என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Book Publishing"

    • இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும்.
    • நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

    காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்!

    வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

    தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற - உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த - பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக் "#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்" நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி!

    ஆதிக்கமும் - சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
    • மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் 'இறுதி நாயகர்கள்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

    வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.


    ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.

    மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.


    மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நூல் வெளியீட்டு விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
    • டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கடந்த 4ம் தேதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அப்போது, தமிழ்தாய் வாழ்த்துக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒளிக்கப்பட்டது. ஆனால், அது புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாகும். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

    04/01/2025 அன்று காலை, சென்னை புத்தகக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில், பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து, அதற்கான அரங்கு அமைத்துக் கொடுத்தோம்.

    அரசியல் தாக்குதல் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன், அரசியல் பாரபட்சமற்று பபாசி அமைப்பும் இதற்கான அனுமதியை வழங்கியது.

    பபாசி அமைப்பின் ஒரு உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவில் செயலாற்றியவன் என்ற முறையில் எனக்குள்ள பொறுப்புடன், சீமான் அவர்களிடமும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது.

    விழா தொடங்கிய அன்று மேடையில் பெரும்பான்மையான திட்டங்களை நூலாசிரியர் பாலமுரளிவர்மன் அவர்கள் பார்த்துக்கொண்டார். சீமான் அவர்களின் விருப்பத்தின் பேரில் பாரதிதாசன் அவர்களின் 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே! என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

    பாரதிதாசன் பாடல் என்பதால் நானும் அதை இயல்பாக எடுத்துக்கொண்டேன். அது பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்றோ. இதன்மூலம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்ற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது எனது அறியாமையே, அதற்காக நான் வருந்துகிறேன்.

    அதோடு, சீமான் அவர்கள், நல்லதொரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்துப் பேசிய கருத்துக்கள் எனக்கோ, எங்களின் பபாசி அமைப்பிற்கோ விருப்பமில்லாதது. நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை.

    பொது மேடையில் சீமான் அவர்களின் உரையில் குறுக்கிடுவது நாகரிகமாக இருக்காது என்பதால் அனைவரும் அமைதி காத்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறோம்.

    டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம், கடந்த 15 ஆண்டுகளாக சென்னையின் இலக்கிய அடையாளங்களில் ஒன்றாக கலைஞர் கருணாநிதி நகரில் செயல்பட்டு வருகிறது. அரசியல் சார்பற்று, வாசிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, எல்லா வகையான இலக்கியங்களையும் வெளியிட்டு வருகிறோம்.

    எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்திற்கு, தகுந்த ஆலோசனைகள் வழங்காமல், ஒட்டுமொத்தமாக எங்களின் இலக்கியச் செயல்பாடுகளை முடக்குவதற்குத் திட்டமிடுவது வருந்தத்தக்கது.

    இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி ஏற்றுள்ளோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்திடம் மாலைமலர் சார்பில் நேர்காணல் எடுத்தோம்.
    • 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள ஷ்ரவந்த் தனது எழுத்தாளர் பயணம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

    15 வயதில் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், தொகுப்பாளராகவும் பன்முகத் திறனுடன் வளம் வரும் இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்திடம் மாலைமலர் சார்பில் நேர்காணல் எடுத்தோம்.

    அப்போது, இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள ஷ்ரவந்த் தனது எழுத்தாளர் பயணம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

    அவர் பேசியதாவது:-

    எனக்கு 7 வயது இருக்கும்போது தான் புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. ஒரு முறை எனது தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது சாக்லேட்டிற்கு பதில் இரண்டு புத்தகங்களை வாங்கி வந்தார். அதுவரை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

    ஒரு நாள் அந்த புத்தகத்தை படிக்கலாம் என்று திடீரென தோன்றியது. ராணுவம் தொடர்பான புத்தகம் அது. எனக்கும் ராணுவம் மீது ஆர்வம் இருந்ததால் அந்த புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது. அப்படி தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனவும் உருவானது.

    7 வயது முதல் 10 வயது வரை நிறைய புத்தகங்களை படித்தேன். சுமார் 450க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளேன். பல வகை புத்தகங்கள், பல ஆசிரியர்களின் புத்தகங்களை வாசித்துள்ளேன்.

    10 வயதிற்கு மேல் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, கொரோனா லாக்டவுன் காலங்களில் நிறைய நேரம் இருந்தது. அப்போது, ஏன் எழுத முயற்சிக்க கூடாது என்று டைரியில் கதையாக எழுத ஆரம்பித்தேன். 44 சிறு கதைகளை எழுதினேன்.

    அப்போதுதான் என் தந்தை ஏன் இதனை புத்தகமாக வெளியிடக்கூடாது என்று கேட்டார். முதலில் தயங்கினேன். பிறகு சரி அதையும் பார்ப்போம் என்று நான் எழுதிய கதைகளை கொண்டு வேறு ஒரு கதையின் கருவை உருவாக்கினேன். பிறகு, கதைக் கருவை முழுமையாக்கினேன். ஆரம்பத்தில் பதிப்பாளர்கள் என் புத்தகத்தை வெளியிட தயங்கினர். பிறகு, என் மீது நம்பிக்கை வைத்து வெளியிட்டனர்.

    இப்படி இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். முதல் புத்தகம் 2021ல் தி அபிஸ்மல் தீப் அண்டு அதர் ஸ்டேரீஸ் என்கிற புத்தகத்தை வெளியிட்டேன்.

    பிறகு, தி மேஜிக்கல் பிளிட்ஸ், தி டீவியஸ் பேர்சன், தி ஷேடோ லார்ஜனிஸ்ட் ஆகிய புத்தகங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டேன். 

    இந்த ஆண்டு எனது 5வது புத்தகமாக தி டிடக்டிவ் டைலமோ என்கிற புத்தகத்தை வெளியிட்டிருப்பதில் மகிழ்ச்சி.

    ஒரு பக்கம் படிப்பு, ஒரு பக்கம் எழுத்தாளர் பயணம். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எனது வேலைகளை முதலில் பட்டியலிட்டு விடுவேன். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த பிறகு, படிப்பதற்கும், எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கிவிடுவேன். அதன் பிறகு, வீட்டு பாடங்களையும், பாடங்களை படிப்பதையும் முடித்து விடுவேன். இவ்வாறு நேரம் ஒதுக்குவதால்தான் என்னால் அனைத்தையும் முடிக்க முடிகிறது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆளுநர் உள்ளிட்டோரை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர்கள் எனக்கு நிறைய யோசனைகளை தந்துள்ளனர். அதனை என் வாழ்வில் பொருத்த முயற்சிக்கிறேன். அது எனக்கு பல இடங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    எனது நண்பர்கள் இரண்டு பேர் என்னை பார்த்து உத்வேகமடைந்து இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அதை எனது சாதனையாகவும் நான் கருதுகிறேன்.

    இந்த தருணத்தில் எனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    எனது இறுதி காலம் வரை நான் புத்தகங்களை வாசிக்கவும், எழுதுவதையும் நிறுத்த மாட்டேன். அது என்னுடைய பேஷன். எதிர்காலத்தில் ஐஐடியில் சேர விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×