search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  தமிழ்நாடு என்று பெயர் வர முதல் காரணம் காமராஜர்- கவர்னர் டாக்டர் தமிழிசை
  X

  தமிழ்நாடு என்று பெயர் வர முதல் காரணம் காமராஜர்- கவர்னர் டாக்டர் தமிழிசை

  • முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான்
  • தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  சென்னை:

  நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ராமச்சந்திர நாடாரின் திருவுருவச் சிலை, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.

  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் வி.டி.பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் பி.சந்திரசேகர பாண்டியன் நாடார் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் எம்.மாரி தங்கம் முன்னிலை வகித்தார்.

  சிறப்பு விருந்தினர்களாக ராமச்சந்திரா நாடாரின் மனைவி எஸ்.ஆர்.காந்திமதி, வரதலட்சுமி ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், டாக்டர் கிருஷ்ணன், டி.சிவபால் நாடார், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ஆர்.எஸ்.முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில், தெலுங்கானாவின் கவர்னரும், புதுச்சேரியின் துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு எஸ்.ராமச்சந்திர நாடாரின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.

  இதில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் செயலாளர்கள் டி.ராஜ்குமார் நாடார், ஆர்.சுந்தரேஸ்வரன் நாடார், கொட்டிவாக்கம் ஏ.முருகன் நாடார், துணைத்தலைவர்கள் ஒய்.இம்மானுவேல் நாடார், எஸ்.தேவதாஸ் நாடார், எஸ்.பத்மநாபன் நாடார், ஆர்.பிரபு நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

  காமராஜர் வழிவந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு மகுடம், கடினமான உழைப்பு தான். எது இருக்கிறதோ? இல்லையோ? உழைப்பாளி என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வார்த்தை. பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, தொலைக்காட்சியில் பேசும்போது, 'என்னை ஒரு தலைவர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்' என்றார். அவர் வட இந்திய தலைவரையோ, குஜராத்தை சேர்ந்த தலைவரையோ சொல்லவில்லை. காமராஜரை பற்றிதான் சொன்னார். அந்த அளவுக்கு நேர்மையான, வளர்ச்சிக்கான ஒரு ஆட்சியை இன்று வரை யாராவது உதாரணம் காண்பிக்க முடியும் என்றால், அது காமராஜர் ஆட்சிதான்.

  காமராஜரின் வழித்தோன்றல்களாக இருக்கக் கூடிய நாம், அவருடைய பெயரை காப்பாற்ற வேண்டும்.

  முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான். ஆட்சி மொழியாக மட்டுமல்ல பயிற்று மொழியாக்கவும் சட்டசபையில் குரல் கொடுத்தவர். 1959-ம் ஆண்டிலேயே தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினார். இன்று தமிழகமா? தமிழ்நாடா? என்ற விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழை ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கியது, காமராஜர்தான். இந்த சரித்திரத்தை யாரும் மாற்றி அமைத்துவிட முடியாது. 1957, 58 நிதி நிலை அறிக்கையை சி. சுப்பிரமணியம் தாக்கல் செய்யும்போது, அறிக்கையை தமிழில் தாக்கல் செய்தார். ஆனால் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்பவருக்கு தமிழ் சரியாக வராது என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றும் மசோதாவை முன்மொழிந்த சி.சுப்பிரமணியம், மெட்ராஸ் மகாணம் இனி தமிழ்நாடு என்ற பெயரோடு அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டசபை, தமிழ்நாடு அரசு என்று அழைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அது காமராஜர் ஆட்சி. ஆக தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கு முதலில் காமராஜர், அதற்கு பின் அண்ணா காரணம். ஏனென்றால் யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. பின்னர், 1967-ல் அண்ணா சட்டமாக ஆக்கினார். ஆக அறிவித்த காமராஜருக்கும் பெருமை. அதை சட்ட மாக்கிய அண்ணாவுக்கும் பெருமை சேர்ந்தது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×