என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
- பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைைமச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது.
இதில் மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கு சம வாயப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும், மாநில மகளிர் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த கொள்கை மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
2001-ல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் மகளிர் கொள்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாநில அரசுக்கு என தனியாக மகளிர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
- மாதவரம் பஸ்கள் நிறுத்தப்படும் பஸ் நிறுத்தம் ஷேர் ஆட்டோக்களின் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
- மூலக்கடை சந்திப்பு பகுதியில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை நகர மக்களின் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. அகலப்படுத்தப்படும் சாலைகள், மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டாலும் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க முடியவில்லை.
காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை நகருக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாலை மார்க்கமாக எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலையே உள்ளது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அனைத்து சாலைகளுமே வாகன நெரிசலில் சிக்கி சவாலாக மாறி இருக்கிறது.
இதேபோல் சாலை விதிகள் மற்றும் சிக்னலை மதிக்காமல் செல்வது, வாகனங்களின் முன் சென்று சிக்னலில் நிறுத்துவது, குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லாமல் மற்ற வழித்தடத்தில் செல்வது என்று அத்துமீறும் வாகன ஓட்டிகளாலும் தினந்தோறும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, சென்னையில் ஆட்டோக்களை எவ்வளவு தான் வரைமுறைப்படுத்தினாலும் டிரைவர்கள் தங்களுக்கு சவாரி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாலையில் குறுக்கே அத்துமீறி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக வடசென்னையில் மூலக்கடை சந்திப்பு அருகே மேம்பாலம் கட்டிய பிறகும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள 4 இடங்களிலும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களால் தினம்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பிக்கும் நிலை அரங்கேறி வருகிறது.
மூலக்கடை சந்திப்பு என்பது மாதவரம் நெடுஞ்சாலை- ஜி.என்.டி.சாலை சந்திக்கும் இடத்தில் 4 வழிகளை இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக திகழ்கிறது. இங்குள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து 4 வழித்தடங்களில் ஆட்டோக்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மூலக்கடை பகுதியில் இருந்து பெரம்பூர் பகுதிக்கு செல்வதற்கு ஒரு வழியும், மாதவரம் ரவுண்டானா செல்வதற்கு மற்றொரு வழியும், மணலி செல்வதற்கு ஒரு வழியும், எருக்கஞ்சேரி செல்வதற்கு ஒரு வழியும் என 4 வழிகளில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக அங்கு பஸ் நிறுத்தங்களும் உள்ளன.
இந்த 4 வழிகளிலும் சாலையோரங்களில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் தினமும் அணிவகுத்து நிற்பதால் பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தை வாகனங்கள் அதிக அளவு பயன்படுத்தாததால் மூலக்கடை சந்திப்பு எப்போதும் போல் போக்குவரத்து நெரிசலுடனே காணப்படுகிறது.

மாதவரம் பஸ்கள் நிறுத்தப்படும் பஸ் நிறுத்தம் ஷேர் ஆட்டோக்களின் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சாலையின் குறுக்கே நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.
எனவே மூலக்கடை சந்திப்பில் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்த அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
மூலக்கடை சந்திப்பு பகுதியில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும். ஆட்டோ டிரைவர்குளுக்கு இடையே சவாரி ஏற்றுவதில் உள்ள போட்டி காரணமாக வரிசையில் நிற்காமல் தங்களது ஆட்டோக்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறுத்தி சவாரி ஏற்றுவதால் தினமும் காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த 4 முனை சந்திப்பில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.
அவசரத்திற்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றன. போக்குவரத்து போலீசார் பலமுறை ஆட்டோ டிரைவர்களை கண்டித்தும் வழக்குகள் பதிவு செய்தாலும் இது நீடித்து வருகிறது.
எனவே மூலக்கடை சந்திப்பிலும், ஆட்டோ டிரைவர்களை வரைமுறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-
வருகிற 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி தைபூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .

மேலும் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படுகின்றன.
இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
- வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை சந்திக்க அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா கூட்டணி'யில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்,
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்று உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை உருவாக்கி உள்ளார்.
அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ. அப்துல்லா எம்.பி. எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதன் தொடக்கமாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை கண்டறிந்து அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி தற்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி உள்ளது? அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கலாமா? அல்லது வேறு நபருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா? என்பது பற்றியும் அறிய முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிலவரம் எவ்வாறு உள்ளது? எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கும் என்பது பற்றியும் எந்தெந்த தொகுதிகளில் பிரச்சனை உள்ளது என்பதையும் முதலில் கண்டறிய முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணைமேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவழைத்து தொகுதி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாளை மதியம் 3 மணி முதல் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை வரவழைத்து கருத்து கேட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
அதன்பிறகு 27-ந்தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கருத்து கேட்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக 5-ந்தேதி வரை கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள்.
