search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊருக்குள் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்
    X

    ஊருக்குள் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×