என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு"

    • இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
    • ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அவனியாபுரம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கத்திற்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தாங்களே எடுத்து நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் அவர்கள் அமைச்சரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், மதுரைக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையிலே 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வருகை தர உள்ளனர். எப்போதும் போல் 3 ஜல்லிக்கட்டிலும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். எந்தவித பாகுபாடும் இன்றி இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும் என்றார்.

    • காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள், உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.

    அதன்படி வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய மாடு வளர்ப்போர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். நீச்சல், மண் குத்துதல், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளோடு, சத்தான தீவணங்களையும் வழங்கி வருகின்றனர். முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் பரிசோதனை இன்று தொடங்கியது. அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கானோர் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர்.

    காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள், உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அவற்றுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கால்நடை மருத்துவர் உள்பட 3 பேர் கொண்ட குழுவினர், நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல சோதனைகளை செய்தனர். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான உயரம் 120 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். கொம்பு கூர்மையாக இருக்க கூடாது. கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.

    • மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
    • அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த நிலையில் அவனியாபுரம் முனியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

    அதில் அவனியாபுரத்தில் கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. நடப்பாண்டு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் வைத்து நடத்தும் சூழல் உள்ளது. பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

    கோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசார ணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசு அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு நடத்துகிறது. அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைக்க வேண்டியது அவசியமாகும். கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் அனைத்து சமூக பிரதிநிதிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும்.

    இதில் தீர்வு ஏற்படாவிட்டால் ஒருங்கிணைப்பு குழுவில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை சேர்த்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களில் 16 பேரை தேர்வு செய்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தென்கால் பாசன விவசாய சங்கத்தினருக்கும், அவனியாபுரம் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தல் சலசலப்பு ஏற்பட்டது.

    • இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெற்றது.
    • ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை புதிதாக அமைக்கப்பட்ட கமிட்டி வழங்கும்

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடா்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து சமுதாயக் குழுக் கூட்டத்தை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டது. அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது. மொத்தம் 62 பேர் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ளவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

    • ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
    • காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அவனியாபுரம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளையும் (15-ந் தேதி), 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி ஆகிய இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நிலவியது. இது தொடர்பான வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி சமாதான கூட்டம் நடந்தது. இதில் முடிவு எதுவும் எட்டப்படாதால் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.17 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று வாடிவாசல் அமைப்பது, தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை, கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    மதுரை மாவட்டத்தில் நடக்கும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு இணையதளம் மூலம் கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9, 699 காளைகளும் 5,399 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

    நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை சிவகங்கை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் களம் காண்கின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் சுழற்சி அடிப்படை அடிப்படையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படுபவர்கள் களத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமையில் துணை ஆணையர் சாய் பிரணீத் மேற்பார்வையில் 15 உதவி கமிஷனர்கள் 45 இன்ஸ்பெக்டர்கள் 150 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
    • பிற்பகல் நிலவரப்படி இந்த ஜல்லிக்கட்டில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

    மதுரை:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9ம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருக்கிறார். அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    பிற்பகல் நிலவரப்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 45 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளாக நடத்தப்பட்டது
    • அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் விஜய். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப்பிடித்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.

    விஜய் மூன்றாம் முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2020, 2021ம் ஆண்டுகளிலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

    காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    • ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.

    2024 பொங்கல் பண்டிகைகைய முன்னிட்டு, மதுரை ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து, ஜனவரி 16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    மேலும், மாடு பிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

    மேலும், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.

    போட்டிகள் தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.
    • காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

    மதுரை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.

    * காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்க இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி.

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

    * காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

    * காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

    * ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம்.

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும்.

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக்கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை.

    * அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    • ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

    மதுரை:

    தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்பாட்டையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டும், பொங்கலை வரவேற்கும் விதமாகவும் நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. நாளை (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், நாளை மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

    இதில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜல்லிக்கட்டு நடக்கும் இந்த 3 இடங்களிலும் கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

    குறிப்பாக, அவனியாபுரத்தில் 2,400 காளைகள், 1,318 மாடுபிடி வீரர்கள், பாலமேட்டில் 3,677 காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள், அலங்காநல்லூரில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு ரூ.26½ லட்சம் செலவில் கேலரி, தடுப்பு கட்டைகள் கட்டும் பணி, வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் அழைத்து வரும் இடம், பார்வையாளர்கள் கேலரி மற்றும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடுகள் முடியும் நிலையில் உள்ளது. இன்று மாலைக்குள் அவை நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் முதல் நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பயிற்சி பெற்ற காளைகளும், மாடுபிடி வீரர்களும் களம் இறங்க தயார் நிலையில் இருக்கிறார்கள். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.

    நாளை மறுநாள் (16-ந்தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா அரசு வழிகாட்டுதலுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி நடைபெறும் என்றும், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் வழங்கும் ஒரு கார் மற்றும் 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் மதிப்பில் கன்று குட்டியுடன் நாட்டு பசுமாடும் வழங்க உள்ளோம். சிறந்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக ஒரு கார் மற்றும் 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதனை கலெக்டர் சங்கீதா தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவுசெய்து தகுதிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். பாலமேடு பேரூராட்சியின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அரசு வழிகாட்டுதல் படி 17-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அலங்காநல்லூருக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். அவர்களுக்கு தனியாக மேடை வசதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

    • காலை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
    • வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

    இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வேலைகள் சிறப்பாக நடந்து வந்த நிலையில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைசசர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதனை தொடந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

    இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமாக மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    • 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார்.
    • 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.

    இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த , 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    25 காளை உரிமையாளர்கள், 22 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்களை, 2 போலீசார் என 51 பேர் காயமடைந்துள்ளனர்.

    ×