என் மலர்
நீங்கள் தேடியது "கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்"
- காட்டாங்கொளத்தூர் பகுதியில் சென்றபோது வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி சாலையில் கிடந்தார்.
- தமிழிசை சவுந்தரராஜன் டாக்டர் என்பதால் அந்த வாலிபரின் நாடி துடிப்பை முதலில் பரிசோதித்தார்.
சென்னை:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று சாலை மார்க்கமாக புதுச்சேரி நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்தார். காட்டாங்கொளத்தூர் பகுதியில் சென்றபோது வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி சாலையில் கிடந்தார்.
இதனை கவனித்த கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக காரை நிறுத்த சொன்னார். தமிழிசை சவுந்தரராஜன் டாக்டர் என்பதால் அந்த வாலிபரின் நாடி துடிப்பை முதலில் பரிசோதித்தார்.
பின்னர் தனது காரில் இருந்த முதலுதவி சிகிச்சை பெட்டகத்தை எடுத்து வர சொன்னார். அதன் மூலம் காயமடைந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் சகஜ நிலைக்கு திரும்பினார். அப்போது அவரிடம், உங்களுக்கு வேறு எங்கேனும் வலி இருக்கிறதா? என்று அக்கறையுடன் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டறிந்தார்.
பின்னர் ஆம்புலன்சு வாகனத்தை வரவழைத்து அந்த வாலிபரை மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அப்போது தைரியமாக இருங்கள் என்று சொல்லி அந்த நபருக்கு நம்பிக்கை ஊட்டினார். அந்த வாலிபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த மனிதநேய பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள்.
- பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்... சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.
சென்னை:
கவர்னர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று தி.மு.க. சார்பில் வெளியிட்ட கட்டுரைக்கு கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே.... உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா?
எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி கவர்னரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள். சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா?
உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம்) எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது.
தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு தெலுங்கானாவின் கவர்னராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை.
என்னை யார் தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது... யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகள் தெலுங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலுங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும். மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்காக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதை அங்கே உள்ள முக்கிய பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும்,முக்கிய செய்தியாகவும் அன்று மாலையே தொலைக்காட்சிகளில் விவாத பொருளாகவும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனக்கு பதில் சொல்ல ஆட்சியாளர்களும் குடும்ப வாரிசுகளும் அமைச்சர்களும் கங்கனம் கட்டி நிற்பதே அதற்கு சாட்சி. அங்கே மக்களுக்காக ஆட்சியாளர்களை திணறடிக்கும் என்னை கை பிசைந்து நிற்பதாக கனவு காண்கிறீர்கள்.
கவர்னருக்குரிய மரியாதையை தர தவறியதன் விளைவுகளை கண்டு தான் உங்களுக்கு பரமானந்தம் என்றால் அது மாதிரியான அற்ப சந்தோசம்தான் உங்களுக்கு கிட்டும். இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் கவர்னர் மாளிகை மீது கோபம். தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம். நான் பொது வெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும், திராணியும் அற்றவர்கள் தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி அண்டை மாநிலத்தில் மக்கள் பணியாற்றும் நான் கருத்து கூறினால் அதை எதிர்த்து கட்டுரை எழுதுவது தான் உங்கள் கருத்து சுதந்திரமா? நீங்கள் எரிமலைகள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது.
குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள்.
பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்... சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாதபோது... இந்த கட்டுரை எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தெலுங்கானா அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
- தெலுங்கானாவில் உள்ள போலீசார் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், எதிர்கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பா.ஜ.க.வையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுப்பதற்காக தலா ரூ.100 கோடிக்கு பேரம் பேசியதாக கூறி 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பா.ஜ.க.வை சேர்ந்த தருமபுரி அரவிந்த் எம்.பி முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா காங்கிரஸில் சேர உள்ளதாக கூறிய சம்பவத்தில் டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினர்.
இதில் தர்மபுரி அரவிந்தன் வீட்டு கதவு ஜன்னல்கள் உடைந்து சேதம் அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தாக்குதல் சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக தர்மபுரி அரவிந்த் எம்.பி குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை அவசர அவசரமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள போலீசார் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தெலுங்கானா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார்.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.
புதுச்சேரி:
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் காசியில் நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், புதுவை கவர்னர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.
இதையேற்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார். நாளை 25-ந் தேதி வாரணாசியில் தங்கி அங்கு நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.
- வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
- ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை.
