என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: -
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்துக்களை நாங்கள் தான் வளர்த்தோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்துக்கள் தாங்களாகவே வளர்ந்தார்கள்.

மனைவியை கூட கவனிக்க முடியாத பிரதமர், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறு. அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
வடபழனி, மசூதி தெருவை சேர்ந்தவர் தருண். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக தருண் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நடை மேடையில் காத்திருந்தார்.
அப்போது மெட்ரோ ரெயில் வந்தபோது திடீரென தருண் ரெயில் முன்பாய்ந்தார். என்ஜின் முன்பு சிக்கிய அவரை சிறிது தூரம் மெட்ரோ ரெயில் இழுத்து சென்று நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தருண் அலறி துடித்தார். இதனை கண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பலத்த காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர் தருணின் பெற்றோர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். தருண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நடைமேடையில் நிற்பதற்காக மெட்ரோ ரெயில் குறைந்த வேகத்தில் வந்ததால் அவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து மீன்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார்.
- அமைச்சரின் உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை:
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் (வயது 40). இவர் குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று கோவைக்கு வந்த அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அமைச்சர் மதிவேந்தன் ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் தங்கி உள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவில் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா அல்லது சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.
- விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடம் போன்ற பல்வேறு கட்டிடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- சத்தியமங்கலம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடம் போன்ற பல்வேறு கட்டிடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அணுகு சாலை ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதே போல் சத்தியமங்கலம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.
- கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.
ஜோலார்பேட்டை:
பெங்களூரைச் சேர்ந்தவர் ரத்னாஜெயின் (வயது 50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் நடக்க உள்ளது.
இதில் ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.
அதன்படி ஹெலிகாப்டர் திடீரென ஏலகிரி மலையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வந்து தரை இறங்கியது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், ஹெலிகாப்டரை காண அந்த இடத்தில் குவிந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டரை தரை இறங்கியது குறித்து விளக்கம் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஏலகிரி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிஇன்றி ஹெலிகாப்டர் தரை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.
இது குறித்து அந்த தனியார் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினோம்.
அதன்படி கல்லூரி முதல்வர் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார். இனிமேல் ஹெலிகாப்டரை தரை இறங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
- வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோர முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது.
- ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது.
மேட்டூர்:
மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.
குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான ராட்சத குழாயை நீக்கி புதிய குழாய் அமைத்தால் உடைப்பு ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
விழுப்புரம்:
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
- அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மட்டுமே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
- மதுரை மாவட்டத்தில் 4 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை:
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சிறப்பாக நடந்து முடிந்தன. அடுத்தகட்டமாக, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதையொட்டி பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை நாளை (24-ந்தேதி) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்து கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கைத் திறந்து வைத்து புதிய அரங்கில் நடக்கும் போட்டியையும் தொடங்கி வைக்கிறார்.

இதுவரை கம்புகளைக் கொண்டு அமைத்த கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக் கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒருவித பதற்றத்துடன் பார்த்து வந்தனர். கிரிக்கெட் மைதானம் போல் மிகப் பிரம்மாண்டமாக உயர்தொழில் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அரங்கில் பார்வையாளர்கள் பிரமாண்ட கேலரிகளில் அமர்ந்து முதல்முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க ஆவலாக உள்ளனர்.

இதற்காக கீழக்கரை கிராமத்தில் 77,683 சதுர அடியில் இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கலாம். மேலும் இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகள் மற்றும் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வண்ணம் தரையில் தேங்காய் நார்கள் பரப்பி விடப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மட்டுமே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியும் அரசு சார்பில் நடத்தப்படுவதால் இனி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் 4 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாகப் பார்க்க முடியாத உள்ளூர், வெளியூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட, மாநில மக்கள், வெளிநாட்டினர் இந்த புதிய அரங்குக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் வசதிகளை போல் இந்த புதிய என்னென்ன வசதிகள் கிடைக்குமோ? அத்தனை வசதிகளும் இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து கீழக்கரை கிராமத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
- ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது.
- பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
இந்த ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது. ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேப்போல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சிறுகுறு வியாபாரிகளும் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் சூடு பிடித்தது. பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று ஜவுளி வாரச்சந்தை கூடியது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவே இல்லை. கேரளாவில் இருந்து மற்றும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதேபோல் சில்லரை வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று கூடிய ஜவுளி வார சந்தையிலும் வெளி மாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இனி வரக்கூடிய நாட்களில் தைப்பூசத்தையொட்டி வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
- மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை:
நாடு முழுவதும குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளிலும் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.






