என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர்.
- நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவை மாற்ற வேண்டும், இந்தக் குழு எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இவர், கடந்த ஆண்டு வேங்கை வயலுக்கு சென்று கள ஆய்வு செய்ததுடன், கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த விசாரணை அறிக்கையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது. இந்நிலையில் 31 பேரின் டி.என்.ஏ. பரிசோதனை கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த பரிசோதனை முடிவு இன்று கொடுக்கப்பட்டது. அதில் 31 பேரின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் விசாரணையில் மிகப்பெரிய பின்னடைவு பெற்றுள்ளது.
- வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்.
- வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது, கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்புகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல.
- இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் தொட்டு பால ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டியதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி ராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும்!"-என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.
மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள்-குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.

உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.
அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.
இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்கபரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பா.ஜ.க. கும்பல், இந்துப் பெரும் பான்மைவாதம், இசுலாமிய-கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவர்கள் என்றும் பிளவு படுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.
ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.
இதனை அனைத்துத் தரப்பு இந்து மக்கள் யாவரும் உணர்ந்து, சங்கபரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
- தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.
சென்னை:
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மை தான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆனால் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்.
நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
- தமிழகம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். புதுவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன். தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றியும் இப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமேசுவரம்:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ராமேசுவரம் வருகை தந்தார். 20-ந்தேதி பிற்பகலில் வந்த அவர் அன்று இரவு ராமேசுவரத்திலேயே தங்கினார். மறுநாள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பிரதமரின் பயணம் நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் பலர் கடலில் வீசியிருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர்.
ஆனாலும் விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக் கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, இரண்டு விசைப்படகுகளுடன் 6 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் தவிக்கும் 40 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.
- உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, கவர்னருடன் நட்பு ஆகியவற்றை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.
இது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனால் இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது.
கொடநாடு சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொது நலன் அடிப்படையில் கருத்து தெரிவித்தேன்.
எனவே, எனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பதில் மனுவில் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ந் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ் குமார் தள்ளிவைத்தார்.
- கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
- மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் 'இறுதி நாயகர்கள்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.

ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.

மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
- பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்!
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்! என கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
— Udhay (@Udhaystalin) January 23, 2024
மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி #INDIA கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் அவர்களின் கரங்களில் சேர்க்க அயராது… pic.twitter.com/iX4SOi6iQ4
இப்பதிவுடன் 7 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் இணைத்துள்ளார்.
- ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....
- எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....
சென்னை:
தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கவிதை நடையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்"
பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்"
ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்".
அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா "ராம்"
ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"
அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை
வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி
அதுவே நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....
எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்...
எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை அங்கு தேடி மோடி வந்தார்....
11 நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....
சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை
சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து
ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க
ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....
இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு
அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....
வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று... வென்று பெற்றவர்களுக்கு
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....
தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....
என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை....
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கும் பார் வெள்ளி ரூ.76,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமுமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கும் ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கும் பார் வெள்ளி ரூ.76,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.
- மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.