அதன் பிறகு 40 தொகுதிகளுக்கும் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற பட்டியலை தி.மு.க. தலைவர், முதலமு.க. ஸ்டாலின் கவனத்துக்கு இந்த குழு கொண்டு செல்லும். அதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் 2 மாத காலமே உள்ளதால் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டில் பேசும்போது பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் போட்டியிட அதிக வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருந்தார்.
இப்போது வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
- 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, கல்வாரை பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தேவர் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றுக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
- ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.
- போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஊட்டி:
ஊட்டி அருகே எல்லநள்ளி, அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக்.
இவர் கேத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் அந்த பகுதியை சேர்ந்த கால்பந்து அணியில் விளையாடி வந்தார்.
கடந்த ஆண்டு ரித்திக் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ரித்திக்கின் உயிரிழப்பு அவரது பெற்றோர் மட்டுமின்றி, அவரது நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கால்பந்து போட்டியில் விளையாடும் போது, ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.
தங்கள் ஆரூயிர் நண்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி நண்பருக்கு உருவசிலை செய்யும் யோசனை தோன்றியுள்ளது.
இதையடுத்து ரித்திக்கின் மார்பளவு உருவசிலையை வடிவமைத்து வாங்கினர். இதனை அவரது தாயிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அதன்படி அட்டுகொல்லை கிராமத்தில் ஏ.டி.கே. கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டி நடந்தது.
இந்த போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
போட்டியை காண வந்த அவர்களை, ரித்திக்கின் நண்பர்கள் வரவேற்றனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் முன்னிலையில், ரித்திக்கின் நண்பர்கள், ரித்திக்கின் தாய் ரெஜினாவிடம் நினைவு பரிசு வழங்கினர்.
அதனை ஜான் திறந்து பார்த்த போது, அதில் ரித்திக்கின் மார்பளவு உருவ சிலை இருந்தது. இதை பார்த்ததும் ரெஜினா மற்றும் ஜான் இருவரும் கண்கலங்கினர். கண் கலங்கிய படியே தனது மகனின் உருவசிலை அளித்த நண்பர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த நண்பருக்காக, சக நண்பர்கள் மார்பளவு சிலையை உருவாக்கி, அவரது பெற்றோரிடம் வழங்கிய இந்த செயலானது அங்கு கூடியிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.
- மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முதல் முறையாக பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.
- கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும்.
- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு பொதுச் செயலாளர் அருணாசலம், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ, கவிஞர் சினேகன், ஸ்ரீதர், முரளி அப்பாஸ், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் சினேகா மோகன் தாஸ், மயில்சாமி, ஜான்சன், மயில்வாகனன், மண்டல செயலாளர்கள் ஸ்ரீபதி, கோபிநாத், அழகர் பிரேம், ரங்கநாதன், அருண், நாகராஜ், வைத்தீஸ்வரன், அனுஷா, மூகாம்பிகை, ராதா, காந்தி கண்ணதாசன், அர்ஜுனர், ராகேஷ், சைப், பிரதீப் குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி அமைத்து நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும். செயல்படாத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டம் தொடர்பாக துணை தலைவர் மவுரியா கூறும்போது, "பாராளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரசார வியூகம் மற்றும் தலைவரின் சுற்றுப் பயணம் ஆகியவை பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.
- சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
- சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
சென்னையை மையமாக கொண்டு செயல்படும் மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கன்வர் லால் குழுமத்துக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று நள்ளிரவு 11 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.
- நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 127-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.
நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை.
வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார்.
இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947-ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
நேதாஜி பிறந்தநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
"பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது.
1946-ம் ஆண்டு பிப்ரவரியில் கடற்படைக் கிளர்ச்சிக்கு வழிவகுத்த சுதந்திரத்துக்கான சீருடை அணிந்த ஆயிரக்கணக்கான இந்திய ஆண்களையும், பெண்களையும் நேதாஜி ஊக்குவித்தார். விமானப்படையில் கிளர்ச்சிகள் மற்றும் ஆங்கிலேயரின் ஆயுதப் படைகளில் உள்ள மற்ற இந்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயத்தை ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தினார். சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு அவர் என்றும் ஊக்க சக்தியாக இருப்பார்.""பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது. 1946-ம் ஆண்டு பிப்ரவரியில்… pic.twitter.com/FxGnEvZx50
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 23, 2024
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. திராவிட மாடலை கவர்னர் ஆர்.என்.ரவி விமர்சித்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதன் பின் சனாதன விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 22, 2024
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம்…
இதற்கிடையே நேற்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
அப்போது கோவிலில் அடக்கு முறை நிலவுவதாக தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்றும், நேதாஜியே நாட்டின் தேசத்தந்தை என்றும் பேசியிருப்பது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி:
தமிழகத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தையொட்டி இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், கடந்த 8 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும், நெல்லை, சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு கடந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகுதி 5 சதவீத உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசிக் கூறுகள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
- திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.
சென்னை:
சென்னையில் இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கைக்கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கிளாஸ்' உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும்.
ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசிக் கூறுகள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்-பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