தூத்துக்குடி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இது நமக்கெல்லாம் பெருமைமிக்க நிகழ்வு. இதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதே போல இன்று நாம் ஒரு முன்னேற்றமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அதுமட்டுமல்ல, தற்போது மூக்கில் சொட்டு மருந்து தடுப்பூசி தமிழகத்தை சேர்ந்த பயோடெக் நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போதும் பொது முடக்கம் உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தில் இருந்தும் நாம் தப்பித்தோம் தடுப்பூசி தான் காரணம். இதற்காக அதற்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடி மற்றும் மாநில அரசுகள், ஏற்றுக்கொண்ட மக்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக ஆளுனரை திரும்ப பெற வேண்டும் என தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி கவர்னராக உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளிக்கையில், அரசியல் ரீதியாக 'ஆன்லைன் ரம்மி' சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுனர் சில தகவல்களை சொல்லி இருக்கிறார்.
ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை. அவர்கள் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். விளக்கம் கிடைத்ததும் அவர் அதற்கான முடிவு எடுக்கலாம்.
ஒரு ஆளுனருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது. அதில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை கேட்பதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும்.
- 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் திராவிட மாடல் ஆட்சி மலரும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் புதுவையில் பங்கேற்ற திருமண விழாவில் பேசினார்.
இது தொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் தற்போது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழகத்திலிருந்து 300 ஏக்கர் நிலம் தான் தற்போது தேவை.
புதுவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிலத்தை முதலில் அவர் தரட்டும். திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை.
புதுவையில் கவர்னரின் தலையீடு என குற்றம் சாட்டுகிறார்கள். ஆளாளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட கவர்னரின் தலையீடு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் கவர்னர் பங்கெடுக்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் இங்கு பேசியது சரியில்லை. ஒற்றுமையாக ஆட்சி இங்கு நடக்கிறது.
கர்நாடகத்தில்தான் முதல்-மந்திரி பொம்மை தலைமையில் ஆட்சி நடக்கிறது. புதுவையில் அல்ல. திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும். அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பதுதான் திராவிட மாடலோ? 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- தியாகபிரம்மம் தனது கீா்த்தனைகளால் தன்னை மறந்து அப்படியே இறைவனிடம் சமா்ப்பித்தாா்.
- தமிழ் நமக்கு உயிா்தான். மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும்.
திருவையாறு:
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176-ஆவது ஆராதனை விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தியாகபிரம்மம் ஆந்திரத்திலிருந்து இங்கு குடியமா்ந்து, தெலுங்கும், வட மொழியும் கற்றுக்கொண்டு, தமிழகத்தில் இருந்தாா். அதுதான் மிகப் பிரம்மாண்டமான எண்ணம். இந்த நிலையை நாம் மறுக்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போதுதான் இங்கே தியாகபிரம்மத்தின் இசையைக் கேட்பதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனா்.
தியாகபிரம்மம் தனது கீா்த்தனைகளால் தன்னை மறந்து அப்படியே இறைவனிடம் சமா்ப்பித்தாா். அதை இறைவனும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டாா்.
நாம் அனைத்து மதங்களையும் துதிக்கவும், மதிக்கவும் வேண்டும். அந்தந்த மதத்திலுள்ள நல்லவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்நிகழ்வில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.
தமிழ் நமக்கு உயிா்தான். மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை அவா்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்.
பாடல்களுக்கும், ராகங்களுக்கும் நோய்களைத் தீா்க்கும் சக்தி இருக்கிறது என்பதை நம்புகிறேன். அதனால், குழந்தைகளுக்கு கீா்த்தனைகளையும், ராகங்களையும் அதிகமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என சொல்கின்றனா்.
நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததை அன்றே மெய்ஞானம் திருவையாறில் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவா் ஜி.கே.வாசன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், அறங்காவலா்கள் சந்திரசேகர மூப்பனாா், சுரேஷ் மூப்பனாா், டெக்கான் மூா்த்தி உள்ளிட்டோா் பலர் கலந்து கொண்டனா்.
இதனை தொடர்ந்து ரஞ்சனி, காயத்ரி பாட்டு கச்சேரி நடந்தது. பின்னர் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாபாட்டு, ஜெயந்த் புல்லங்குழல் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று காலை திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம், தவில் வாசித்தனர். தொடர்ந்து பாட்டு, வயலின், மிருந்தங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
- கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து கவர்னர் உறியடித்தார். தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவர்னர் தமிழிசை கண்டுகளித்து கலைஞர்களை பாராட்டினார். மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அங்காளன், வி.பி.ராமலிங்கம், என்ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால் மற்றும் அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவால் பொங்கல், சாம்பார், பல வகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது.
பொங்கல் விழாவுக்கு வந்த தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் உதயகுமார், அபிஜித்விஜய் சவூத்திரி, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர்.
காலை 8 மணிக்கு விழா தொடங்கினாலும் முதலமைச்சர் ரங்கசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். இதனால் கவர்னர் தமிழிசை 2½ மணி நேரம் காத்திருந்தார். முதலமைச்சர் ரங்கசாமி வந்த பிறகே விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டது.
- முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான்
- தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ராமச்சந்திர நாடாரின் திருவுருவச் சிலை, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் வி.டி.பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் பி.சந்திரசேகர பாண்டியன் நாடார் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் எம்.மாரி தங்கம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ராமச்சந்திரா நாடாரின் மனைவி எஸ்.ஆர்.காந்திமதி, வரதலட்சுமி ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், டாக்டர் கிருஷ்ணன், டி.சிவபால் நாடார், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ஆர்.எஸ்.முத்து ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தெலுங்கானாவின் கவர்னரும், புதுச்சேரியின் துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு எஸ்.ராமச்சந்திர நாடாரின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
இதில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் செயலாளர்கள் டி.ராஜ்குமார் நாடார், ஆர்.சுந்தரேஸ்வரன் நாடார், கொட்டிவாக்கம் ஏ.முருகன் நாடார், துணைத்தலைவர்கள் ஒய்.இம்மானுவேல் நாடார், எஸ்.தேவதாஸ் நாடார், எஸ்.பத்மநாபன் நாடார், ஆர்.பிரபு நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
காமராஜர் வழிவந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு மகுடம், கடினமான உழைப்பு தான். எது இருக்கிறதோ? இல்லையோ? உழைப்பாளி என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வார்த்தை. பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, தொலைக்காட்சியில் பேசும்போது, 'என்னை ஒரு தலைவர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்' என்றார். அவர் வட இந்திய தலைவரையோ, குஜராத்தை சேர்ந்த தலைவரையோ சொல்லவில்லை. காமராஜரை பற்றிதான் சொன்னார். அந்த அளவுக்கு நேர்மையான, வளர்ச்சிக்கான ஒரு ஆட்சியை இன்று வரை யாராவது உதாரணம் காண்பிக்க முடியும் என்றால், அது காமராஜர் ஆட்சிதான்.
காமராஜரின் வழித்தோன்றல்களாக இருக்கக் கூடிய நாம், அவருடைய பெயரை காப்பாற்ற வேண்டும்.
முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான். ஆட்சி மொழியாக மட்டுமல்ல பயிற்று மொழியாக்கவும் சட்டசபையில் குரல் கொடுத்தவர். 1959-ம் ஆண்டிலேயே தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினார். இன்று தமிழகமா? தமிழ்நாடா? என்ற விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழை ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கியது, காமராஜர்தான். இந்த சரித்திரத்தை யாரும் மாற்றி அமைத்துவிட முடியாது. 1957, 58 நிதி நிலை அறிக்கையை சி. சுப்பிரமணியம் தாக்கல் செய்யும்போது, அறிக்கையை தமிழில் தாக்கல் செய்தார். ஆனால் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்பவருக்கு தமிழ் சரியாக வராது என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றும் மசோதாவை முன்மொழிந்த சி.சுப்பிரமணியம், மெட்ராஸ் மகாணம் இனி தமிழ்நாடு என்ற பெயரோடு அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டசபை, தமிழ்நாடு அரசு என்று அழைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அது காமராஜர் ஆட்சி. ஆக தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கு முதலில் காமராஜர், அதற்கு பின் அண்ணா காரணம். ஏனென்றால் யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. பின்னர், 1967-ல் அண்ணா சட்டமாக ஆக்கினார். ஆக அறிவித்த காமராஜருக்கும் பெருமை. அதை சட்ட மாக்கிய அண்ணாவுக்கும் பெருமை சேர்ந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
- அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
சென்னை:
புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.
- நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.
புதுச்சேரி:
தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.
ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில் நடந்தது. ஆரோவில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். விடுதலை போராட்ட காலத்தில் புதுவை ஒரு தாயின் மடியைபோல பலரை அரவணைத்து, அரவிந்தர், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றோருக்கு புகலிடமாக இருந்தது.
ஆரோவில் நகரத்தில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் சரிசெய்வதற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், கவர்னரின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.
அவ்வளவு எளிதாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது. நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.
தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுவையில் அதை முதலமைச்சருடன் சேர்ந்து வழங்க உள்ளோம்.
மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆரோவில் மாணவிகள் கவர்னர் தமிழிசைக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆரோவில் அமைப்பின் செயலாளர் ஜெயந்தி ரவி தலைமையில் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.
- நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார்.
புதுச்சேரி:
புதுவை கடலூர் சாலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கத்திற்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு பேசியதாவது:-
புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இங்கு போதிய டாக்டர்களுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இதை முதலமைச்சர் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வக்கீல்களுக்கு உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட வேண்டும். யோகா மையமும் அமைக்கப்பட வேண்டும். இவை அமைந்தால் மருத்துவ சிகிச்சை மையமே தேவைப்படாது.
இது நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக அமையும். நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார். நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம்.
நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும். தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம். வரும் காலத்தில் கோர்ட்டில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






