என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மைதானத்தின் மொத்த பரப்பளவு 66.80 ஏக்கர் ஆகும்.
    • ஏறுதழுவுதல் அரங்கம் மட்டும் 16 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. 4500 பேர் பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைப்பு.

    தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

    அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவுதல் அரங்கம்- 16 ஏக்கர், அரங்க கட்டிட பரப்பளவு - 77683 சதுர அடி, பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் - 4,500 என பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மைதானத்திற்கு செல்வதற்கு வசதியாக புதிதாக சாலைகள் போடப்பட்டு உள்ளன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்தவுடன் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திறப்பு விழா இன்று நடக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

    500 காளைகள் சீறிப்பாய, 300 வீரர்கள் பிடிக்க உள்ளனர்.

    • இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவானது.
    • தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. இன்று வெளியிட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் பிப்ரவரி 5, கன்னியாகுமரியில் பிப்ரவரி 6, மதுரை பிப்ரவரி 7, தஞ்சாவூர் பிப்ரவரி 8, சேலம் பிப்ரவரி 9, கோயம்புத்தூர் பிப்ரவரி 10, திருப்பூர் பிப்ரவரி 11, ஓசூர் பிப்ரவரி 16, வேலூர் 17, ஆரணி பிப்ரவரி 18, விழுப்புரம் பிப்ரவரி 20 மற்றும் சென்னையில் பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    • தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
    • வரும் பாராளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல் என்றார்.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    தற்போது தி.மு.க. பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருபவர்.

    கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம்.

    பா.ஜ.க.வை வீழ்த்தக் கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல்.

    கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதிக்காலத்தில் ஒரு கோவிலை கட்டி பா.ஜ.க. தலைமை மக்களை திசைதிருப்ப பார்க்கிறது.

    தேர்தலைச் சந்திக்கும் பா.ஜ.க.வுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாக திறந்து சாதித்துவிட்டதாக காட்டுகின்றனர்.

    இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி என தெரிவித்தார்.

    • கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .
    • ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் மதுரை வந்தடைந்தது. இந்த ரதம் வரும் 26 - ஆம் தேதி வரை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வர உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் தினேஷ்வர் பங்கேற்று கூறியதாவது:-

    கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையிலிருந்து நான்கு ஆதியோகி ரதங்களுடன் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது.

    அங்கிருந்து புறப்பட்ட ஒரு ஆதியோகி ரதம் பல்வேறு ஊர்களை கடந்து, 21 ஆம் தேதி இரவு மதுரையை வந்தடைந்தது. இந்த ரதம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், திருமங்கலம், கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோவில், மாட்டுத் தாவணி, பிபி குளம், மாசி வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது.

    கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    இந்த ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    கோவையில் இருந்து புறப்பட்ட நான்கு ரதங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கி.மீ தூரம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மதுரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    சென்னை:

    இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறித்தவ சமயத் தொண்டாற்றுவதற்காக மதுரை வந்து தமது சமயப்பணிக்கு தமிழ் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தமிழ் கற்கத் தொடங்கி தமிழராகவே மாறி, தமிழ் மேதையாக உருவெடுத்தார்.

    "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் , திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தது, "குட்டி தொல்காப்பியம்" என்று புகழப்படும் தொன்னூல் விளக்கத்தை படைத்தது, இயேசு நாதரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காவியமாக உருவாக்கியது, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை படைத்தது, என தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமா முனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றிடும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் 23.26 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    புதிதாக நிறுவப்படவுள்ள 3 சுதந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் திருவுருவச்சிலை, சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவச் சிலை, அண்ணல் காந்தியடிகள் மற்றும் தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அரங்கம் என மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 3 திருவுருவச் சிலைகள் மற்றும் ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, செய்தித்துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., சிறப்புரையாற்ற உள்ளார்.
    • மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29-ந்தேதி திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை பீளமேடு, காளப்பட்டி சாலை "சுகுணா கலையரங்கில்", எனது தலைமையில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., சிறப்புரையாற்றிட, மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி இணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், திருமதி பூரணசங்கீதாசின்னமுத்து, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

    அதுபோது மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • களப்பணியாற்றி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.
    • ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்வான 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு ஒவ்வொரு மாதம் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மேற்கொண்ட சிறப்பு பணிக்காக, ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது.

    திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேசன் கடை பணியாளர்களுக்கு, குடும்ப அட்டைகளுக்கு தலா 50 பைசா என கணக்கிட்டு ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    களப்பணியாற்றி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.

    • ரெயில் நிலையம் வந்ததும், குழந்தையை கொடுத்த பெண்ணை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை.
    • போலீசார் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி தனியார் பஸ் சென்றது.

    அந்த பஸ்சில் இளம்பெண் ஒருவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

    அவரின் அருகில் மற்றொரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் தனது கைக்குழந்தையை, இருக்கையில் இருந்த இளம்பெண்ணிடம் ரெயில் நிலையம் வந்ததும் வாங்கி கொள்வதாகவும், அதுவரை வைத்திருக்குமாறும் கொடுத்தார்.

    அந்த பெண்ணும் வாங்கி வைத்து கொண்டார். ரெயில் நிலையம் வந்ததும், குழந்தையை கொடுத்த பெண்ணை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை.

    இதையடுத்து அந்த பெண், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சென்று சம்பவத்தை கூறி கைக்குழந்தையை ஒப்படைத்தார்.

    போலீசார் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை கொடுத்த சென்ற பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே ராஜன்(வயது32) என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல கமிட்டியினரை சந்தித்தார்.

    அப்போது பஸ்சில் இளம்பெண் விட்டு சென்ற குழந்தை, தன்னுடைய குழந்தை என்றும், அதற்கான உரிய ஆவணங்களையும், போட்டோவையும் காண்பித்தார்.

    அவரை குழந்தைகள் நல கமிட்டியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜன் போலீசாரிடம், எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். நான் தற்போது என்ஜினீயராக உள்ளேன்.

    கல்லூரி படிப்பை ஈரோட்டில் படித்தேன். அப்போது, எனக்கும், திருச்சியை சேர்ந்த திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தோம்.

    எங்களது காதலுக்கு 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பவே நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கோவை சுந்தராபுரத்தில் வசித்து வந்தோம்.

    எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் எனது தந்தை உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    நான் திவ்யாவை திருமணம் செய்ததால் தான் இப்படி நேர்ந்ததாக எனது குடும்பத்தினர் தெரிவித்ததால், எனது மனைவி மனமுடைந்து போனார்.

    அவரை நான் சமாதான படுத்த முயன்றபோது எல்லாம் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நான் திருச்சூருக்கு கட்டுமான பணிகளை பார்வையிட சென்றேன். அங்கிருந்து எனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டேன்.

    அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவரை தேடி வந்தேன்.

    இந்த நிலையில் தான் அவர் பஸ்சில் வந்த பயணியிடம் குழந்தையை கொடுத்து விட்டு சென்ற தகவல் அறிந்து அதிர்ச்சியானேன்.

    உடனே திருச்சூரில் இருந்து புறப்பட்டு, கோவை வந்தேன் தெரிவித்தார்.

    மேலும் எனது மனைவி அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவரை திரும்பி வருமாறு அழைத்துள்ளேன். வராவிட்டாலும் குழந்தையை நானே வளர்ப்பேன் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    ஆனாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படவில்லை. போலீசார் அவரது மனைவி திவ்யாவை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

    அவர் வந்த பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    எதற்காக குழந்தையை பஸ்சில் விட்டு சென்றார்? குடும்ப சண்டை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து 2 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

    விசாரணைக்கு பின்பு 2 பேரையும் குழந்தைகள் நல கமிட்டியினர் முன்பு ஆஜர்படுத்தி, அந்த குழந்தையின் பாதுகாப்புக்கு சரியான நபர் யார் என்று முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
    • சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆலோசனைக்குப்பிறகு கனிமொழி எம்.பி. கூறியதாவது:

    வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும்.

    அதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலை முதல்வரிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த ஊர்களுக்கு பயணம் செய்து எந்தெந்த கருத்துகளை எடுத்துக்கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்போகிறோம் என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.

    எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.

    அமைப்புகளின் கருத்துகளை பெற மின் அஞ்சல், அலைபேசி எண்கள் ஓரிரு நாட்களில் கொடுக்கப்படும்.

    தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை கதாநாயகியாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    ×