என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருகிற 15-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகளுக்கான உடற்தகுதி பரிசோதனை தொடக்கம்
- காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள், உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
- ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
அதன்படி வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய மாடு வளர்ப்போர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். நீச்சல், மண் குத்துதல், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளோடு, சத்தான தீவணங்களையும் வழங்கி வருகின்றனர். முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் பரிசோதனை இன்று தொடங்கியது. அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கானோர் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர்.
காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள், உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அவற்றுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவர் உள்பட 3 பேர் கொண்ட குழுவினர், நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல சோதனைகளை செய்தனர். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான உயரம் 120 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். கொம்பு கூர்மையாக இருக்க கூடாது. கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.






