search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onmi Buses"

    • ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ்களையும் 24-ந்தேதி மாலை 7 மணியில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. இதுவரையில் ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தப்படி ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.

    முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். நாளை (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×