் நலிவடைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    போருக்கு காரணமான புதினுக்கு எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது.

    போருக்கு பிறகு ரஷியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் "யெகேத்ரினா டன்ட்ஸோவா" (Yekaterina Duntsova) எனும் பெண் சுயேட்சை அரசியல்வாதியும் ஒருவர். இவர் முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் புதினுக்கு எதிராக போட்டியிட யெகேத்ரினா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ரஷிய தேர்தல் ஆணையம் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக காரணம் காட்டி மனுவை நிராகரித்தது. அந்நாட்டு தேர்தல் சட்டப்படி, ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது.

    இந்த முடிவை எதிர்த்து ரஷிய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்.

    தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புதினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தேர்தல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது
    • டி.ஆர். பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்

    2024ல் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் படியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் (poll booth agents) கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தி.மு.க.வின் மாநாட்டை போல சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அவருடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முக்கிய மாலை நாளிதழான 'மாலைமலர்' பிரதியை ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தார்.

    மாலைச்செய்திகளை எளிமையாகவும், நடுநிலையுடனும் முந்தி தருவதில் தமிழ்நாட்டின் முதன்மையான நாளேடான, தினத்தந்தி குழுமத்தின் 'மாலைமலர்', முதல்வர் கையில் இடம்பெற்றிருந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ×